ஹரிபாஸ்கர், லாஸ்லியா, ரேயான், இளவரசு, ஷாரா நடித்துள்ளனர். அருண் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார் .ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். நித்தின் மனோகர் ,முரளி ராமசாமி தயாரித்துள்ளனர்.
யூடியூப் மூலம் முகம் தெரிந்த அளவிற்கு பிரபலமாகி இருக்கும் ஹரிபாஸ்கர் தான் படத்தின் கதாநாயகன்.அவர் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்.தனது கல்லூரியில் படிக்கும் லாஸ்லியாவைக் காதலிக்கிறார்.ஆனால் அவரோ இவரது காதலைப் புறக்கணிக்கிறார்.படிப்பை ஒழுங்காக முடிக்காமல் சில ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கிறார் ஹரி.
ஒரு சூழலில் லாஸ்லியா வீட்டில் 6 மாதங்கள் ஹவுஸ் கீப்பிங் எனப்படும் வீட்டு வேலைகள் செய்ய நேரிடுகிறது. அப்போது ஹரியைப் புரிந்து கொண்டு நட்பாக இருக்கிறார் லாஸ்லியா. அந்த நெருக்கத்தைக் காதல் என்று நினைத்துக் கொள்கிற ஹரி,மனதுக்குள் அவருடன் வாழ்கிறார்.இந்த நிலையில் லாஸ்லியாவோ வேறொரு வருடன் நெருக்கமாக இருக்கிறார்.இதை அறிந்த ஹரி அதிர்ச்சி அடைகிறார். யாருடைய காதல் வென்றது என்பதுதான் கதை.
நாயகனாக நடித்திருக்கும் யூடியுப் பிரபலம் ஹரி பாஸ்கர், முதல் படம் போல் அல்லாமல் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அழகாக அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாசமுள்ள அம்மா, கண்டிப்பா அப்பா இவர்கள் மத்தியில் அவர் ஜாலியாக வளர்கிறார் .பொறுப்பில்லாத குணம் கொண்ட அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற உடல் மொழி நடிப்பு என்று கச்சிதமாகப் பொருந்துகிறார்.இந்த பாத்திரம் பொதுவாகவே தமிழ் கதாநாயகர்களின் குணத்தைப் பிரதிபலித்தாலும் அவர் தனது நடிப்புப் பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, நடிப்பிலும், அழகிலும் பளிச்சிடுகிறார்.பல இடங்களில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்புகிடைத்து, அதைச் சரியாகவும் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரயான், கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்துள்ளார்.
ஹரிக்கு காதல் பாடம் எடுக்கும் கதாபாத்திரத்தில் வரும் ஷாராவின் பாத்திரம் சிரிக்க வைக்கிறது.அப்பப்போதா அவர் உதிர்க்கும் தத்துவங்களும் ஜாலி ரகம்.
இளவரசு, நாயகனின் அப்பாவாக வருகிறார். அவரது குணச்சித்திரம் மட்டுமல்ல அம்மாவாக வரும் நடிகையும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
இசையமைப்பாளர் ஓஷோ வெங்கட்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை தீங்கு செய்யாமல் தூக்கி நிறுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் குலோத்துங்க வர்மன், காட்சிகளை வண்ணமயமாய் படமாக்கியிருப்பதோடு, நாயகன் மற்றும் நாயகியை அழகாகக் காட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராம சுப்பு தொய்வில்லாமல் கதை நகர உதவியுள்ளார்.
எழுதி இயக்கியிருக்கும் அருண் ரவிச்சந்திரன், தற்போதைய தலைமுறைக்கேற்ற கதையைச் சொல்வதாக எண்ணி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். ஆனால் இந்த முக்கோணக் காதல் கதை பழையது தான்.என்றாலும் சொல்கிற விதத்தில் கலகலப்பு காட்டியுள்ளார்.
லவ் யூ என்பதற்கும் ஐ லவ் யூ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்சிகளால் வெளிப்படுத்தி உள்ளார்.இந்தக் கதையை நேர்க்கோட்டுத் தன்மை மாறாமல் எடுத்திருந்தால் இன்னும் அழுத்தமான படமாக அமைந்திருக்கும். முதல் பாதியை விட இரண்டாம் பாதி அழுத்தம் தந்ததால் படம் திருப்தி உணர்வைத் தருகிறது. சோர்வு இல்லாமல் ஒரு படத்தைத் தந்ததற்காக
அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரனைத் தாராளமாக பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ இக்காலகட்ட காதலைச் சொல்லும் கதை.