‘நானும் ரௌடிதான்’ விமர்சனம்

nanum2ரௌடி பெரிய ஆளா போலீஸ் பெரிய ஆளா என்கிற கேள்வியுடன் வளர்கிறார் விஜய் சேதுபதி. அவரது அம்மா ராதிகா தன்னைப் போல மகனையும் போலீசாக்க விரும்புகிறார். மகனுக்கோ ரௌடி பதவி மீது மோகம். ஒரு நாள் அம்மாவின் ஸ்டேஷனுக்கு வரும் நயன்தாராவை சுற்றி வருகிறார் விஜய் சேதுபதி. அவர்களுக்குள் நெருக்கம்வர நீ நான் சொல்லும் ஒருவனை என் கையால் கொல்ல  உதவினால்தான் நமக்குள் காதல் எல்லாம் என்கிறார் நயன். அந்த ஒருவன் பார்த்திபன். அவர்தான் நயன்தாராவின் அப்பாவை கொன்றவர். தான் நினைத்தது போல் நயன்தாரா கொன்றாரா அவர்கள் காதல் என்ன ஆனது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

படம் தொடங்கியதுமே ரௌடி பெரிசா போலீஸ் பெரிசா என்று எல்லாருடனும் விஜய் சேதுபதி கேட்கும் காட்சிகளும் அதற்கு ஒரு ரௌடி மொட்டைராஜேந்திரன் தரும் விளக்கங்களும் கல கலப்புக் காட்சிகள்.

கொஞ்சம் காது மந்தம் போல வரும் நயன்தாரா அந்த குணச்சித்திரத்தை வைத்தே அனுதாபத்தை அள்ளுகிறார். அவ்வப்போது காமெடிக்கும் உதவுகிறார்.இப்படத்தில் மரத்தைச் சுற்றாமல்  நடிக்கவும் செய்துள்ளார் நயன்.

தன்னை ஒரு ரௌடியாக சித்தரித்துக் கொண்டு. அப்படி நடக்க முயலும் விஜய் சேதுபதி செய்யும் பில்டப் கள் அவருடன் இருக்கும் ஆர் ஜே பாலாஜியின் டைமிங் பஞ்ச்கள் எல்லாம் சிரிப்பூட்டும் கலகலப்பு ரகம் .

தன் காதலிக்காக பெரிய ரௌடியான பார்த்திபனை சுற்றிவளைக்க விஜய் சேதுபதி போடும் திட்டங்களும் அவை சொதப்பு வதும்  வெடிச் சிரிப்பு வரவழைப் பவை.

ரௌடியிசத்தை நகைச்சுவை முலாம்பூசி கலகலப்பான கதையாக்கி தந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். உடன் அனிருத்தின் இளமை துள்ளும் பாடல்கள் துணைநிற்கின்றன.

இடைவேளைக்குப் பிறகு கதை அது போக்கில் போகிறமாதிரி அமைத்துள்ளனர். லாஜிக் பார்க்காமல் ரசிக்க வைத்துள்ளனர். அதுதான் இயக்குநரின் வெற்றி.