இன்று குறும்படங்கள் திரையுலகில் நுழைய ஒரு வழியாக அமைந்து பலருக்கும் பயன்படுகின்றன. அவ்வகையில் பெங்களூரைச் சேர்ந்த தமிழர்கள் இணைந்து உருவாக்கியிருக்கும் குறும்படம் ‘மரணத்தின் ஜகடம்’
செல்வா விஜயன் நாயகனாக நடித்து இருக்கிறார். வில்லனாக ரவிராஜ். சந்தோஷ் மதன் கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு க்ரைம் த்ரில்லர்.
மதுரையைச் சேர்ந்த தாதா பெங்களூரில் வசிக்கும் இருவரைக் கொலை செய்ய வருகிறான். போலீசுக்கே தண்ணி காட்டும் அவனை நாயகன் எப்படி அவனைத் தானே கொலைசெய்ய வைக்கிறான் என்பதே கதை.
இக் குறும்படத்தை கரன் வாசுதேவன் என்னும் புதியவர் ஒளிப்பதிவு செய்து இசையமைத்து எழுதி இயக்கி தயாரித்தும் இருக்கிறார்.
இப்படத்தின் திரையீடு ஏவிஎம் திரையரங்கில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், முன்னாள் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன் பேசினார்.அவர் பேசும் போது
“இங்கே அமீர் வந்திருக்கிறார். அவர் மீது எனக்கு அன்பும் மதிப்பும் உண்டு. அவர் பெப்ஸியில் இருந்த போது அவர் ஒரு முனையில் இருந்தார். நாள் ஒரு முனையில் இருந்தேன். எதுக்கு வம்பு என்று அவரை நான் சந்திப்பதில்லை. பேசுவதில்லை. தவிர்த்து வந்தேன். சங்கத்தில் இருப்பதில் உள்ள சங்கடம் அது. இதுஅவருக்கும் இருந்து இருக்கும். என்ன காரணத்தாலோ வெளியே வந்து விட்டார். நல்லதுதான்.. அங்கேயே இருந்தால் படம் இயக்க நேரமிருக்காது. சங்கத்தில் பஞ்சாயத்து செய்யும் போது பெரிய நடிகர்கள் நம்மை எதிரியாகவே பார்ப்பார்கள். அப்புறம் எப்படி நமக்கு கால்ஷீட் தருவார்கள். நான் டிஜிட்டல் பிலிம் மேக்கர்சுக்கு ஒரு சங்கம் வைத்திருக்கிறேன்.
இப்போது சினிமாவே மாறிவிட்டது. ஒன்றுபெரிய படம் 100 கோடி, 200 கோடி படம். இன்னொன்று வெளியிடத் தியேட்டரே கிடைக்காத சின்னபடம். காட்டாற்று வெள்ளத்தில் படமெடுப்பவர்கள் நடந்து போக வேண்டியிருக்கிறது. கடந்து மேலே வரும் போது மேலாடை மட்டுமின்றி உள்ளாடை கூட இருப்பதில்லை. பெரிய நட்சத்திரம் நடிக்கும் படங்களுக்கு பிளாக்கில் டிக்கெட் விற்கிறார்கள். நூறு ரூபாய் இருநூறு ரூபாய்முன்னூறு ரூபாய்என்று ஏழை ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்குகிறார்கள். எல்லா திரையரங்கிலும் 3நாளில் ,4 நாளில் வசூலை செய்துவிட நினைக்கிறார்கள். பொது வாழ்க்கையில் நேர்மைபற்றி பேசும் நடிகர்களே டிக்கெட்டை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்தச் சொல்கிறார்கள். தங்கள் சம்பளத்தை 20 கோடி, 30, கோடி என்று உயர்த்திக் கொள்கிறார்கள்.ரசிகனின் கழுத்தை நெறித்து காசு பிடுங்குகிறார்கள்.இதைப்பற்றி வாய் திறப்பதே இல்லை.மனசாட்சியே அவர்களுக்கு இல்லை.” இவ்வாறு சேகரன் பேசினார்.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமீர், கௌரவ், ப்ரவீன் காந்த், நடிகர்கள் நாசர் ,பாபிசிம்ஹா, பவர்ஸ்டார், செந்தில், பாலா, ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் சௌந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.