சிவா ,மித்துல் ரியான் , கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, தேஜாஸ்வினி,அஜு வர்கீஸ் நடித்துள்ளனர்.ராம் எழுதி இயக்கியிருக்கிறார். இசை சந்தோஷ் தயாநிதி, பின்னணி இசை யுவன் சங்கர் ராஜா.
உலகமயமாக்கலுக்குப்பிறகு பணத்தைத் துரத்தும் வாழ்க்கையைக் கைக்கொண்டு விட்டு உறவுகளை கைவிட்ட, ஏன் தன் குடும்பத்தை கவனிக்க மறந்த ,சக மனிதனை காண நேரமில்லாத ஒரு தலைமுறையின் கதையை மிர்ச்சி சிவா – கிரேஸ் ஆண்டனி இணையின் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தி உருவாகி இருக்கும் படம் ‘பறந்து போ’.
தங்களது கனவுகளை தங்கள் பிள்ளைகள் மூலம் காண்பது என்பது இப்போது நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் போக்காக உள்ளது.தங்களது ஆசைகளை விருப்பங்களை கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கும் அவர்கள் பிள்ளைகளின் விருப்பம் என்ன என்பதை அறிவதில்லை;அறிய முயல்வதே இல்லை. அப்படி குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தையின் கதை இது என்றும் கூறலாம்.இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களில் இருந்து ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுத்து சமுதாயத்தின் போக்கை எடுத்துக் கூறியுள்ளார் இயக்குநர் ராம்.
ஓய்வின்றி அலைந்து உழைக்கும் மிர்ச்சி சிவா, அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி, தங்களது பிள்ளையை பெரிய பள்ளியில் படிக்க வைப்பது, அவர் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுப்பது, அவர் எது செய்தாலும் பாராட்டுவது என்று இருந்தாலும், அவன் உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.
துரத்தும் கடன்காரனுக்குப் பயந்து சிவா தனது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் பறக்கிறார். வீட்டுக்குள்ளே சிறைப்பட்டிருந்த பிள்ளையும் உலகத்தைப் பார்க்கிறான்.இந்த பயணத்தில் தனது மகனின் உலகத்தை சிவா அறிந்து கொள்கிறார். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் மாற்றம் என்ன என்பதை சின்ன சின்ன ரசமான காட்சிகள் மூலம் சிரிக்க சிரிக்க சொல்வதுதான் ‘பறந்து போ’.
தீவிரத் தன்மை கொண்ட படத்தை எடுப்பதில் கவனம் செலுத்தும் இயக்குநர் ராம் இயக்கத்தில் கேளிக்கை நாயகன் மிர்ச்சி சிவா நடிப்பதே மிகப்பெரிய ஆச்சரியம் என்று கருதப்பட்டது. ஆனால் படத்தைப் பார்க்கும்போது பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது.சிரிக்க சிரிக்க ஜாலியாக கதை சொல்லியே சிந்திக்க வைக்க முடியும் என்று ராம் இதில் நிரூபித்துள்ளார்.
கோகுல் என்ற கதாபாத்திரத்தில் தந்தையாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா,ஆரவாரம் இல்லாமலே அந்தப் பாத்திரத்தில் பொருந்துகிறார்.சிவாவின் தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றை ஏற்றவகையில் பயன்படுத்தி அந்த பாத்திரத்தினை ரசிக்க வைத்து விடுகிறார் ராம்..
சிவாவின் மகனாக நடித்திருக்கும் மித்துல் ரியான், வயதுக்கு ஏற்ற குறும்புத்தனத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்து ஈர்க்கிறான். சிவாவின் மனைவியாக நடித்திருக்கும் மலையாள வரவு கிரேஸ் ஆண்டனி,அலட்டல் இல்லாமல் நடித்து கவனம் பெறுகிறார். சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் அஞ்சலி, அவரது கணவராக நடித்திருக்கும் மலையாள நடிகர் அஜு வர்கீஸின் திரை இருப்பு மற்றும் அவர்களது நடிப்பு காட்சிகளுக்கு சுவாரசியம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் யேசுதாஸ், சிறுமி ஜெஸ் குக்கு, தியா, ஸ்ரீஜா ரவி, பாலாஜி சக்திவேல், தேஜாஸ்வினி மற்றும் சில சிறுவர்கள் என தந்தை – மகன் பயணத்தில் சின்ன சின்ன பாத்திரங்களில் வந்தாலும் அழுத்தமாகப் பதிகிறார்கள்.
நம் சுற்றுப்புறத்தில் இருக்கும் நாம் கவனிக்காமல் கடந்து போகும் பல இடங்களையே அழகாகக் காட்டி காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சின்ன சின்ன மின்னல்களாக ஒளிர்கின்றன.யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் நேர்த்திதான்.
படத்தொகுப்பாளர் மதி படத்தின் கலகலப்பு குறையாமல் தொகுத்துள்ளார்.
கற்றது தமிழ் படத்திலேயே ஒரு பயண அனுபவத்தைக் கொடுத்த ராம், பறந்து போ படத்தில் ரசிகர்களை ஒரு ஜாலி ட்ரிப் அடிக்க வைக்கிறார் .பிள்ளைகளின் உலகத்தைப் புரிந்து கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு பெற்றோருக்கும் பாடம் எடுக்கிறார் ராம், அதுவும் கலகலப்பாக கதை சொல்லி.
மொத்தத்தில், ‘பறந்து போ’ பிள்ளைகளைப் புரிந்து கொள்ளும் பயண அனுபவம்.பார்ப்பவர்களுக்குத் திருப்தி தரும் படம்.


