விஜய்ஆண்டனி, காவ்யா தாபர், தேவ்கில், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி, யோகிபாபு, ஒய்.ஜி. மகேந்திரன் , ராதாரவி, மன்சூர் அலிகான் ,கிட்டி மற்றும் பலர் நடித்த படம். கதை, எடிட்டிங் , இசை,இயக்கம் விஜய் ஆண்டனி. தயாரிப்பு விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்.
‘MONEY IS INJURIOUS TO THE WORLD ‘அதாவது,’பணம் உலகத்திற்குத் தீங்கானது ‘என்கிற வாக்கியத்துடன் படம் தொடங்குகிறது.
விஜய் ஆண்டனி முதன் முதலாகக் கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’ .
சரி படத்தின் கதை என்ன?
இந்தியாவின் முன்னணியில் ஆகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி.அதாவது டாப் 10 இல் ஒருவர். அவரது நெருக்கமாக இருக்கும் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஜய் குருமூர்த்தியின் தலையில் அறுவை சிகிச்சை மூலம் வேறொருவரின் மூளையைப் பொருத்துகிறார்.அதன் மூலம் அவரைத் தங்கள் வசப்படுத்தி அவரது சொத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறார்.
அவர்களின் சதித் திட்டத்தின்படி பிச்சைக்காரனாக இருக்கும் சத்யாவைக் கொன்று அவனது மூளை விஜய் குருமூர்த்திக்குப் பொருத்தப்படுகிறது.சத்யா ,தனது தங்கையைச் சிறுவயதில் தொலைத்து விட்டுக் கடைசி வரை தேடிக் கொண்டிருப்பவன் . அவன் ஒரு முன்னாள் கொலைக்காரனும் கூட. இவை சதிகாரர்களுக்குப் பிறகு தான் தெரிகிறது.பணக்காரருக்குப் பொருத்தப்பட்ட மூளை சத்யாவின் குணங்களோடு உள்ளது. பணம் மீது ஆர்வம் இல்லாமல் பழைய வாழ்க்கையைத் தேடியும் அலைகிறது.ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த சதியை அறிந்து கொள்கிறது.தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறது.எனவே விஜய் குருமூர்த்தி உடலில் பொருத்தப்பட்ட மூளைக்குரிய சத்யா காவல் நிலையம் சென்று நடந்ததை, உண்மையைக் கூறுகிறான்.அதன் பிறகு நடக்கும் பரபர திருப்பங்கள் தான் பிச்சைக்காரன் 2 படத்தின் கதை.
விஜய் ஆண்டனி எப்போதும் தன் படத்தின் வெற்றிக்கு எவையெவை தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார்.
வெகு ஜனங்களுக்கான இசை, அது அவர் கைவசம் உள்ளது. அளவான கவர்ச்சி, சென்டிமென்ட், ஆர்ப்பாட்டம் இல்லாத ஆக்சன், வியக்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள்,பேசப்படுகிற வசனங்கள், சமூகத்திற்கான ஒரு செய்தி இவை அனைத்தையும் இந்தப் படத்தில் வைத்துள்ளார்.வேறு என்ன வேண்டும் என்பது போல் ஒரு முழுமையான சுவாரசியமான கமர்சியல் படமாக உருவாகி இருக்கிறது இப்படம்.
சிரமப்பட்டு எடுத்துள்ளோம் என்று அவர் எப்போதும் பரிவைத் தேடுவதில்லை. தேவையானதை, திருப்தியானதைக் கொடுத்துவிட்டு தான் ஆதரவைக் கோரும் நபர் அவர். .விஜய் ஆண்டனி ஒரு நடிகராக சத்யா மற்றும் விஜய் குருமூர்த்தி என இருவேறு தோற்றங்களில், பாத்திரங்களில் வருகிறார். ஒரு நடிகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் விஜய் ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார் என்று சொல்ல வேண்டும் இதில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
நாயகி காவியா தாபரும் ஒரு வணிகப் படத்தின் கதாநாயகிக்குரிய வேலையைச் சரியாக செய்துள்ளார். தேவ்கில், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி மூவரும் முக்கிய எதிர்மறைப் பாத்திரங்களில் வருகிறார்கள்.அவர்களுடன் கிட்டியும் வருகிறார். இவர்கள் தங்கள் பணியைச் சிறப்பாக செய்துள்ளனர்.
யோகிபாபு அவ்வப்போது வந்து கலகலப்பூட்டுகிறார். ராதாரவி ,ஒய் .ஜி. மகேந்திரன்,மன்சூர் அலிகான் என அனைவருமே தங்கள் பாத்திரங்களில் கவனம் பெறுகிறார்கள்.
பிச்சைக்காரர்களின் உலகம், அவர்களது உணர்வுகள் ,சமூகம் அவர்களைப் பார்க்கும் பார்வை மற்றும் பணக்காரர்கள் உலகம் என்று இரு வேறு துருவ எல்லைகளின் தன்மைகளைப் படத்தில் காட்டி உள்ளார் விஜய் ஆண்டனி.
குழந்தைக் கடத்தல் கும்பல் பற்றிய காட்சிகள், ஆதரவற்ற பெண்கள் மீது சமூகத்தின் வக்கிரம் ஆகியவற்றை பதைபதைப்பான காட்சிகளின் மூலம் உருவாக்கியுள்ளார்.அதே நேரம் ஆடம்பரம் சொகுசு அலங்காரம் என, பணத் திமிரில் குளிக்கும் பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையையும் இதில் காட்டியுள்ளார்.
படத்தில் வணிக அம்சங்களைத் தாண்டி ‘ஆன்டி பிகினி’ என்கிற தலைப்பில் சமூகக் கருத்தை விதைத்துள்ளார் விஜய் ஆண்டனி. பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகளுக்கு எதிரான சிந்தன இயக்கமாக இந்தக் கருத்து மக்களிடம் பேசப்படும்.




ஓம் நாராயணனின் ஒளிப்பதிவு படத்திற்குக் கூடுதல் பலம்.படத்தின் பிரம்மாண்டத்தைக் காட்டுவதில் ஒளிப்பதிவு பெரும் பங்கு வகிக்கிறது.
அருண்பாரதி,விஜய் ஆண்டனியின் பாடல்கள் ஒரு வணிகப்படத்திற்கான தரத்தில் உள்ளன. இசையும் எடிட்டிங்கும் படத்திற்குப் பெரிய பலம்.
விஜய் ஆண்டனியின் உழைப்பில் உருவாகி உள்ள இந்தப் படம் நிச்சயமாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும்.