பணம் இல்லாதவனுங்க ஏன் படமெடுக்க வர்றானுங்க?-என்று ஒரு படவிழாவில் தயாரிப்பாளர்களை பதறவைத்தார் பவர்ஸ்டார்.
ராயல் ஸ்கிரின்ஸ் சார்பில் எஸ்.பரமராஜ் தயாரிக்கும் படம் ‘தொப்பி’. இயக்குநர் யுரேகா ‘மதுரைசம்பவம்’ , ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள 3 வது படம். ஒளிப்பதிவு சுகுமார். இசை அமெரிக்க வாழ் தமிழர் ராம்பிரசாத் சுந்தர்.
நாயகனாக முரளிராம், நாயகி யாக ரக்ஷாராஜ் நடித்துள்ளனர். நிமோ புரொடக்ஷன்ஸ் சார்பில் பாலு .கே வெளியிடுகிறார். .
இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பேசிய பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன்”இந்த தொப்பி படத்தின் இயக்குநர் யுரேகா என் நண்பர். தொப்பி என்றதும் எனக்கு பல தொப்பிகள் ஞாபகம் வருகிறது. நான் பலபேருக்கு தொப்பி வைத்திருக்கிறேன். எனக்கே ஒரு தயாரிப்பாளர் தொப்பி வைத்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் என்று கொடைக்கானல் அழைத்தார்கள். சம்பளம் நாள் கணக்கா மணிக்கணக்கா என்றேன். நாள் கணக்கு ஏழே நாள் தான் என்றார்கள். கொடைக்கானல் போய் குளிரில் ரோப் கயிறு கட்டி எல்லாம் எடுத்தார்கள். சம்பளம் கேட்டேன் செக் கொடுத்தார்கள். திரும்பி வந்து விட்டது. பணமாகக் கேட்டேன் அடுத்த காட்சி ஹெலிஹாப்டரில் வந்து இறங்குவது போல என்றார்கள் எனக்கு அதெல்லாம் வேண்டாம் பணம் வேனும் என்றேன். உங்களிடம் இல்லாத பணமா என்கிறார்கள்.
பாருங்க நான் எத்தனை பேருக்கு ரிடன் செக் கொடுத்திருக்கேன். எனக்கே ரிடன் செக் கொடுக்கிறார்கள். நான் பல செக்கை ரிடர்ன் பண்ணியிருக்கேன். இப்ப எனக்கே அது திரும்பி வருது .
நான் எத்தனைபேரை ஏமாற்றியிருக்கேன் என்னையே ஏமாற்றப் பார்க்கிறாங்க திருந்தலாம்னா கூட விட மாட்டேங்கிறாங்க. கஷ்டப்பட்டு உழைச்சுட்டு காசு கேட்டா ஏமாத்துறானுங்க. பழசை எல்லாம் விட்டுட்டு திருந்தலாம்னா விட மாட்டானுங்க போலிருக்கு.உழைச்சுட்டு காசு கொடுன்னு கேட்டா ஏமாத்துறானுங்க .ஒரு சொடக்கு போடுறதுக்குள்ள ஒரு கோடி ரூபாய் ஏமாத்திடுவேன். என்கிட்டேயா?
பணமில்லாதவனுங்க ஏன் படமெடுக்க வர்றானுங்க. வேற வேலை பார்க்க போக வேண்டியதுதானே? இப்பல்லாம் படமெடுக்க வர்றவன் எம் எல் ஏ.பையன். எம்பி பையன்னு பீலா விட்டு பில்டப் கொடுத்திட்டு வர்றான். ஏன் இந்த பில்டப்..?தயாரிப்பாளர் சங்கத்துல ஒண்ணு செய்யுங்க. புதுசு புதுசா படமெடுக்க வர்றவங்களை ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செஞ்சாதான் படம் எடுக்கலாம்னு கொண்டு வாங்க.புதுசா வர்ற புரொடியூசர் யாரு அவன்கிட்டே கையில் எவ்வளவு பணம் இருக்கு? எவ்வளவு கடன் வாங்கப் போறார் எவ்வளவு ஆட்டயப் போடப் பேறார்னு கேட்டு வையுங்க இப்படி நடிக்க வச்சிட்டு ஏமாத்துறவனுங்களை விடக் கூடாது..உழைக்கிறவனுக்கு தொப்பி வைக்காதீங்க நாங்க தொப்பி வைக்க நினைச்சா நீங்க தாங்க மாட்டீங்க.” என்றார்.
அவர் பேசியதைக் கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவாவும் துணைத்தலைவர் பி.எல். தேனப்பனும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினார்கள்.
டி.சிவா. “பவர் ஸ்டார் இப்படி பேசியது வருந்தத் தக்கது. அவர் இப்படி பேசுவது இதுவே கடைசி மேடையாக இருக்கட்டும் ”என்றார். பி.எல். தேனப்பனும் ”சாதாரண சீனிவாசன் பவர்ஸ்டார் ஆனது யாரால் இவரை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர்களால்தானே?” என்றார்.