பிளட் மணி என்கிற கலாச்சாரம் அரபு நாடுகளில் உள்ளது. அதாவது உயிரிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு குற்றம் செய்தவர் உதவி செய்தால் உயிர் இழப்பு நேர்ந்த குடும்பத்தினர் மூலம் மன்னிக்கப்பட்டால் மரண தண்டனையில் விலக்கு கிடைக்கும் என்கிற மரபு அங்கே உள்ளது .அது சார்ந்த கதை கொண்ட படம்தான் ப்ளட் மணி.
துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் உதவிக்காக கதறி அழ, அந்த அழுகுரல் ஒருதொலைக்காட்சியில் வேலைக்குப் புதிதாக இணையும் செய்தியாளருக்குச் சேர்கிறது. அவர் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார். அதில் ஜெயித்தாரா என்பதே கதை.
ஒரு நியூஸ் சேனலின் பின்னணியில் நிகழும் எளிய மனிதர்களுக்கான நீதி தேடிய பயணம் தான் கதைக்கரு.செய்திச் சேனல்களில் ஒரு செய்தியை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். அதிலுள்ள அரசியலும் அலட்சியமும் புரிகிறது .
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்தின் முழுக் கதையும் புரிந்துவிடுகிறது .அதனால நம் கவனம் குவிந்து விடுகிறது. படம் முடியும் வரையிலும் எந்த பிசிறும் இல்லாமலும் கதை பயணிப்பது நேர்த்தி.
தமிழ் சினிமாவில் புதிய மாற்றத்தை ஓடிடி தளம் ஏற்படுத்தியுள்ளது .அது வணிகக் குப்பைகளை வடிகட்டித் தரமான படங்கள் வருவதற்கு வழி வகுத்துள்ளது. திரையரங்கிற்கான மசாலாக்கள் இல்லாமலஅந்த வரிசையில் வந்திருக்கும் படம் இது. படம் வெறும் 1.30 மணி நேரம் மட்டுமே, கொண்ட தரமான படம்.
இந்தப்படத்தில் துபாயில் வேலை பார்ப்பவர்களின் நிலையைச் சொல்லியிருப்பதும், அங்கு சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் வலியைப் பதிவு செய்திருப்பதும் நன்று. மேலும் படத்தில் முக்கிய அம்சமாக, பாதிக்கப்படும் தமிழர்களுக்கு, குரல் கொடுக்க இங்கு ஆளிருக்கிறது சொந்தம் இருக்கிறது, ஆனால் இறந்து போன ஒரு இலங்கைப் பெண்ணுக்கு ,அவளது உறவல்ல ஊரையே காணவில்லை எனபது எத்தனை பெரிய வலி என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
ஓர் அழுத்தமான கதை இது. பிரியா பவானி சங்கர் ரிப்போர்ட்டராகப் புதிதாக வேலைக்கு சேர்பவர். துபாய் பிரச்சினையை தீர்க்கப் போராடுபவராக வருகிறார்.தனது பாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்.
இப்படம் ஆரம்பித்த கணத்திலிருந்தே சோகமாகத்தான் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஓடிடிக்கு என எடுக்கப்பட்டதால், படம் சினிமாவுக்கான எந்த பூச்சுக்களும் இல்லாதது சிறப்பு என்றாலும் மற்றோரு பக்கம் அது நாடகத்தன்மையை கொண்டு வந்து விடுகிறது.
படம் முழுக்கவே மேக்கிங் ஒரு குறும்பட மேக்கிங் போலவே இருக்கிறது.
மற்றபடி இது ஓடிடிக்கேற்ற சரியான சினிமா என்பதில் சந்தேகமில்லை.