பத்திரிகை ஊடக சந்திப்புகள் பலரகம். சில சுவாரஸ்யமானவை. சில சலிப்பூட்டுபவை. சில உபயோக தகவல் ரீதியானவை. ஆனால் பெரும்பாலான சந்திப்புகள் அதன் உள்ளடக்கம் தாண்டி புற வெளியில் சென்று ,நின்று சந்திப்பின் நோக்கத்தை கேலி செய்வனவாக மாற்றப்பட்டு விடும்.அதற்குக் காரணம் சந்திப்புக்கு ஏற்பாடு செய்பவர்கள் அல்ல. பல சந்தர்ப்பங்களில் பத்திரிகையாளர்கள்தான்.
சந்திப்பில் எழுப்பப்படும் கேள்விகள் பல தரத்தில் இருக்கும் விளையாட்டுத்தனமானவை, கேலிக்குரியவை, கிண்டலுக்குரியவை, உபயோகமற்றவை, வம்புக்கு இழுப்பவை, அரைவேக்காட்டுத்தனமானவை, அறியாமையை வெளிப்படுத்துபவை, உலக ஞானம் இல்லாதவை, அற்றைப் படுத்தும் தன்மை இல்லாதவை, விமர்சன ரீதியானவை, தர்க்க ரீதியானவை இப்படிப்பபல. ஆனால் இப்போதெல்லாம் எழுப்பப் படும் பெரும்பாலான கேள்விகள் சம்பந்தமில்லாதவையாக திசை திருப்பலாக இருப்பது துரதிர்ஷ்டமே.
பாலாவின்’பிசாசு’ ஊடக சந்திப்பிலும் பலவித வினாக்களைக் கேட்டு பாலா சீண்டப்பட்டார். ஆனால் கேள்வியை கேட்ட வருக்கே திருப்பிவிட்டும், நழுவலான பதில் கூறியும், கிண்டலாக சிரித்தும், இதெல்லாம் ஒரு கேள்வியா என்று ஏளனம் செய்தும் எல்லாவற்றையும் சமாளித்தார். இதனால் வெடிகுண்டு என்று நினைத்த கேள்விகளைக்கூட புஸ்வாணமாக்கி விட்டார். பதிலளிக்கும் போது சிலரை மூக்குடைத்தார், சிலரைக்கிச்சு கிச்சு மூட்டினர், சிலரை கிண்டல் செய்தார்.சிலரைச் செல்லமாகக் கிள்ளினார்.
ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு உரிய பதில் சொல்லாமலேயே கடைசிவரை பேசி பத்திரிகையாளர்களைப் பழிவாங்கி முடித்துவிட்டார்.