வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,
”சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி.


ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார். விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை. ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி ” என்றார்.