‘மூத்தகுடி’விமர்சனம்

தருண் கோபி, பிரகாஷ் சந்திரா, கே ஆர் விஜயா,அன்விஷா ,ஆர் சுந்தர்ராஜன், ராஜ்கபூர், யார் கண்ணன், சிங்கம்புலி நடித்துள்ளனர்.இயக்கம்  ரவி பார்கவன்.

மூத்தகுடி என்ற ஊரைச் சேர்ந்த பெரிய குடும்பத்துப் பெண்மணி கே.ஆர்.விஜயா மீது அந்த ஊர்க்காரர்கள் பெரிய மதிப்பு வைத்துள்ளனர். அவர் சொல்வதை யாரும் தட்டுவதில்லை. கே.ஆர்.விஜயாவின் குடும்பத்தாருடன், ஊர் மக்கள் சிலர் சேர்ந்து குலசாமி கோவிலில் பூஜை நடத்தச் செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து மது அருந்தச் செல்கிறார்கள். அங்கு ஏற்படும் பிரச்சினையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள். கே.ஆர்.விஜயா, அவருடைய தம்பி யார் கண்ணன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் மட்டும் தப்பிக்கிறார்கள்.

இப்படி ஒரு சோகமான சம்பவத்திற்குப் பிறகு கோபமடைந்த கே. ஆர். விஜயா இதற்கெல்லாம் காரணமான மதுவை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார்.

தனது ஊரில் யாரும் மது அருந்தக்கூடாது விற்பனை செய்யக்கூடாது அப்படி மீறினால் அவர்கள் மீது ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சொல்கிறார். அதன்படி
மூத்தகுடி மக்கள் மது குடிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள்.அந்த ஊரில் சாராயம் விற்க விடாமலும் தடுத்து வருகிறார்கள்.இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ்கபூர், அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அங்கே சாராய ஆலை கட்ட முயல்கிறார்.

இந்த நிலையில், கே.ஆர்.விஜயாவின் பேரக்குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். அதில், முறைப்பெண் நாயகி அன்விஷாவை, தருண் கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பெரியவர்கள் பேசி வந்ததால், தருண் கோபி அன்விஷாவை தீவிரமாகக் காதலித்து வருகிறார். ஆனால், அன்விஷாவுக்கு தருண் கோபியின் தம்பி பிரகாஷ் சந்திரா மீது காதல் . இந்த காதல் பிரச்சினை சிக்கல் ஆகிறது. இது பெரிய குடும்பத்தின் கௌரவத்திற்கு சவால் ஆகிறது.முடிவு என்ன என்பதுதான் மூத்தகுடி படத்தின் கதை.

மதுவை ஒழிக்க வேண்டும் மதுக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.நோக்கம் நன்றாக இருந்தால் போதுமா? திரை மொழியைப் புரிந்து கொண்டு சரியாக எடுத்துச் சொல்ல வேண்டாமா? சினிமாவின் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் மிகவும் சிறு பிள்ளைத்தனமாக நாடகத்தனமான காட்சிகள் அமைத்து படத்தை முடித்துள்ளார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் தருண் கோபி,மிகை நடிப்பால் சோதிக்கிறார்.தருண் கோபியின் தம்பியாக நடித்திருக்கும் பிரகாஷ் சந்திரா நடிப்பில் எந்த விதமான முக மாற்றங்களையும் காட்டாமல் ஏமாற்றத்தை அளிக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் அன்விஷாவின் நடிப்பும் அதேபோல் அரைகுறை பாவனைகளாகவே இருக்கின்றன.

கே.ஆர்.விஜயாவின் அனுபவமான நடிப்பு சற்று ஆறுதல் அளித்தாலும், ஆர்.சுந்தரராஜன் – சிங்கம்புலி தோன்றும் நகைச்சுவை என்று நினைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் 100% எரிச்சல் ரகம்.யார் கண்ணன் பழைய சோறு வேடம் மிகை.. ராஜ்கபூர் வழக்கமான வேலையைச் செய்திருக்கிறார்.

கந்தா ரவிசந்திரனின் ஒளிப்பதிவும், ஜே.ஆர்.முருகானந்தத்தின் இசையும் சிக்கனமான செலவில் சிக்கனமான வேலைகள்.

வணிக சினிமாவின் இலக்கணத்தில் மதுக் கொடுமை, காதல் என்று கலந்து சொல்ல வந்த இயக்குநர் ரவி பார்கவன் சினிமாவின் போக்கைப் புரியாமல் இந்த படத்தை உருவாக்கி சோர்வூட்டி இருக்கிறார்.