‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ விமர்சனம்

வரலட்சுமி சரத்குமார், ஆரவ்,சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா ,யாசர், விவேக் ராஜகோபால், அமித் பார்கவ்,சுப்பிரமணிய சிவா, யாஷ் ஷெட்டி ,ரவி வெங்கட்ராமன், ஜோ சைமன், பாலாஜி சந்திர சூட் நடித்துள்ளனர்.ஆஹா ஓடிடி தளத்திற்காக
தயாள் பத்மநாபன் தனது டி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு சேகர் சந்திரா,
தயாரிப்பு வடிவமைப்பு சி.எஸ். பாலச்சந்தர், இசை மணிகாந்த் கத்ரி.
படத்தொகுப்பு ப்ரீத்தி – பாபு .இந்தப் படத்தை ஆஹா ஓடிடி தளம் வெளியிடுகிறது.

ஒரு குற்றம் சார்ந்த புலனாய்வுக் கதை தான் இது.நடந்த குற்றம், குற்றத்தின் ஆதாரங்களைத் தேடி, தடயங்களின் காலடித்தடம் நோக்கி மோப்பம் பிடித்து புலனாய்வு செய்யும் பாதை என்று செல்லும் கதை தான் இது.

2023 ஜனவரி 27-ல் சென்னையில் தொடங்குகிறது இந்தப் படத்தின் கதை.

வேலையில் இருந்து வரும் மஹத் ஒரு பள்ளி மாணவி கடத்தப்படுவதைப் பார்க்கிறார். அதை மறைந்திருந்து தனது மொபைல் கேமராவிலும் பதிவு செய்கிறார். பதற்றத்துடன் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று புகார் செய்கிறார்.உடனே இன்ஸ்பெக்டர் புறப்படுகிறார்.அந்த நேரத்தில் வரலட்சுமி போன் செய்தபோது சரியாகப் பேசாமல் தவிர்த்து விட்டு இன்ஸ்பெக்டருடன் சம்பந்தப்பட்ட இடத்திற்குள் மஹத் செல்கிறார்.அது ஒரு ஃபேக்டரி,வாசலில் மஹத்தை விட்டு விட்டு உள்ளே செல்கிறார் இன்ஸ்பெக்டர். அவர்கள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்ட மஹத்துக்கு அதிர்ச்சி. அவர்கள் கூட்டுக் களவாணிகள் என்று தெரிகிறது.போலீஸ் குற்றவாளிகளின் கூட்டுறவு உறுதிப் படுகிறது.நிலைமையைத் தெரிந்து கொண்டு தப்பித்து ஒடுகிற மஹத்தை சம்பந்தப்பட்ட தாதாவின் ஆட்கள் துரத்துகிறார்கள்.
பிறகு வரலட்சுமிக்கு மஹத்தின் போன் தொடர்பு அறுந்து விடுகிறது. பயந்தவர், மஹத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி போலீஸில் புகார் கொடுக்க மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டர் மீது சந்தேகம் வருகிறது. தன்னுடைய அன்பிற்குரிய மஹத்தை கொன்றவர்களைப் பழிவாங்க அதே ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் வாங்கி வருகிறார். மஹத்தை கொன்ற இன்ஸ்பெக்டரையும் தாதா சுப்பிரமணிய சிவாவையும் தீர்த்துக்கட்ட வரலட்சுமி முடிவெடுக்கிறார்.இந்த செயல் திட்டத்தில் தன்னுடைய நண்பர்களை இணைத்துக் கொள்கிறார்.திட்டம் தீட்டப்படுகிறது.ஆனால் இடையில் வேறொரு திட்டம் நுழைந்து இருவரும் ஒரே நேரத்தில் சுடப்படுகின்றனர்.குறுக்கே புகுந்தவர் யார்? அதற்கான பின்னணி என்ன? என்பதை திடுக் திருப்பங்களுடன் பரபர திரைக்கதையுடன் சொல்வது தான் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் படம்.

படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப் போன்ற தெரிந்த முகங்கள் நடித்திருந்தாலும் தெரியாத ஒரு முகமாக நம்மைக் கவர்வது படத்தின் திரைக்கதை.

ஆங்காங்கே முடிச்சுகளைப் போட்டு மெல்ல மெல்ல ஒவ்வொன்றாக அவிழ்ப்பது என்று சீரான பாதையில் விறுவிறுப்பாக பயணித்துள்ளது திரைக்கதை. காட்சிகள் வழியே ஆங்காங்கே சிறு சிறு பூட்டுகளாகப் போட்டு, பிறகு ஒவ்வொன்றாகத் திறக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். நம்மிடம் இதுவோ அதுவோ என்று யூகிக்க விட்டு, பிறகு அதுவல்ல வேறொன்று என்று ஒரு திறமையான திரைக்கதை ஆசிரியராகக் களம் ஆடியுள்ளார்.இந்த ஆட்டம் இறுதி வரை தொடர்கிறது.

