’வெப்பம் குளிர் மழை’ விமர்சனம்

எம் எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் பானு, ரமா, மாஸ்டர் கார்த்திகேயன் தேவ் அபிபுல்லா,விஜயலட்சுமி நடித்துள்ளனர். பாஸ்கல் வேதமுத்து இயக்கியுள்ளார்.இசை சங்கர்.தயாரிப்பு திரவ்.

ஊரில் உள்ள மாடுகளுக்கு எல்லாம் சினை ஊசி போடும் வேலை செய்கிறார் நாயகன் திரவ். நாயகி இஸ்மத் பானு.அவர்களுக்குத்திருமணமாகி ஐந்தாண்டுகளாக குழந்தை இல்லை.இது ஒரு குறையாக மற்றவர்களால் சுட்டிக்காட்டப்பட்டு அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியை உண்டாக்குகிறார்கள்.

பேசிப் பேசி சமூக அழுத்தம் அவர்களை தொந்தரவு செய்கிறது.ஒரு கட்டத்தில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள்.இருவரையும் பரிசோதித்ததில் திரவுக்கு பிரச்சினை இருப்பது தெரிகிறது.ஆனால், இதைக் கணவரிடம் சொல்லாமல் மறைக்கிறார் இஸ்மத் பானு.இந்தக் குழந்தையின்மை பிரச்சினையால் கணவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறார் மனைவி .குடும்பத்தில் சுமுகம் நிலவ அவர் ஒரு முடிவு எடுக்கிறார்.அந்த முடிவால் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியில் திளைக்கிறது.சில ஆண்டுகளுக்குப் பின் அந்த குழந்தை பிரச்சினையாக வடிவெடுக்கிறது .அவர்களுக்கும் பிரச்சினை வருகிறது.அது என்ன பிரச்சினை என்பது மீதிக் கதை.

தற்காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கலாக இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை மையமாக கொண்டு இந்தத் திரைக்கதை உருவாகியுள்ளது.குழந்தையின்மைக்கு அறிவியல் பூர்வமான தீர்வு என்ன? பலரும் ஏற்கத் தயங்கினாலும் ஒரு முடிவு உள்ளது என்ப தை அறிவுரையாகச் சொல்வதே ‘வெப்பம் குளிர் மழை’.

நாயகனாக நடித்திருக்கும் திரவ், முதல் படத்திலேயே மிக அழுத்தமான பாத்திரத்தில் பொருத்தமான நடிப்புத் திறமையைக் காட்டியுள்ளார்.

காதல் கலக்கம் துன்பம் துயரம் தவிப்பு என மாறுபட்ட பல்வேறு நடிப்புத் தருணங்களைப் பயன்படுத்தித் திறமை காட்டியுள்ளார். அவர்
அறிமுக நாயகன் என்பதை நம்பவே முடியவில்லை.இதற்கு முன்பு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் தோன்றி நடித்திருக்கும் இஸ்மத் பானு, முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.எதார்த்தமான நடிப்பால் பார்ப்பவர் மனதில் பதிக்கிறார் . அசல்
கிராமத்துப் பெண்ணாகவே வலம் வருகிறார்.

திண்ணையில் உட்கார்ந்தபடி கிண்டல் கேலி செய்து வரும் கிராமத்து தாத்தாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், பழைய தலைமுறையின் ஆரோக்கியம் பற்றிய கடந்த கால ஏக்கத்தைக் கொண்டு வருகிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, நாயகன், நாயகிக்கு இணையாக நடிப்பில் கவனம் பெறுகிறார். மாஸ்டர் கார்த்திகேயன், தேவ் ஹபிபுல்லா, விஜயலட்சுமி, கருப்பு என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

நடிப்புக் கலைஞர்களைத் தவிர மண்ணில் மைந்தர்கள் நிறைய பேர் படத்தில் இருக்கிறார்கள். அவர்கள் எதார்த்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவு,நம்மை கிராமத்துக்குள் அழைத்துச் சென்று வாழ வைக்கிறது.சங்கர் இசையில், திரவின் வரிகளில் அனைத்துப் பாடல்களிலும் மண்வாசனை வீசுகிறது.

நாயகனாக நடித்து, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கும் திரவ் தான் படத்தொகுப்பும் செய்திருக்கிறார்.

தயாரிப்பாளரை எடிட்டர் ஆக இருந்தால் காட்சிகளின் நீளத்தை குறைக்க மனம் வராது. அது இந்தப் படத்தில் நிகழ்ந்துள்ளது.

சில காட்சிகள் உணர்வு பூர்வமாக இருந்தாலும் கூட அதன் நீளம் குறைக்கப்பட்டிருக்கலாம்.

இந்தப் படத்தில் குழந்தையின்மை பிரச்சினையை மையம் கொண்டு கதை பின்னப்பட்டிருப்பது நன்று.அதன் ஆழ அகலத்தையும் படம் அலசுகிறது.
குழந்தையின்மையைப் பெரிது படுத்தக் கூடாது. மகப்பேறு வாய்ப்பு வருகிற போது வரும் .அதைச் சமூக அழுத்தமாக மாற்றக்கூடாது என்று கூறியுள்ளார்
இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

எளிமையான கிராமத்து பின்னணியில், சமூகத்திற்கு தேவையான கருத்தை எந்தவித நெருடல் இல்லாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் பாஸ்கல் வேதமுத்து.

மொத்தத்தில், இந்த ‘வெப்பம் குளிர் மழை’ உயிரோட்டம் உள்ள படைப்பு.