ஷாரிக் ஹாசன், ஹரிதா , மோனிகா ரமேஷ், காவியா அபிரா , திவாகர் குமார், நிதின் ஆதித்யா ,ஆனந்த், அரவிந்த் செல்வா, பாலா நடித்துள்ளனர்.சாய் ரோஷன் கே.ஆர் இயக்கியுள்ளார்.இசை கெவின் என். தயாரிப்பு கே. ஆர். நவீன் குமார்.
நாயகன் ஷாரிக் ஹாசன், அவரது காதலி ஹரிதா மற்றும் நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள்.அங்கே கருத்து வேறுபாடுகள் முளைத்து மோதல்கள் வெடிக்கின்றன.நாயகன் ஷாரிக் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார் .போலீசில் புகார் கொடுக்கிறார் ஒரு நண்பர் .போலீஸ் வந்து விசாரிக்கிறது. பிறகு புகார் கொடுத்தவரும் காணாமல் போய்விடுகிறார்.மாயமாக காணாமல் போய்விட்ட இரண்டு பேர் பற்றி போலீஸ் விசாரிக்கும் போது உடன் இருந்தவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு கோணத்தில் கதை சொல்கிறார்கள்.இறுதியில் காணாமல் போனவர்கள் கிடைத்தார்களா? இல்லையா?அந்த மர்மத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அதை போலீஸ் கண்டுபிடித்ததா என்பதுதான் ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் கதை செல்லும் பாதை.
எதிர் மறை நிழல் படிந்த நாயகனாக ஷாரிக் வருகிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஹரிதா அளவான நடிப்பை வழங்கி உள்ளார்.
நண்பர்களாக நடித்திருக்கும் மோனிகா ரமேஷ், காவ்யா அமிரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வா, கான்ஸ்டபிளாக வரும் பாலா என படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் கொடுத்த வேலையைக் குறை சொல்ல முடியாமல் செய்திருக்கிறார்கள்.
ஒரே சம்பவத்தை வெவ்வேறு கோணங்களில் விவரிப்பது புதிய உத்தியாகத் தெரிகிறது .ஆனால் அதுவே ஒரு கட்டத்தில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் காட்சி போல் வந்து சலிப்பூட்டவும் செய்கிறது.
காணாமல் போன ஷாரிக் ஹாசனின் நிலை என்ன? என்ற கேள்வியும், நண்பர்களில் யார் குற்றவாளி? என்ற கேள்வியும் படத்தை விறுவிறுப்பாகக் கொண்டு செல்கிறது.இடையில் வரும் சைக்கோ கொலையாளி காட்சிகள் வேகத்தடை ஆகி விடுகிறது.
விஷாலின் ஒளிப்பதிவும், கெவினின் இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்துள்ளன.
படத்தொகுப்பாளர் கோவிந்த், கையில் கத்திரியை எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில், ‘நேற்று இந்த நேரம்’ புதிய திரைக்கதை உத்திக்காகக் கவனிக்கப்படலாம் .