‘வணங்கான்’ படத்தில் ஓர் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் வந்த பிருந்தா சாரதியின் முகம், படம் பார்த்த அனைவரின் மனதிலும் பதிந்திருக்கும்.
அந்தக் கதாபாத்திரத்திற்கு அதிகம் பேசுகிற காட்சிகள் இல்லாவிட்டாலும் அனைத்து முக்கியமான கதையின் காட்சித் தருணங்களிலும் மௌன சாட்சியாக உடன் நிற்கும் பாத்திரம் அவருடையதாக இருக்கும்.
படத்தில் நடித்த அனுபவம் பற்றி பிருந்தா சாரதி கூறும்போது,
”இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரம் நேற்று பார்க்கிற, சந்திக்கிற, எனக்குத் தெரிந்த, என்னுடைய தொலைபேசி எண்ணை வைத்திருக்கிற ஏராளமான நண்பர்களை ‘பாய்… நல்லா இருக்கீங்களா?’ என்று கேட்க வைத்திருக்கிறது.
திரைப்படத்துறையில் ஒரு இயக்குநராகவும், வசனகர்த்தாகவும் நீண்ட நாட்களாகப் பணியாற்றி வருபவன் என்கிற முறையில் ஒரு நடிகருக்குக் கிடைக்கிற புகழை நான் அறிவேன் என்றாலும் அது எனக்கே நேர்கிற போது ஒரு புல்லரிப்பை உருவாக்கத்தான் செய்கிறது.
ஒரு கதாபாத்திரத்திற்கு உருவம் கொடுப்பதற்கும், அதன் உடல் மொழி, மனோபாவம் ஆகியவற்றை விளக்கி அதை ஒரு நடிகனிடம் இருந்து பெறுவதற்கும் இயக்குநர் பாலா செய்கிற மெனக்கடுதல்களை நேரில் பார்த்தபோது அவருடைய கதாபாத்திரங்கள் ஏன் இவ்வளவு பேசப்படுகின்றன? அவரிடம் நடிக்கிற நடிகர்கள் எப்படி ரசிகர்களின் மனங்களில் அழுத்தமாக இடம்பெறுகிறார்கள் என்பதை உணர முடிந்தது.
எனக்குக் கொடுக்கப்பட்ட உடை, மூக்கு கண்ணாடி, செய்யப்பட்ட ஒப்பனை இவற்றுக்காக மட்டும் ஒரு நாள் முழுக்க உடன் இருந்து அவற்றைச் சரி செய்து கொண்டே இருந்தார். தான் விரும்புகிற தோற்றம் வரும் வரை சலிப்படையவே இல்லை. இப்படி ஒவ்வொரு நடிகருக்கும் அவர் மெனக்கட்டு வருகிறார்.
அதேபோலப் படப்பிடிப்பில் அவர் விரும்புகிற நடிப்பு வருகிற வரை பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து அதை ஒவ்வொரு நடிகரிடம் இருந்தும் அது எவ்வளவு நேரம் எடுத்தாலும் பெற்று விடுகிறார். ஒரு இயக்குநராக அது எனக்கு ஒரு மறைமுகப் பயிற்சியாகவும் அமைந்தது.
ஒரு கதை என்பது ஒரு இயக்குநரின் மனதுக்குள் இருக்கிற உலகம். அதை வெளியில் கொண்டு வருவதற்கு அவர் செய்கிற முயற்சிகளும் அதில் அவர் காணுகிற அதிகபட்ச சாத்தியங்களுமே அவருடைய வெற்றியைத் தீர்மானிக்கின்றன. அதில் பாலா ஒவ்வொரு முறையும் வெற்றி அடைந்துகொண்டுதான் இருக்கிறார்.
வியாபார ரீதியான ஏற்ற இறக்கங்கள் எல்லா துறைகளிலும் பொதுவாதுதான். ஆனால் ஒரு கலைஞனின் கலை வெற்றி என்பது அவனது மனதுக்குள் அவன் பெறுகிற வெற்றியேயாகும்.அந்த வெற்றியைப் பாலா நிறைய முறை பெற்று இருப்பார் என்று நம்புகிறேன். அதனால்தான் ரசிகர்கள்- ஏன் திரை உலகமும் கூட- ஆளுமை மிக்க இயக்குநர் என்று பாலாவைக் கொண்டாடுகிறது.
என்னைப் பொறுத்தவரை அவரது அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்தபோது திரைக்கதை எழுதவும், வசனம் எழுதவும் அழைக்கிறார்கள் என்று நினைத்தே அங்கு சென்றேன் . அதற்குப் பிறகுதான் ‘நடிக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.’வாரியர் ‘படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அது நண்பர் லிங்குசாமியின் படப்பிடிப்புத் தளம் என்பதால் அங்கு எனக்கு எந்த கூச்சமும் இல்லை. ஆனால் வேறொரு படப்பிடிப்பு தளத்தில் அப்படி நடிக்க முடியுமா என்ற தயக்கம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் ஒரு புதுமுகக் கதாநாயகனை வைத்து ‘தித்திக்குதே’ திரைப்படத்தை நான் இயக்கி இருந்தேன்.
“சார்… எனக்கு நடித்துப் பழக்கம் இல்லை.. நீங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்வதாக இருந்தால் நான் நடிக்கிறேன்… எனக்காக நிறைய டேக்குகள் போகும் போது மற்ற நடிகர்கள் நேரமும் படப்பிடிப்பு நேரமும் விரயமாகும் … ‘ என்று தயங்கியபடி கூறினேன். இந்த நேரம் என்பது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் முதலீடு. ஏராளமான உழைப்பாளர்களின் நேரம்.
‘அது நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று தைரியமூட்டி என்னை நடிக்க வைத்தார்.இப்படி அவர் ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்குகிறார்.
உண்மையிலேயே நேற்று திரையில் என்னை நான் பார்த்தபோது, ‘நானும் நடிகன்தான் போலிருக்கிறது,’ என்று எனக்கே தோன்றியது . என்னுடைய தயக்கங்கள் எங்கே போயின? எனது கூச்சம் எப்படி விலகியது?எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.”என்றார்.