“படம் வெளியாகி 25 ஆண்டு காலம் கழித்தும் ‘மோகமுள்’படம் பேசப்படுகிறது “என்று இயக்குநர் ஞானராஜசேகரன் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
இந்த 2021 ஆம் ஆண்டு எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கு நூற்றாண்டு ஆகும்.அவரது செவ்வியல் படைப்பான ‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன .அந்த வகையில் ‘மோகமுள்’ படத்திற்கு இது வெள்ளிவிழா ஆண்டு. அப் படத்திற்காக எழுதிய திரைக்கதையை நூலாக அப்படத்தை இயக்கிய ஞான ராஜசேகரன் உருவாக்கியிருக்கிறார்.இந்த நூலைக் காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.’மோகமுள்’ திரைக்கதை நூலின் வெளியீடு ,44வது புத்தகக்காட்சியில் காவ்யா பதிப்பக அரங்கில் நேற்று நடைபெற்றது.இந்த எளிய விழாவில் திரைக்கதை நூலை அந்தப் படத்தின் நாயகனாக நடித்த அபிஷேக் வெளியிட்டார்.ஜெர்மனியிலிருந்து வந்திருந்த பாரம்பரிய மரபுகள் குறித்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் படத்தின் இயக்குநரும் நூலாசிரியருமான ஞான ராஜசேகரன் பேசும்போது,
“நான் இயக்கிய முதல் படம் ‘மோக முள்’. அந்தப் படத்தின் மூலம்தான் நான் இயக்குநர் ஆனேன்.நான் வேறொரு துறையில் இருந்தேன். ‘மோகமுள் ‘ இல்லா விட்டால் நான் இயக்குநராக ஆகியிருப்பேனா என்று சந்தேகம்தான்.
என்னை இயக்குநராக்கி இன்றுவரை எனக்கு அடையாளமாக இருப்பதும் ‘மோகமுள்’ தான் என்று சொல்வேன்.மூன்றாண்டு ஆண்டுகாலம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.இந்த படத்திற்குக் கிடைத்த விருதுகள், பாராட்டுகள் போன்ற அங்கீகாரம் தான் எனக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் அறிமுகமான அபிஷேக் பெரிதாக வளர்ந்திருக்கிறார் . குறிப்பாகத் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குகிறார்.படத்தில் நான் அறிமுகப்படுத்திய அர்ச்சனா ஜோக் லேக்கரும் வளர்ந்து புகழ் பெற்றார். அறிமுகப்படுத்தியவன் என்ற வகையில் இது எனக்கு மகிழ்ச்சி.’மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ என என் படங்களுக்குத் தன் ஒளிப்பதிவின் மூலம் பெரிய பலமாக இருந்த தங்கர்பச்சான் இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி.படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர் வாஸந்தி கூறினார் “இது தி. ஜானகிராமனுக்கான சிறந்த அஞ்சலி ” என்று .அதை இப்போது உணர்கிறேன்.
இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்களை விட உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் ஏராளமான பேர் பார்த்திருக்கிறார்கள்.
படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. தி ஜானகிராமன் அவர்களின் நூற்றாண்டில் படத்துக்கான வெள்ளி விழா ஆண்டு வருவது மகிழ்ச்சி. அதனால் இந்நிகழ்வு கவனம் பெறுகிறது.எனக்கு ஒரு 50 பேராவது தொலைபேசி விசாரித்து இருப்பார்கள் “படத்திற்கான வெள்ளிவிழா கொண்டாட வில்லையா?எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று. அந்த அளவுக்கு ‘மோகமுள்’ இன்றும் ஒரு பேசுபொருளாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”என்றார்.
நடிகர் அபிஷேக் பேசும்போது,
” மோகமுள்’ தான் எனக்கு முதல் படம் .மும்பையில் இருந்த என்னைத் தேடிக் கண்டுபிடித்து இயக்குநர் இதில் நடிக்க வைத்தார்.எனக்கு தமிழே தெரியாது. ஆனாலும் தமிழ் பேசி என்னை நடிக்க வைத்தார்.
என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் “எந்த இன்ஸ்டிடியூட்டில் படித்தீர்கள்?” என்பார்கள்.நான் “மோகமுள் இன்ஸ்டிடியூட்டில் படித்தேன்” என்பேன். ‘மோகமுள்’ படத்தில் நடித்த போது மூன்றாண்டு காலம் கற்றுக்கொண்ட அனுபவத்தில்தான் இன்றுவரை என் பயணம் சென்று கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்தது.