நடிப்புக் கலைஞர்களைப் பொறுத்தவரை,சிறிது நேரமே வந்தாலும் மஹத், தனது தோற்றத்தாலும் இயல்பான நடிப்பாலும் அனுதாபங்களை அள்ளுகிறார்.பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ச்சனாவாக வரும் வரலட்சுமி வெறும் போலீஸ் ஆக்சன் காட்சிகளில் மட்டுமல்ல மனதில் உள்ளதை மறைத்து அதை முகபாவனையில் வெளிப்படுத்தும் நடிப்பை வெளிப்படுத்தும் தருணங்களிலும் மினிர்கிறார்.வரலட்சுமியின் நட்புக் கூட்டணியில் வரும் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர்,கெட்ட இன்ஸ்பெக்டர் ஆக வரும் யாஷ் ஷெட்டி ஆகியோரும் கவனத்தில் பதிகிறார்கள்.

இடைவேளையின் போது திரை நுழைவு செய்கிற ஆரவ் ஏசிபி நெடுஞ்செழியனாக வருகிறார்.படத்தின் இரண்டாம் பாதியில் ஆரவ் தனது விசாரணையைத் தொடங்குகிறார்.அதன் பிறகு விரைவு ரயில்வேகத்தில் சென்று கொண்டிருந்த திரைக்கதை துரித ரயில் வேகத்தில் தடதடக்கிறது.
படத்தில் ஆரவ்வின் தோற்றம் உடல் மொழி அனைத்தும் அருமை.
அந்த ஏசிபி பாத்திரத்தில் ஒரு மில்லி மீட்டர் கூட மிகை நடிப்பு இல்லாத அவரது யதார்த்த நடிப்பு அபாரம். நடிப்பே தெரியாமல் நடிப்பதுதான் சிரமம். அதைச் சரியாகச் செய்துள்ளார். சபாஷ். இரண்டாவது பாதியில் வந்தாலும் முழுப் படத்தையும் தாங்கி நிற்பது போன்ற நிறைவான உணர்வைத் தருகிறார் ஆரவ்.அதன்பின் படத்தைத் தன் தோளில் சுமந்து கொண்டு வெற்றிகரமாகப் படத்தை முடிக்கிறார்.தாதா சுப்பிரமணிய சிவாவின் நடிப்பும் அந்த அலட்சிய உடல் மொழியும் சிறப்பு.வழக்கமாக ஹாரர் படங்களில் தோன்றும் மிகை உணர்ச்சிகளைத் தவிர்த்து உள்ளது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஓடிடி தளத்தில் வெளியீடு என்கிற போது படத்தில் ஆபாசக் காட்சிகள், கொச்சை பச்சை வசனங்களையும் திணித்துப் படமெடுப்பது வழக்கமாகி வருகிறது.ஓடிடி தளம் குடும்பத்தினர் ஆதரவு கிடைக்காமல் வெற்றி பெற முடியாது .அந்தப் பாதையில் இந்தப் படம் ஒரு துளி கூட ஆபாசக் கலப்பின்றி உருவாகி உள்ளது.
இதற்காகவும் இயக்குநரைப் பாராட்ட வேண்டும்.

சில குறிப்பிட்ட லொகேஷன்களில் கதை நடந்தாலும், எந்தக் குறையும் இல்லாமல் தொய்வும் இல்லாமல் படம் வேகமாக விரைகிறது.வசனங்களில் கூர்மை, காட்சிகளில் முதிர்ச்சி போன்றவை அண்மைக் காலங்களில் பல படங்கள் தராதவை.

பெரும்பாலும் இரவுக் காட்சிகளில் நிகழும் கதையில் தனது ஒளிப்பதிவில் புதிய கோணங்களாலும் வசீகரிக்கும் ஒளி அமைப்புகளாலும் முத்திரை பதித்து ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா தனது இருப்பை வெளிப்படுத்துகிறார்.
நிஜ இடத்தை உணர வைக்கும் கலை இயக்குநர்,தயாரிப்பு வடிவமைப்பாளர் பாலசந்தரின் பணிக்கும் பாராட்டுகள்.

மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை படத்திற்குப் பெரிய பலம் .வழக்கமாக கேட்டிராத இசைக்கருவிகளை மீட்டி த்ரில்லர் படத்திற்கு ஒரு கிளாசிக்கல் டச் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் குறை சொல்லத் தோன்றாத ஒரு திரில்லர் படம்.