‘விடுதலை’ பாகம் 1 விமர்சனம்

விஜய்சேதுபதி, சூரி, கெளதம்மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, சேத்தன், தமிழ், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயமோகன் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் வெற்றிமாறன்.ஒளிப்பதிவு வேல்ராஜ், இசை இளையராஜா.தயாரிப்பு ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார்.

தர்மபுரி போன்ற ஒரு மலையும் மலை சார்ந்த பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள்.அங்கே ஒரு சுரங்கம் தோண்ட அரசாங்கம் திட்டமிடுகிறது .ஆனால் தங்கள் பகுதியின் கனிம வளத்தை சுரண்டக்கூடாது. தங்கள் பகுதியின் கனிம வளங்கள் தங்கள் மக்களுக்கே என்று எதிர்த்துப் போராடுகிறார் ‘வாத்தியார் பெருமாள்’, அதாவது விஜய் சேதுபதி. மக்கள் படை என்கிற தனது அமைப்பின் மூலம் தலைமறைவாக இருந்து கொண்டு போராடி அதிகார வர்க்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியங்கள் கொடுக்கிறார். அவரைப் பிடிக்கும் தனிப்படை ஒன்று அந்த மலைப்பகுதியில் முகாமிட்டுத் தேடி வருகிறது. அந்தப் படையில் புதிதாக வந்து வேலைக்குச் சேர்கிறார் சூரி. அவர்,டிரைவர் குமரேசனாக அவர் அந்தக் காவல்துறை சிறப்பு குழுவில் இணைகிறார்.

விஜய் சேதுபதியை முகம் தெரியாமலேயே தேடிக் கொண்டிருக்கிறது சிறப்புக் காவல் படை. ஆனால்அங்கு புதிதாக வந்த சூரி அவரைப் பார்த்து இருக்கிறார். அங்குள்ள ஒரு மலை வாழ் குடிப் பெண்ணுக்கும் சூரிக்கும் இடையில் காதல் மலர்கிறது.

அந்தப் பெண்ணின் உறவினர் தான் தீவிரவாதியாகத் தேடப்படும் விஜய் சேதுபதி என்பது சூரிக்குத் தெரிகிறது. சூரி காட்டிக் கொடுக்கிறாரா? அவர்களுக்குள் உள்ள காதல் என்ன ஆகிறது விஜய் சேதுபதியைப் பிடித்தார்களா? என்பது வரை விடுதலை முதல் பாகத்தின் கதை சொல்கிறது.

மக்கள் மத்தியில் பிரபலமான தீவிரவாதி மக்களுக்கு நன்மை செய்யும் தீவிரவாதி அதைத் தேடிப் பிடிக்கும் ரகசிய போலீஸ். உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு, காட்டிக் கொடுக்காத ஜனங்களின் விசுவாசம் போன்ற அனைத்துமே கதையாகச் சொன்னால் பல படங்களில் பார்த்தது போல் தோன்றும் ஆனால், வெற்றிமாறன் தன் திரைமொழியால் இந்தக் கதையை வேறு விதமாக வேறு பரிமாணத்தில் கூறி அனைவரையும் அதிர வைத்து ரசிக்க வைக்கிறார்.

அந்த மலைப் பகுதிக்கு வேறொரு போலீஸ்காரருடன் சூரி வந்து நடந்து செல்வதிலிருந்து கதை தொடங்குகிறது.சில நிமிடங்களிலேயே நம்மை கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிறார் இயக்குநர்.
காட்டுப்பாதையில் சூரி நடந்து செல்வது முதல் கதைக்குள் நாமும் ஐக்கியமாகி .விடுகிறோம் அதன் பிறகு அந்த சிறப்புக் காவல் படை குழுவில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் விவரமாகப் பதிவு செய்துள்ளார்.
பயமும் பதற்றமும் உள்ள சூழ்நிலையில் இருந்து அந்த மலை கிராமத்தில் இருந்து வரும் ஒரு பெண்ணாக பவானி ஸ்ரீ நடித்துள்ளார்.

போலீஸ் குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் உள்ளூர் அப்பாவி மக்களை சித்திரவதை செய்வது இதிலும் இருக்கிறது. போலீஸின் வதைமுகாம் காட்சிகள் கண்ணில் ரத்தம் வர வைக்கின்றன.

நகைச்சுவை நடிகராக இதுவரை பார்த்த சூரி இதில் ஒரு குணச்சத்திரமாக கதையின் பிரதான நாயகனாக வருகிறார். 10 நிமிடத்திற்குள் அவரை அந்த பாத்திரத்தோடு ஒன்றச் செய்து நம்மை பழைய சூரியை மறக்கச் செய்து விடுகிறார்கள் .அந்த கதாபாத்திரத்தையே நாம் பார்க்கிறோம் .


படத்தில் அதிகம் பேசப்பட்டு குறைவாக காட்டப்பட்ட அந்தப் பெருமாள் பாத்திரத்தில் விஜய் சேதுபதி வருகிறார். குறைவான காட்சிகளில் தோன்றினாலும் அவரைப் பற்றி பேசப்படும் கூற்றுகளில் இருந்து அவரது கதாபாத்திரத்தை மனதிற்குள் உருவம் செய்து கொள்ள முடிகிறது.அவர் தோன்றும் காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடிக் காட்சிகள்.

தீவிரவாதியைத் தேடும் பயணத்தில் காவல்துறையினர் பேசிக்கொள்ளும் பேச்சுகள், எள்ளல்கள் என்று எதார்த்தமான வசனங்கள் மூலம் கைத்தட்டல்களை அள்ளுகிறார்கள்.

சிறப்பு காவல் படை அதிகாரியாக சேத்தன் நடித்துள்ளார் .புதிதாக வரும் துணை ஆணையர் கௌதம் மேனன் அஞ்சாத துணிவும் அலட்சியமான பேச்சும் உடல் மொழியும் என நடித்துள்ளார்.

தலைமைச் செயலாளராக வரும் ராஜீவ்மேனனும் அந்தப் பாத்திரத்தை புரிந்துகொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.

அது மட்டுமல்ல அந்தக் காவல் படையில் பணியாற்றும் காவலர்களின் பேச்சும் எள்ளலும் என ஒவ்வொன்றும் நம் மனதில் பதிகின்றன.

காடு மேடு என்று அலைந்து திரிந்து வேல்ராஜின் ஒளிப்பதிவுக் குழு பணியாற்றியுள்ளது .தன் பங்கைச் சிறப்பாக செய்துள்ளது. இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா இக்காலத்துக்கும் தான் பொருத்தமானவர் என்று தன் இசையின் மூலம் தெரிவித்துள்ளார். பாடல்களிலும் பின்னணி செயலும் அவர் இன்றைக்கும் உயிர்ப்புடன் உள்ளார்.

காவல்துறையின் அதிகாரங்கள் அவலங்கள் சுரண்டல்கள் அனைத்தையும் பேசுகிறது படம்.

படத்தின் இறுதியில் வரும் காட்சிகள் இரண்டாம் பக்கத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது.

விடுதலை ஒரு வீரியமிக்க கதையில் அழுத்தமான திரைக்கதையில், இயல்பான வசனங்களில், அனாயாசமான திரைமொழியில் அனைவரையும் கவரும் ஒரு படம்.