உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யாதே என்று கிராமங்களில் கூறுவது உண்டு .ரெண்டகம் என்றால் துரோகம் என்று விளங்கிக் கொள்ள முடியும் அப்படி ரெண்டகம் என்கிற தலைப்பில் அரவிந்தசாமியை பிரதான நாயகனாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் இதில் தாதாவாக வருகிறார்.
மிகப்பெரிய தாதாவான அரவிந்த சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது நிழல் உலகக் குழு. அவரும் அரவிந்த்சாமியுடன் நட்பாகப் பழகி நினைவுகளை மீட்டு தகவல்களைப் பெற முயற்சி செய்கிறார்.மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்து அவரை வசப்படுத்துகிறார்.
அதற்கான செயல் திட்டத்தில் ஒரு பகுதியாக மும்பையிலிருந்து கோவாவுக்கு ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள்.
அதன்பின் என்ன நடந்தது? என்பதைப் பயங்கர திருப்பங்களுடன் சொல்லியிருக்கும் படம்தான் ரெண்டகம்.
ஒரு திரையரங்கில பாப்கார்ன் விற்றுக் கொண்டு பரமசாது போல் அறிமுகமாகும் அரவிந்தசாமி, அடுத்தடுத்த காட்சிகளில் வேகமெடுக்கிறார்.அலட்டாமல் தாதாவாக வந்து மிரட்டுகிறார்.கோவாவில் அவர் போடும் சண்டை காட்சிகள் அதகளம்.
ஜாக்கிஷெராப்பின் பிரமாண்ட அரண்மனைக்குள் அவர் நடத்தும் போர் மிரள வைக்கிறது.
குஞ்சக்கா போபனுக்கு நல்ல வேடம்.. ஈஷா ரெப்பாவுடனான காதல், ஆடுகளம் நரேனுடனான பாசம் ,அரவிந்தசாமியுடனான பயணக்காட்சிகள் என எல்லா இடங்களிலும் நடிப்பில் பதிகிறார். அழகான இளம்காதலரான அவருக்கும் அவருடைய நியாயமான ஆசைக்கும் அப்படி ஒரு சோகம் வரும் என்று யாராலும் எதிர்பார்க்கவே முடியவில்லை.
நான் டேவிட் என்றால் கிச்சு யார்? என்று குஞ்சக்காபோபன் கேட்பதும் அதற்கு அரவிந்த்சாமி சொல்லும் பதிலும் ஆழமானவை. சிந்திக்க வேண்டியவை.
பெண்களை எக்காலத்திலும் நம்பிவிடவே கூடாது என்று கூறும் ஈஷா ரெப்பாவும் அதைச் சரியாகச் செய்து மேலும் பயமூட்டுகிறார்.
கெளதம்ஷங்கரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் பதற வைத்தாலும் காதல் மற்றும் பயணக்காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.
அருள்ராஜ்கென்னடியின் பின்னணி இசை அளவு, அழகு.
கதை திரைக்கதையை எழுதியிருக்கிறார் எஸ்.சஞ்சீவ், இயக்கியிருக்கிறார் டி.பி.பெளினி.
தொடக்கத்தில் தொய்விருந்தாலும் போகப் போக வேகம் எடுத்து இறுதியில் இருக்கை நுனிக்கு வர வைத்து விடுகிறது படம்.