மும்பையில் பிறந்து சென்னையில் செட்டில் ஆகி இருக்கும் நான், ‘இது எனக்கு எழுதி வைக்கப்பட்ட விதி ‘என்று நினைக்கிறேன் .அதுவும் இயக்குநர் எழுதி வைத்த விதி என்று நினைக்கிறேன்.
தமிழில் பேசத் தெரியாத எனக்கு இந்த படத்திற்குப் பின் தமிழகத்தில் ஓர் இடம் கிடைத்துவிட்டது .தமிழில் பேசவும் படிக்கவும் எழுதவும் கூட கற்றுக்கொண்டு விட்டேன்.அந்த வகையில் இயக்குநருக்கு நன்றி.இந்தப்படத்தின் நினைவுகள் நூறாண்டு தாண்டியும் இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியில் காவ்யா பதிப்பகத்தின் அதிபர் பேராசிரியர் ‘காவ்யா’ சண்முகசுந்தரம் பேசும்போது,
“தமிழ்த் திரையுலகில் எத்தனையோ இயக்குநர்கள் வருவார்கள் போவார்கள் .ஆனால் நிலைத்து நிற்பவர்கள் மிகவும் குறைவு அப்படி நிலைத்து நிற்கும் ஒருவர் தான் ஞான ராஜசேகரன்.அவர் இயக்கிய ‘மோகமுள்’ படம் சிறப்பாக வெற்றி பெற்றதுடன் பரவலான கவனத்தையும் பெற்றது. எத்தனையோ பேர் இந்தப் படத்தை எடுக்க முயன்றார்கள். ஆனால் அதில் வெற்றி பெற்றவர் ஞான ராஜசேகரன் மட்டும்தான்.’மோகமுள்’ தி .ஜானகிராமன் எழுதிய தன்னிறைவு பெற்ற நாவல் என்று சொல்லலாம். இது அவரது நூற்றாண்டு .படத்துக்கு இது வெள்ளிவிழா ஆண்டு.படத்தில் கதாநாயகனாகச் சிறப்பாக நடித்திருக்கும் அபிஷேக் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி.
நான் பெங்களூரில் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியபோது மாணவர்களுக்கெல்லாம் இந்தப் படத்தைப் பார்க்கச் செய்தேன். அப்படிப்பட்ட படத்தின் திரைக்கதை எங்கள் பதிப்பகத்தில் வெளிவருவது பெருமைக்குரியது.
ராஜசேகரன் இயக்கிப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ‘பாரதி’, ‘பெரியார் ‘ படங்களின் திரைக்கதைகளையும் எங்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதற்காகவும் பெருமைப்படுகிறோம்.
“என்றார்.
இயக்குநர் தங்கர்பச்சான் பேசும்போது ,
” இயக்குநரின் படங்களில் பணியாற்றியது ஒரு வகை மகிழ்ச்சி என்றால் இது மாதிரியான தருணங்களில் ஒருவரை ஒருவர் சந்திப்பது பெரிதும் மகிழ்ச்சியான அனுபவம் .நோய்த்தொற்றுக் காலத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி” என்றார்.
ஜெர்மனியிலிருந்து வந்திருந்த ஆய்வாளர் டாக்டர் சுபாஷினி பேசும்போது,
” இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையடைகிறேன். இந்த வாய்ப்பு அமைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மோகமுள் நான் பார்த்து ரசித்த படம் .அந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனாலும் இப்போது பார்த்தாலும் இந்தக் காலத்திற்கு ஏற்றது போல் இந்த படத்தின் போக்கு இருக்கும். இன்றைய தலைமுறைக்கும் பொருத்தமாக இருக்கும்படி இந்தப் படம் இருக்கும்.
தலைமுறை தாண்டி ரசிக்கும்படி இந்த படத்தின் கூறுகள் இருக்கும். அந்த நாவலை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார் இயக்குநர். குறிப்பாக இறுதிக் கட்ட காட்சிகள் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நினைக்க முடியும்.ஏனென்றால் அப்படி புரட்சிகரமாகக் காட்சிகள் நாவலில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ரசிக்கும்படி படத்தில் அமைத்திருப்பார். அதேபோல் அவர் இயக்கிய பாரதி, பெரியார் படங்களும் சிறப்பாக இருந்தன. நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் “என்றார்.
இதே விழாவின் மற்றொரு பகுதியாக ‘பாரதி’ படத்தின் திரைக்கதை நூலும் வெளியிடப்பட்டது. ‘பாரதி’ திரைக்கதையை இயக்குநர் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் வெளியிட்டார்.திருமதி சகுந்தலா ராஜசேகரன் பெற்றுக்கொண்டார்.அந்த நிகழ்வில் விருந்தினராகப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். நிறைவாக காவ்யா சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.