‘நான் கடவுள் இல்லை’ விமர்சனம்

ஸ்டார் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியுள்ள படம். சமுத்திரக்கனி,பருத்திவீரன் சரவணன்,இனியா, எஸ்.ஏ. சந்திரசேகர்,சாக்ஷிஅகர்வால், டயானாஸ்ரீ, யுவன், இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார். ஒளிப்பதிவு மகேஷ் கே தேவ்,இசை சித்தார்த் விபின்,எடிட்டிங் பிரபாகர், பிஜு டான் போஸ்கோ .

சமுத்திரகனியின் தந்தையைத் தலையை வெட்டிக் கொன்ற பருத்திவீரன் சரவணன் சிறையில் இருந்து தப்பிக்கிறார்.தன்னைச் சிறைப்படுத்திய சமுத்திரக்கனி, தீர்ப்பு வழங்கிய நீதிபதி,வழக்காடிய வழக்கறிஞர் அனைவரையும் போட்டுத் தள்ள புறப்படுகிறார் சரவணன் .இப்படிப் பழிவாங்கும் பட்டியலுடன் கொலை வெறிகொண்டு தேடித் திரியும் சரவணனைத் தேடி சிபிசிஐடி உதவி கமிஷனர் ஆன சமுத்திரக்கனி தலைமையிலான போலீஸ் குழு புறப்படுகிறது. இப்படிக் கீரியும் பாம்புமான சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் நான் கடவுள் இல்லை படத்தின் கதை செல்லும் பாதை.

இன்னொரு பக்கம் கடவுளுக்கு என்ற முகவரி இடப்பட்டு எழுதப்படும் கடிதங்களுக்கு ரகசியமாக உதவி செய்து வருகிறார் எஸ் ஏ சந்திரசேகர்.இப்படித் தானே கடவுள் ஸ்தானத்தில் இருந்து உதவுகிற அவருக்கு சமுத்திரக்கனி மகள் ரவுடி சரவணன் பற்றி புகார்க் கடிதம் ஒன்றை அனுப்புகிறாள்.அதன் பிறகு
இணை கதையாக பயணிக்கும் அந்தக் கதை பிரதான கதையுடன் வந்து சேர்கிறது. முடிவு என்ன என்பதுதான் நான் கடவுள் இல்லை படம்.

இப்படத்தில் சிபிசிஐடி துணை கமிஷனராக சமுத்திரக்கனி நடித்துள்ளார் கடமை ஒரு பக்கம், பாசம் ஒரு பக்கம் ,குடும்பத்தை சமன் செய்ய தவிப்பு ஒரு புறம் என்று பல வகையான நடிப்புகளை வெளிப்படுத்த அவருக்கு நல்ல வாய்ப்பு .அதைச் சரியான முறையில் பயன்படுத்தியுள்ளார்.

சந்திரக்கனின் மனைவியாக வரும் இனியா ஆபத்து நிறைந்த காவல்துறை கணவனை அடைந்த தவிப்பும் குடும்பத்திற்கான அச்சுறுத்தல் வரும்போது பதற்றமும் என்று நடிப்பை வழங்கி அந்தப் பாத்திரத்திற்குப பொருந்தி உள்ளார்.

ஜோதிலிங்கம் என்கிற கதாபாத்திரத்தில் வரும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடவுளுக்கு எழுதப்படும் கடிதங்களுக்கு உதவுகிறார். நான் கடவுள் இல்லை மனிதன் தான் என்றும் கூறுகிறார்.சமுத்திரக்கனியின் குழுவில் இடம் பெற்றுள்ள சாக்ஷி அகர்வால் துணிச்சல் மிக்க பெண்ணாக வருகிறார். சண்டைக்காட்சிகளில் துவம்சம் செய்கிறார்.அவருக்கு பெரியதொரு பாத்திரமாற்றம்.

வீச்சருவா வீரப்பனாக வரும் பருத்திவீரன் சரவணன் படம் பார்க்கும் அனைவருக்கும் வயிற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறார்.சமுத்திரக்கனி மகளாக வரும் டயானா ஸ்ரீ குறை சொல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.

போலீஸ் ,வில்லன் ஆடுபுலி ஆட்டம் விளையாட்டை கதையாக பின்னி இருக்கிற எஸ்ஏ சந்திரசேகர் தற்காலத்து விஞ்ஞான சாத்தியங்களைப் புறந்தள்ளிவிட்டு பழைய காலப் பாணியில் கதை சொல்லி இருக்கிறார். அதுதான் பெரிய உறுத்தலாக இருக்கிறது.

படத்தில் போலீஸ் குறித்தும் போலீஸ் துறை அவலங்கள் குறித்தும் அதில் புரையோடிப் போய் உள்ள துரோகங்கள் குறித்தும் வருகின்ற வசனங்கள் மட்டுமல்ல வில்லன் பார்வையில் காவல்துறை பற்றியும் கூறியுள்ள வசனங்களும் பொறி பறப்பவை.அதில் இன்னும் சட்டம் ஒரு இருட்டறை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிகிறார். ஆனால் பட உருவாக்கத்தில் அதே பழைய பாணியைத் தொடர்வதால் சமகாலத்துடன் இணைந்து இருக்காமல் படம் விலகி நிற்கிறது.