தன்னைப் போல தன் பிள்ளைகள் யாரும் ஊர், விவசாயம் என்று மண்ணோடு மண்ணாக வாழ்ந்து விடக் கூடாது என்று பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார் ராஜ்கிரண். ஒரு காலத்தில் இதை கௌரவமாக கருதியவர், பிற்காலத்தில் அவர்களின் பாசத்துக்காக ஏங்குகிறார். அவர்களில் ஒரு பேரனான சிவகார்த்திகேயன் ,அதாவது ரஜினி முருகன் சரியாகப் படிக்காமல் வேலையின்றி ஊர் சுற்றி வருகிறார்,பாசத்தோடு தாத்தாவையும் சுற்றி வருகிறார். பொறுப்பற்ற பிள்ளை என்று பெயரெடுத்த ரஜினி முருகன் எல்லாரது அபிமானம் பெற்ற ஒருவனாக எப்படி மாறுகிறான்? அதற்கு என்ன செய்கிறான் என்பதே ‘ரஜினி முருகன்’ படக்கதை.
பொன்ராம், சிவகார்த்திகேயன் ,இமான், சூரி கூட்டணியில் இன்னொரு படம். வருத்தப்படாத வாலிபர் சங்க வாசனையில் மற்றொரு படம். கலகலப்பும் செண்டிமெண்டுமே சினிமாவின் பலம் என்பதை புரிந்து சரிவிகித்த்தில் கலந்து கொடுத்துள்ளார் இயக்குநர் பொன்ராம்.
சிவகார்த்திகேயன் சூரியுடன் சேர்ந்து அடிக்கிற லூட்டியாகட்டும் கிர்த்தி சுரேஷின் மனதில் இடம் பிடிக்க அவரது வீட்டுக்கு எதிரே டீக்கடை போட்டு செய்கிற கலாட்டாவாகட்டும் எல்லாமே ஜாலி ரகளை.
கிர்த்தி சுரேஷ் பார்க்க அழகு, வந்தாலே போதும் ரகம். சிரிப்பும் நடிப்பும் பளிச் .சிவகார்த்திகேயன் சூரிகூட்டணி ரசிக்க வைக்கும் காமெடி என்றால் எட்டுப்பட்டி பஞ்சாயத்துகளில் பெரிசுகள் செய்வது செம காமெடி .கம்பீரம் ப்ளஸ் செண்டிமெண்ட் ஏரியாவில் ராஜ்கிரண் தனி ஆவர்த்தனம் செய்கிறார்,கலக்குகிறார்
ஏழரை மூக்கனாக வில்லத்தனம் செய்யும் சமுத்திரக்கனியின் புதிய முகம்,புதிய தரிசனம். ஞான சம்பந்தன். அச்சுதகுமார் இருவரும் நடிப்பில் அளவான அழகானபதிவு.
வெறும் கலகலப்பு படமாக இல்லாமல் குடும்பத்தைப் பிரிந்த பிள்ளைகள், வெளிநாட்டு வாசம் பற்றியும் கூறி சிந்திக்க வைத்துள்ளார் பொன்ராம் .கரம் மசாலா உணவில் இஞ்சி, பூண்டு போல இவை கலந்துள்ளது இதயத்துக்கு இதம். இமானின் இசையில் மாஸ் பாடல்கள் பாலசுப்ரமணியெம் தன் கேமரா மூலம் படதை கலர் புல்லாக மாற்றியுள்ளார் பொன்ராம் மறுபடியும் பாஸாகி விட்டார்.