நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், SDPI கட்சியின் மாநில தலைவர் முபாரக் உள்ளிட்ட தலைவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களுக்கு முத்துநகர் படுகொலை படம் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது.
இந்த்படத்தின் இயக்குனரை வெகுவாகப் பாராட்டிய மேதாபட்கர்…
” போலீஸ் அடக்குமுறையும் அரசு எந்திரங்களின் மோசமான தோல்வியும் பார்ப்பவர்களைப் பதற வைக்கும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு துணிச்சலான முயற்சி.
இந்த படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, திருமாவளவன் உதவி செய்ய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் மகாராஷ்டிரா & மத்திய பிரதேசத்தில் போராடும் மக்களுக்கு முத்துநகர் படுகொலை ஆவணப்படத்தை திரையிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனிருந்த கூடங்குளம் அணு உலைப் போராளி சுப.உதயகுமாரும் படத்தை வெகுவாகப் பாராட்டினார்.