யூகித்தல் என்றால் யூகம் செய்,உத்தேசம் செய்தல் ஆராய்ந்து கூறுதல் என்று பொருள்படும்.
‘யூகி’ என்றால் யூகித்தல். யூகிப்பவன் யூகி அதனால்தான் மதியூகி என்கிறார்கள்.
அடுத்தது என்ன நடக்கும் என்று யூகி அதாவது யூகம் செய் என்று பல முடிச்சுகளை போட்டு அவிழ்கிற திரைக்கதைதான் யூகி படத்தின் மையம். ஒரே படத்தில் பல கதைகளைப் போட்டு பின்னிப்பிணைந்து முடிச்சு போட்டு , குழப்பி, திருப்பி உருவாகி உள்ள படம் தான் யூகி.
காணாமல் போன நபர், ஆள் கடத்தல், வாடகைத் தாய், கொலை, திட்டமிட்ட விபத்து, போலீஸ் ,அரசியல் , டிடெக்டிவ் எனப் பல தலைப்புகளில் கதைகள் கிளை விடுகின்றன.படம் எது சார்ந்த கதை என்று யோசிக்க வைக்கிறது. அதுதான் `யூகி’.
ஆனந்தி ஒரு கர்ப்பிணி. அடையாளம் தெரியாத ஒரு கார் வருகிறது.அவர் காணாமல் போகிறார்.அவர் கடத்தப்பட்டாரா? யார் கடத்தினார்கள்? யூகிக்க முடியவில்லை. நட்டி தலைமையில ஒரு முரட்டு கும்பல் ஒரு பக்கம், டிடெக்டிவ் நரேன் தலைமையில் இன்னொரு குழுவும் ஆனந்தியைத் தேடுகின்றன.இரண்டாவது குழுவில் கதிர் இருக்கிறார். ஆனந்தி யார், அவரை ஏன் இரண்டு குழுக்களும்தீவிரமாக தேடுகின்றன? யூகிக்க முடியவில்லை
சினிமா நடிகர் ஜான் விஜய் ஏன் சுட்டுக் கொல்லப்படுகிறார்? யார் யாருக்கு என்ன சம்பந்தம்? என்று பல கேள்விகளை எழுப்பி நகர்கிறது திரைக்கதை.இந்த கதைப் போக்கில் பல திருப்பங்கள் பல முடிச்சுகள் பல குழப்பங்கள் என கலந்து கட்டி உள்ளன.
தன் முதல் படத்திலேயே இப்படி ஒரு சிக்கலான கதையை எடுத்துக் கொண்டு படமாக்கிய அறிமுக இயக்குநர் ஜாக் ஹாரிஸ் பாராட்டுக்குரியவர்.
நரேன், கதிர், ஆனந்தி, நட்டி, ஜான் விஜய், வினோதினி , ஆத்மியா என நடித்துள்ள அனைவரும் தங்களது பாத்திரங்களில் இயல்பாக மின்னுகிறார்கள்.
ஜான் விஜய்யும், நட்டியும் தங்களுக்கே உரியவிதத்தில் அலட்சிய பாணியில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
‘யூகி’ படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்தே ஒரு த்ரில்லர் படத்துக்கான பரபரப்பு தொடங்கிவிடுகிறது.
ஆனந்திக்கான கதை, சிலைத் திருட்டு வழக்கு, பிரதாப் போத்தன் – நரேனுக்கு இடையேயான உறவு, ஆனந்தியை நட்டி தேடுவது, கதிர் – பவித்ரா தொடர்பு, ஜான் விஜய்க்கான கதை, கதிர் – ஆனந்தி உறவு எனப் பலதிசைகளில் பறக்கிறது கதை.
இத்தனை கிளைக் கதைகள், கதாபாத்திரங்கள் நிறைந்திருப்பதால், யாரைப்பின் தொடர்ந்து பார்வையாளர் செல்வது என்ற குழப்பம் மேலிடுகிறது. கண்ணைச் சிமிட்டி திறந்தால் புதிய கதை ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனந்தி வாடகைத் தாயாக வரும்படி காட்சிகள் உள்ளன. அதற்கான சட்ட திட்டங்கள் பற்றிய அறியாமை படத்தில் தெரிகிறது.மத்திய மாநில அதிகாரிகளின் அதிகார வரம்புகள் பற்றிய கேள்வியும் படத்தில் உள்ளது.
அந்தச் சிலைகடத்தல் விவகாரம்தான் என்ன என்கிற கேள்வியும் உள்ளது.
பார்வையாளரைக் கதையில் ஒன்றை வைத்த பிறகுதான் முடிச்சுகளைப் போட வேண்டும் .ஆனால் முடிச்சுகளைப் போட்டுப் போட்டு பார்வையாளர்களைத் திணறடித்து விடுகிறார் இயக்குநர்.
ஆனால் படம் முழுக்க ஏமாற்றிக்கொண்டு மட்டுமே இருந்தால், படமே ஏமாற்றமாகத்தான் அமையும் என்பதை ‘யூகி’ இயக்குநர் யூகித்து உணராதது ஏன்?
படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. ரஜ்சின் ராஜின் இசையில் பின்னணி படத்திற்குப் பலம்.
திருப்பங்கள் படத்திற்குப் பலம் தான். அதுவே அளவுக்கு அதிகமாகி விட்டால் திகட்டிக் குழப்பி விடும் அப்படி ஒரு அனுபவம் தான் யூகி.