நான்10 வயது பையனாக இருந்த போதே சின்ன வயதிருந்தே இந்தப் பயிற்சி எனக்கு உண்டு. அந்தக் காலத்து ‘பராசக்தி’ ,’மனோகரா’, ‘இல்லற ஜோதி’ போன்ற படங்களின் வசனங்கள் சிறுசிறு புத்தகங்களாக வரும். அப்போதே எட்டணா கொடுத்து வாங்கி முழுதாகப் படித்து கூடப்படிக்கும் பையன்களிடம் 2 மணி நேரம் சொல்லியிருக்கிறேன். அந்தப் பயிற்சி எனக்கு அப்போதிலிருந்தே உண்டு.
இந்த பேருரை முயற்சி எப்படி உருவானது?
நான் சென்னைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓவியம் ,பயிற்சி என்று 7 ஆண்டுகள் ஓடிவிட்டன.நடிகனாக சினிமா, நாடகம், டிவி என்று 40 ஆண்டுகள் போய்விட்டன. இது போதும் என்று முடிவெடுத்த பிறகு மேடைப் பேச்சு பக்கம் தாவினேன். நான் பெரிய பேச்சாளன் இல்லை. அடுக்கு மொழி கவர்ச்சி நடை என்றெல்லாம் என்னால் பேசமுடியாது.
அப்போதுதான் இப்படி தலைப்பு வைத்து உரையாற்றினேன். இப்படி இதுவரை 16 உரைகள் ஆற்றி விட்டேன் அவற்றில் 15 உரைகள் ஒளிபரப்பாகி விட்டன. அந்த உரைகளில் கம்பராமாயணம். மகாபாரதம் உரைகள் வேறுபட்ட அனுபவங்கள்.
கம்பராமாயண அனுபவம் எப்படி?
கம்பராமாயணத்தில் வால்மீகி ராமாயணம்வேறு ; கம்பராமாயணம்வேறு .கம்பராமாயணம் உலகம் முழுக்கப் பாராட்டப் படுவது. இதைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ விதமாக பேசியிருக்கிறார்கள். ஒரு முறை என்னைக் கம்பன் கழகத்தினர் .கம்பராமாயணம் பற்றிப் பேசக் கேட்ட போது முதலில் எனக்கு மிரட்சியாகத்தான் இருந்தது. பல நூல்களைப் படித்தேன். உரைகளைக் கேட்டேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்று ராமாயண உரையாற்றுபவர்களிடம் பேசினேன். எனக்கு ஒன்று புலப்பட்டது. பலரும் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள். ஆனால் கம்பனின் பாடலைக் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்பது புரிந்தது. நாம் கம்பனின் பாடலைஅதிகமாகப் பயன் படுத்துவோமே என்று முடிவெடுத்து முதலில் 9 பாடல்களில் தொடங்கி பின்னர் 50, பிறகு 100 பாடல்கள் என்று முடிவுசெய்து செயலில் இறங்கினேன். கம்ப ராமாயணத்தில் 10,520 பாடல்கள்இருக்கின்றன. ஒவ்வொன்றையும் படிக்க ஆரம்பித்தாலோ புரியாது. அவ்வளவு கடின நடையாக இருந்தது. அவற்றில் முழுக்கதையும் வருமாறு 100 பாடல் களைத் தேர்வு செய்து கோர்த்து தயாரித்துப் பேசினேன்.இதன் சிடியே ஒருலட்சம் தாண்டி விற்றது.பலரும் அதைப் பாராட்டவே பிறகு இந்த மகாபாரத முயற்சியில் இறங்கினேன்.பலரும் இதைப்பெரிய விஷயமாகப் பாராட்டும் போது நான் நினைப்பது இதுதான் இது சாதனை ஒன்றுமில்லை. நான் முழு மனிதன் இல்லை என்னிடமும் குறைகள் உள்ளன.
‘மகாபாரதம்’ உரையின் முன் தயாரிப்பு அனுபவம் எப்படி இருந்தது?
‘கம்பராமாயணம்’ இந்தியப் பெருங்கடல் போன்றது என்றால் ‘மகாபாரதம்’ பசிபிக் பெருங்கடல் போன்றது. கம்பராமாயணத்தை இரண்டே வரியில்கூட சொல்ல முடியும் மகாபாரதத்தை அப்படிச் சொல்ல முடியாது.அதில் ஏராளமான கதாபாத்திரங்கள், ஏராளமான கிளைக்கதைகள் உண்டு. மகாபாரதத்துக்கு தமிழில் உள்ள நூல்கள் பெரியவை. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து, வில்லிப்புத்தூரார் எழுதியது, சோ எழுதிய மகாபாராதம் பேசுகிறது. போன்றவை அளவில் பெரியவை.
அந்த நூல்கள் பல ஆயிரம் பக்கங்களில் இருந்தன.மகாபாரதம்’பற்றி உரை நிகழ்த்தி வருபவர் பேராசிரியர் இளம்பிறை மணிமாறன். அவர் மணிக்கணக்கில் பேசக் கூடியவர் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆற்றல் கொண்டவர். அவர் பேசிய 10–12 நிகழ்ச்சிகளில் சிடிகளைக் கேட்டேன். பி.ஆர்.சோப்ராவின் ‘மகாபாரதம்’ டிவி தொடர் இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானவை. பலஅத்தியாயங்கள் கொண்டவை. சுமார் 70 மணிநேர ம் ஓடும் கேசட்டுகளை வாங்கிக் குறிப்பெடுத்தேன் .இந்த முயற்சியில் இளம்பிறை மணிமாறனை வழிகாட்டியாகக் கொண்டேன். இது அப்படிக் குறிப்பெடுத்து தயாரிக்கப்பட்ட உரை .இதை பாமரனுக்கும் புரியும் வகையில்தான் பேசினேன்.
