‘கலகத்தலைவன் ‘விமர்சனம்

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகத் தலைவன்’.

உதயநிதி ஸ்டாலின், ஆரவ், நிதி அகர்வால், கலையரசன்,அங்கனாராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு கே.தில்ராஜ். இசை ஸ்ரீகாந்த் தேவா ,அரோல் கரோலி.

ஏற்கெனவே தான் இயக்கிய தடையறத் தாக்க, மீகாமன், தடம் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளவர் மகிழ் திருமேனி. இவர் சினிமாவின் திரை நுட்பத்தைப் புரிந்து கொண்டு காட்சிகள் அமைத்து வெற்றி பெற்றவர்.

எம். ராஜேஷ் போன்ற கமர்சியல் இயக்குநர்களுடன் இணைந்து ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு கதாநாயகனாகவே இதுவரை வலம் வந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

எல்லா நடிகர்களுக்கும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்.பட்டுப்பூச்சி கூட்டை உடைத்து வெளியே பறப்பது போல் ஒரு கட்டத்தில் வட்டத்தை விட்டு வெளியே வர வேண்டும். அப்படித்தான் உதயநிதிக்கு ‘நெஞ்சுக்கு நீதி’ மூலம் ஒரு புதிய மாற்றம் நிகழ்ந்தது. அந்த வரிசையில் வந்துள்ள படம்தான் ‘கலகத் தலைவன் ‘எனலாம்.

படம் எதைப் பற்றியது? எதைப் பேசுகிறது? என்று பார்த்தால்,இன்று நம்மை அறியாமலே நம் வாழ்வில் வியாபித்திருக்கும் கார்ப்பரேட் என்கிற மாஃபியாக்களின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுகிறது.

தொழில் செய்வதும் போர் செய்வது போன்றது தான்.போரில் எதிரிகள் கண்ணுக்குத் தெரிவதுண்டு.தொழிலில் வியாபாரத்தில் கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளைச் சந்திக்க வேண்டும். அவர்களைக் கண்டறிய வேண்டும்; அவர்களை வீழ்த்த வேண்டும் அப்போதுதான் தொழிலிலும் ஜெயிக்க முடியும்.

இப்படித்தான் புதிய வாகனம் ஒன்றை வியாபாரத்தில் இறக்குகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம்.அந்த வாகனம் வெளியிடும் புகை அதிகமாசு ஏற்படுத்துகிறது. இந்த உண்மையை மறைத்து ரகசியமாக வைத்துள்ளது. அரசு அனுமதிக்கும் மாசின் சதவீதத்தை விட அதிகமாக உள்ள விஷயம் யாரோ சிலரால் வெளியே தெரிகிறது. பிறகு அது பொதுவில் அம்பலமாகிறது.இதனால் அந்த நிறுவனம் அதிர்ச்சிக்குள்ளாகிறது. தங்கள் தொழில் ரகசியத்தை கசியவிட்டவர்கள் யார் என்று அறிய முற்பட்டு அதற்காக கூலியாட்களை அமர்த்துகிறது. அப்படி கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிழல் உலகில் செயல்படுகிறார் ஆரவ். அவர் ரகசியங்களை வெளியிட்டவர்களைக் கண்டுபிடிக்கிறாரா? இல்லையா?
ஆரவுக்குப் போட்டியாக எதிராக நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் ஆரவை எதிர்கொள்கிறாரா? வெல்கிறாரா? என்பதுதான் கலகத்தலைவன் படத்தின் கதை.

ஏசி அறையில் அமர்ந்து கொண்டு கணினிகளில் புழங்கிக்கொண்டு நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு உலகப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துக்கொண்டு பல தொழில்களில் இறங்கி வெற்றி பெற்றுள்ள கார்ப்பரேட்டுகளின் அந்தரங்கமான இன்னொரு குரூரமுகத்தை அம்பலப்படுத்தி உள்ளது இந்தப் படம்.தொழில் போட்டி என்று வந்தால் அவர்கள் எவ்வளவு கொடூரமாக இயங்குவார்கள் என்பதையும்
அவர்களுக்கு அதிகார வர்க்கம் எப்படித் துணை போகிறது என்பதையும் இந்தப் படத்தில் காட்டியுள்ளனர்.கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் இருக்கிற உட்பகையையும் இதில் வெளிப்படுத்தி உள்ளனர்.

இது போன்ற கதைகள் ஏற்கெனவே வந்தது போல் தோன்றும். ஒரு பெரிய வியாபார மாஃபியாவுக்கு எதிராக நிற்கும் ஒரு எளிய மனிதன் என்கிற கதை ஏற்கெனவே சினிமாவில் வந்திருந்தாலும் புத்திசாலித்தனமான சுவாரஸ்யமான திருப்பம் நிறைந்த காட்சிகளால் இந்தப் படத்தை விறுவிறுப்பான ஒரு படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர்.

உதயநிதி ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் செய்யாமல் சற்று முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். பார்வையிலும் உடல் மொழியிலும் உடல் தோற்றத்திலும் என புதிய வீரியத்தோடு வெளிப்பட்டுள்ளார் ஆரவ்.

பார்க்க அழகாக மட்டுமல்ல நடிக்கவும் தெரிந்த நடிகையாக இதில் பதித்திருக்கிறார் நிதி அகர்வால்.

படத்தில் நடித்திருக்கும் பிற நட்சத்திரங்களும் அவரவரும் தங்களுக்குக் கொடுத்த பணியைச் சிறப்பாக செய்துள்ளார்கள்.

கதாநாயகன் சார்ந்த ஒரு கதையாக உருவாக்காமல் அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்கும்படி சம வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கான இடத்தை கொடுத்துள்ளார் இயக்குநர்.

ஒளிப்பதிவு கே.தில்ராஜ். நிறைய காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. குறிப்பாக உச்சகட்ட காட்சியில் அவர் கேமராவின் பணியை அறிய முடிகிறது.
படத்தில் பரபரப்புணர்வைக் கடத்துவதில் படத்தொகுப்பு ஸ்ரீகாந்த்தின் பணி குறிப்பிடத்தக்கது.

பின்னணி இசையில் ஸ்ரீகாந்த் தேவா ஆச்சரியப்படும் வகையில் தனது பணியில் வெளிப்பட்டுள்ளார்.
பாடல்கள் இசை அரோல் கரோலி .அவரும் சோடை போகவில்லை.

மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான படத்தை வழங்கியுள்ளார் மகிழ்திருமேனி.

உதயநிதி ஸ்டாலின் தனது அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராகும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி இந்த படத்தில் உயர்ந்து நிற்கிறார்.