சுனைனா,ஆனந்த் நாக், ரித்து மந்திரா, விவேக் பிரசன்னா, நிவாஸ் அதிதன், கஜராஜ், பவா செல்லதுரை, பாக்சர் தீனா நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை மலையாளத்தில் ’பைப்பின் சுவத்திலே பிரணாயம்’, ‘ஸ்டார்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார். சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
பெரும்பாலான படங்களில் பெண்களின் பாலியல் சித்திரவதைகள், துன்பங்கள், கூக்குரல்கள், அபயக் குரல்கள்,அலறல்கள் என்று பெண்களைப் பலவீன வர்க்கமாகக் காண்பித்து வருகிறார்கள்.பெரும்பாலும் இவை ஆணியப் பார்வையோடு இருக்கும்.
ஒரு பெண்ணுக்குள் அமைந்துள்ள நியாயத்தையும், வீரியத்தையும் தீவிரத்தையும் மூர்க்கத்தையும் காண்பிக்கும் ஒரு படமாக ‘ரெஜினா ‘உருவாகி உள்ளது.
கணவனைக் கொன்றவர்களுக்கு எதிராக நியாயம் கேட்டு எழுப்பும் ரெஜினாவின் அழுகுரலோடுதான் தொடங்குகிறது படம். ஆனால்
பாதிக்கப்பட்ட ஒரு பெண் பழி வாங்கினால் அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை மிக அழுத்தமாக ஒரு திரில்லர் படமாக உருவாக்கியிருக்கிறார்கள் அதுதான் ரெஜினா.
தன் கணவனைக் கொடூரமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதை என்று ஒரு வரியில் சொல்லி விட்டாலும் அவள் பழிவாங்கும் விதத்தையும் அத்தனை தடைகளையும் மீறி எப்படி தன் காரியத்தில் சாதிக்கிறாள் என்பதையும் தடதடக்கும் பரபரப்போடு கூறியிருக்கிறார்கள்.
இப்படத்தில் கதை நாயகியாக டைட்டில் ரோல் ஏற்றுள்ள சுனைனா , தான் வழக்கம் போல மரத்தைச் சுற்றி ஆடும் கதாநாயகி அல்ல என்று நிரூபித்துள்ளார். பழிவாங்கும் படலத்தில் அதிகம் பேசாமலேயே இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அமைதியான நடிப்பில் ஆர்ப்பரிக்கிறார்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று காட்டும் படியான வேடம் ,அதற்கான காட்சிகள்.
இப்போது வருகிற படங்களில் எல்லாம் முகம் காட்டி வேகமாக முன்னேறி வரும் விவேக் பிரசன்னா இதில் எதிர்மறை நிழல் படிந்த பாத்திரத்தில் எதார்த்தமாக நடத்துள்ளார்.கொடூர முகம் காட்டி பாக்சர் தீனா கலங்கடிக்கிறார்.சமூக செயல்பாட்டாளராக பவா செல்லத்துரை வருகிறார். படத்தில் உலவும் எதிர்மறைப் பாத்திரங்களும் அதிகார வர்க்க காக்கிகளும் கூட மனதில் பதிகின்றன.
படத்தில் நடிப்புக் கலைஞர்களைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லொகேஷன்களும் பெரும் பலமாக உள்ளன.
கதை சொல்லும் நிறத்தில் ஒளி அமைப்பைக் காட்டி ஒளிப்பதிவில் தனித்திறமை காட்டி உள்ளார் ஒளிப்பதிவாளர் பவி கே.பவன். ஒரு ஆக்சன் திரில்லர் படத்தில் தனது திறமையை பின்னணியில் மட்டுமல்ல பாடலிலும் காட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் சதீஷ் நாயர்.
படத்தில் சில காட்சிகளும் வசனங்களும் இப்படத்தை இயக்கிஉள்ளது ஒரு மலையாள இயக்குநர் என்று உணர வைக்கிறது .அதை செப்பம் செய்திருந்தால் இந்தப் படம் மேலும் உயர்ந்திருக்கும்.பெண்கள் திரைப்படம் பார்க்க வருவதில்லை என்ற குறையை இந்தப் படம் போக்கும் எனலாம்.