பேசும் முன் ஒத்திகை மாதிரி யாரிடமாவது பேசிக் காட்டினீர்களா?
நான் நடைப் பயிற்சி போகும் போது இதைப் பலரிடம் பேசிக்காட்ட முயன்றிருக்கிறேன். பாதி பாதி பேசிக் காட்டியிருக்கிறேன். நான் ஆரம்பித்ததும் பலரை தலைதெறிக்க ஓட விட்டிருக்கிறேன். இருந்தாலும் சில பேராசிரியர்கள் உள்பட சிலரிடம் முழுதாகப் பேசிக் காட்டியுள்ளேன். .
கடைசிவரை சீராகத் தங்குதடையின்றி பேசிய நீங்கள், கடைசியில் மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியது ஏன்?
பேசி முடிக்கப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. முழுக்கிணறு தாண்டி முடிக்கப் போகிறோம். என்கிற திருப்தியில் வெளிப்பட்ட கண்ணீர் அது.
கற்றறிந்தோர் சபையில் உரையாற்றும் போது பயம்,பதற்றம் வரவில்லையா?
எனக்கு முன்னே உட்கார்ந்திருந்தவர்கள் தமிழருவி மணியன்,பிரபஞ்சன் போன்றஅதிகம் படித்தவர்கள். அப்போது பதற்றமாகத்தான் இருந்தது. ஆனால் பயந்தால் வேலைக்கு ஆகாது இவர்கள் முன் பேசவேண்டும் என்றால் எதிரே இருப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் என்கிற எண்ணம் வர வேண்டும். அந்த நம்பிக்கையோடுதான் பேசினேன்.
சிறிதும் இடைவெளி விடாமல் பேச முடிவு செய்தது ஏன்?
இடைவெளி விட்டால் கவனம் சிதறிவிடும் என்பது முதல் காரணம் அந்தப் பேச்சு ஒரு வேகமான ஓட்டம் போன்றது. ஓட்டப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது ஓய்வு எடுக்க முடியுமா? சிங்கம் வேட்டைக்கு துரத்தும் போது ஒரு வினாடி கூட ஓய்வு எடுக்க நிற்க முடியுமா? என்னுடன் பயணம் செய்யும் பார்வையாளர்களை ஒரு நிமிடம் இடைவெளி விடாமல் இடையில் விடாமல் கூட்டிக் கொண்டு ஓடினேன். பேச்சின் இடையில் எச்சில் விழுங்கினால்கூட வயதாகி விட்டது சோர்வாகி விட்டான் என்பார்கள். தொண்டை வறண்டு தண்ணீர் குடித்தால் கூட பார்த்தாயா தடுமாறுகிறான் என்பார்கள் எனவேதான் அதற்கெல்லாம் நான் இடம் கொடுக்கவில்லை.
தொடர்ந்து ‘சிலப்பதிகாரம்’ பற்றிப் பேசுவீர்களா?‘கம்ப ராமாயணம்,’மகாபாரதம்’இரண்டும் புகழ் பெற்ற இதிகாசங்கள் எனவே அவை பற்றிப் பேசினேன் ‘சிலப்பதிகாரம்; பற்றி எனக்குப் பல கேள்விகள் உண்டு. ‘ ராமாயணம்’ ,’மகாபாரதம்’போல அது நீதி சொல்லவில்லை என்கிற அபிப்பிராயம் உண்டு.மதுரை மன்னனே உயிர் விட்ட பிறகு கண்ணகி மதுரையை எரித்தது ஏன். இதுபோன்ற பல கேள்விகள் உண்டு.‘இயேசு காவியம்’ பற்றி இப்படி உரை நிகழ்த்துவீர்களா?நான் ‘ராமாயணம்,’மகாபாரதம்’ இரண்டும் காவியங்கள் என்பதால் பேசினேன். அவற்றை மதம் சார்ந்த ஒன்றாக நினைக்க வில்லை. தொடர்ந்து எல்லா நூல்கள் பற்றியும் பேசவேண்டும் என்று நான் நினைக்க வில்லை. அடுத்து திருக்குறள் பற்றி மட்டும் பேசும் திட்டம் உள்ளது அதற்கு நீண்ட காலம் ஆகும்.
‘கம்பராமாயணம்’ போன்று ‘மகாபாரதம்’ முயற்சியில் வாசிப்பு இன்பம் கிடைத்ததா?
‘கம்ப ராமாயணம்’ வாசித்த போது பொருள் புரிந்த போது வாசிப்பு இன்பம் கிடைத்தது. காரணம் அதில் இருந்த தமிழ். உச்சத்தில் இருந்த 9 ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுதப்பட்டது. எனவே அதில் மொழி இன்பம் இருந்தது. மகாபாரத முயற்சி முற்றிலும் வேறுபட்டது. அதற்காகப் பல நூல்களை படிக்க வேண்டியிருந்தது. எனவே இம்முயற்சியில் வேறு வகையில்தான் அணுகிக் குறிப்பு எடுக்க வேண்டி இருந்தது.
உங்களைப்போல நினைவாற்றல் பெருக என்ன செய்ய வேண்டும்?
நாடக உலகத்திலிருந்து வந்தவர்களுக்கு இயல்பாகவே இப்பயிற்சி வந்து விடும்.விருப்பத்துடன் படிக்க வேண்டும் இன்று அவசர உலகமாகி விட்டது. எதையும் படிக்கப் பொறுமை இல்லை விருப்பம் இருந்தால் படிக்கலாம். நினைவாற்றலைப் பெருக்கவும் முடியும்.
இவ்வாறு நடிகர் சிவகுமார் பதிலளித்தார்.