மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் கருத்தாகச் சொல்லி உள்ளார்கள்.தூக்கம் கெட்டுப் போனால் அது மனித மனத்தை எவ்வளவு பாதிக்கும் என்பதைப் படத்தின் கதை மூலம் விளங்க வைத்துள்ளார்கள்.
நாயகன் பாபி சிம்ஹா ஐடி நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
ஒரு டீம் லீடராக இருக்கும் அவர், தன் வேலையில் பரபரப்பாக இருப்பவர்; பணிகளை மற்றவர்களை விட விரைவில் முடித்து தருவதில் வல்லவராக இருக்கிறார். இரவு பகல் பாராது உழைக்கிறார்.
ஆனால் அலுவலகத்தின் பணி அழுத்தம் அவரை மனப்பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது.அதிலிருந்து தற்காலிகமாக மீண்டு வரலாம் என்று மனைவி காஷ்மீரா பர்தேசி உடன் வெளியே சென்று தங்கி வர விரும்புகிறார்.
ஒரு வனப் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருவரும் தங்குகிறார்கள்.
காஷ்மீராவிற்கு மூச்சுப் பிரச்சினை உண்டு அதற்காக அவர் மருந்து வாங்குவதற்காக வெளியே செல்கிறார். திரும்பி வந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை .விடுதியில் விடுதிக்காப்பாளரும் இவரை யாரோ போல பார்க்கிறார். அவர் அங்கு தங்காதது போல் பேசுகிறார். அதன் பிறகு பல எதிர்பாராத குழப்பங்கள் வருகின்றன,திடுக்கிடும் சம்பவங்கள் நடக்கின்றன. குழப்பங்களும் சம்பவங்களும் என்ன என்பதற்கு விடை சொல்வது தான் ‘வசந்தமுல்லை’ படத்தின் கதை.
வசந்த முல்லை என்பது தங்குமிடத்தின் பெயர். அதை படத்திற்குப் பெயராக வைத்திருக்கிறார்கள். பாபி சிம்ஹா சற்று இடைவெளிக்குப் பின் நாயகனாக வருகிறார் .அவர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பரபரப்பாகப் பணியாற்றும் போது , மன அழுத்தத்திற்கு உள்ளாகி வேறுவித முகம் காட்டும் போது என மாறுபட்ட நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
நாயகியாக வரும் காஷ்மீரா பர்தேசி தோற்றத்திலும் நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.
யாரும் எதிர்பாராத தோற்றத்தில் வரும் ஆர்யா கதையின் திருப்பமாக வருகிறார்.
படத்தில் கொச்சு பிரேமன், ரமா பிரபா, தீபக் பரமேஷ், மோகன், கிரீஸ் நாயர், மோனா, சரத் பாபு என நடித்திருக்கும் பலரும் தங்கள் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு செய்துள்ள கோபி அமர்நாத் பெரும்பாலும் இரவில் கதை நடப்பதை தனது ஒளி அமைப்பின் மூலம் வித்தியாசப்படுத்திக் காட்டி உள்ளார். ஒரே இரவில்குறிப்பிட்ட பகுதியிலேயே பெரும் பகுதி கதை நடந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு கோணங்களில் வித்தியாசப்படுத்தி உள்ளார்.



ராஜேஷ் முருகேசன் இசையில் குறை இல்லை.ஒரு திரில்லர் படத்திற்கான பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளார்.
விவேக் ஹர்ஷனின் படத்தொகுப்பு திரில்லர் படத்திற்கு அவரது பணியை வெளிக்காட்டி உள்ளது.
ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை டைம் லூப் காட்சிகளைக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை உருவாக்கி இயக்கி உள்ளார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா.
சில சம்பவங்கள் பரபரப்புடன் குழப்பவும் செய்கின்றன. இறுதியில் தான் அதற்கு விடை கிடைக்கும் வகையில் இயக்கி உள்ளார்.
கை நிறைய பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஐ டி உலகத்தில் ஆரோக்கியத்தைத் தொலைக்கும் இக்கால இளைஞர்களின் அவலத்தை இப்படத்தில் எடுத்துக்காட்டி எச்சரிக்கிறார்கள்.அதற்காக இந்தக் கதையை வரவேற்கலாம்.
திரில்லர் ரசிகர்கள் ரசிப்பார்கள்.