இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான இதிகாசங்கள் உண்டு. அவை அந்த மாநில மக்களின் கலாச்சாரம் பண்பாடு சார்ந்ததாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அறியப்பட்ட மாபெரும் இதிகாசங்காள் 1) இராமாயணம் 2)மகாபாரதம்.
இன்று சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இராமாயணம், மகாபாரதம் பற்றிய குறிப்புகள் வேறு சில நாடுகளில் கண்டு பிடித்திருக்கின்றனர். குறிப்பாக மகாபாரதம் உலகில் உள்ள மனித உறவுகளைப் பற்றிய கதாபாத்திரங்களைக் கொண்டது. இந்த மாபெரும் காவியம் பல மொழிகளில் பல வடிவங்களில் வந்திருக்கின்றன. ஆனால் முற்றிலும் சிறுவர் , சிறுமிகளை வைத்து ஒரு நாடகம் என்பது கத்தி மேல் நடப்பதற்குச் சமம்.
அதேசமயம் சிறுவர் சிறுமியர் உணர்வுடன் கூடிய உரையாடலைப் பேசும்போது அதை காண்கையில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மிகவும் கடுமையாக தேர்வு செய்து , இடைவிடாத பயிற்சி கொடுத்து நடை, உடை, பாவனை என தத்ரூபமாக மகாபாரதம் நடந்த அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது ‘பாலபாரதம்’ நாடகம்.
நம் நினைவில் இன்றும் நிற்கும் புராண நாடக ஜாம்பவான்களே இன்றிருந்தால் அவர்களே பாராட்டும் அளவிற்கு தந்திரக்காட்சிகள் இதில் நிறைந்துள்ளன. நாகலோகம் வரும் , பாம்பு நடனம் வரும். குருகுலத்தில் வரும் காட்சிகள் நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும். இசை இன்றைய இளைய சமூகத்தினரின் ரசனைக்கேற்ப மிகவும் மாடர்னாக அமைந்துள்ளது. இன்றும் கொஞ்ச நேரம் நீடிக்காதா என்ற ஆவலைத் தூண்டுமளவிற்கு காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வது நாடகத்தின் பலம். தன்னுடைய நாடக அனுபவங்களைக் கொண்டு அனுபவப்பட்ட தொழில் நுட்ப கலைஞர்களுடன் இணைந்து E.S.ஷண்முகநாதன் திறம்பட நாடகத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தயாரிப்பு- ஸ்ரீராம்