’நந்திவர்மன்’ திரைப்பட விமர்சனம்
சுரேஷ் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர் நடித்து உள்ளனர். இயக்கம் ஜி.வி. பெருமாள் முருகன்.
தொன்மை மிகு பல்லவ மன்னர்களில் ஒருவன் நந்திவர்மன்.அவன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவன்.அவன் செஞ்சிப் பகுதியில் கட்டிய மாபெரும் சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்து கிடக்கிறது. அக் கோவிலில் புதையல் இருப்பது தொல்லியல் துறைக்குத் தெரிய வருகிறது. எனவே தொல்லியல் துறை பேராசிரியர் நிழல்கள் ரவி, தன் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வுக்கு அங்கே அனுப்புகிறார். ஆனால், அந்தக் கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் மனித யூகத்திற்கு எட்டாத சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதனால் மக்கள் அவ்விடம் செல்வதைத் தவிர்க்கிறார்கள். ஆய்வு நடத்தவும் தடையாக நிற்கிறார்கள்.
ஒரு வழியாக ஆய்வின போது, அவ்வூர் இளைஞர் ஒருவர் கொல்லப்படுகிறார்.சென்ற மாணவரும் கொலையாகிறார். இந்தக் கொலைகள் பற்றிய விசாரணை செய்யும்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாயகன் சுரேஷ் ரவி, அந்த ஊரில் நடக்கும் மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த மர்மத்தின் பின்னணி என்ன? என்பதைச் சொல்வது தான் ‘நந்திவர்மன்’ படத்தின் மீதிக்கதை.
பெரிய பட்ஜெட் செலவில் சொல்லப்பட வேண்டிய ஒரு கதையை இப்படி ஒரு சிக்கன பட்ஜெட்டில் எடுத்ததே வியப்பாக உள்ளது.
பல அரிய தகவல்களுடன், கதையை மிக நேர்த்தியாகக் கொண்டு சென்று இரண்டு மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார்
அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன்.
நாயகன் சுரேஷ் ரவிக்கு இது ஒரு நல்ல தேர்வு.போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் அவர் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து நன்றாகவும் நடித்திருக்கிறார்.தன்னை முழுமையான நாயகன் என்று நிரூபித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ்,சில முக பாவனைகள் மூலமே தன்னை வெளிப்படுத்தி விடுகிறார்.
இரண்டாவது நாயகன் போல் வலம் வரும் போஸ் வெங்கட்டின் அனுபவ நடிப்பும், அவரது கதாபாத்திர வடிவமைப்பும் திரைக்கதைக்குப் பெரிய பலம் .நிழல்கள் ரவி , கஜராஜ் நடிப்பில் தெரிவது அனுபவ முத்திரை.
மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி என படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்கள் சிறிய வேடங்களில் நடித்தாலும் நிறைவு தந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சேயோன் முத்து பழங்காலத்து கோவில்களையும், மலைப்பகுதிகளையும் காட்சிப்படுத்திய விதம் இதம்.
ஜெரால்டு ஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் நலம். பின்னணி இசையும் ஓகே.
கலை இயக்குநர் முனிகிருஷ்ணன் பழங்காலத்து கோவிலை வடிவமைத்த விதம் பாராட்டும்படி உள்ளது.
அறிமுக இயக்குநர் பெருமாள் வரதன், ஆழமான கதைக்கு அழகான காட்சி வடிவம் கொடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘நந்திவர்மன்’ நிச்சயம் ரசிகர்களைக் கவரும், வியப்பில் ஆழ்த்தும்.