மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார். நம்பிக்கைக்குரிய வளரும் இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டையும் பெற்றது. பல மதிப்புமிக்க விருதுகளையும் இயக்குநர் வென்றார். சிரஞ்சீவி உடனான அவரது இந்தத் திரைப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடேலா மிகவும் ஸ்பெஷலான இந்த திரைப்படம் குறித்து, இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நேச்சுரல் ஸ்டார் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும் இப்படத்தை, SLV சினிமாஸ் சார்பில், சுதாகர் செருக்குரி பிரமாண்டமாக தயாரிக்கிறார்.
இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ போஸ்டர், படத்தின் களத்தையும், சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தின் தீவிர தன்மையையும், வெளிப்படுத்துகிறது. போஸ்டரில் இடம்பெற்றுள்ள சிவப்பு நிறத்திலான தீம், கதையின் மைய வன்முறையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் “வன்முறையில் அவர் அமைதியைக் காண்கிறார்” என்ற மேற்கோள், சிரஞ்சீவியின் கடுமையான மற்றும் அழுத்தமான பாத்திரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த திரைப்படம் அதிரடி-ஆக்சன், திரில்லர் சினிமா அனுபவமாக இருக்கும். சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிக புதுமையான அழுத்தமான படமாக இருக்கும்.
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும், அவரது இரண்டாவது படைப்பான “தி பாரடைஸ்” படம் முடிந்த பிறகு, இப்படம் தொடங்கவுள்ளது.
படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.