‘விடுதலை பாகம் 2’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கிஷோர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், பவானி ஸ்ரீ ,ராஜீவ் மேனன், கெளதம் வாசுதேவ் மேனன், போஸ் வெங்கட்,சேத்தன் ,வின்சென்ட் அசோகன் நடித்துள்ளனர்.வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.இளையராஜா இசையமைத்துள்ளார் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.கலை ஜாக்கி. ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.

விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் பெருமாள் வாத்தியார் கைது செய்யப்படுவதோடு முடியும். இந்த ‘விடுதலை பாகம்-2 ‘,போராளியாக மாறிய அவரது பின்புலங்களையும் ரத்தம் தெறிக்க தெறிக்க அவரது வாழ்க்கைப் பயணத்தையும் கூறுகிறது.

இயற்கை வளம் சுரண்டலுக்கு அரசு அனுமதி கொடுப்பதற்கு எதிராக பெருமாள் வாத்தியார் போராடுகிறார்.முதல் பாகம் மலைக் கிராமத்தில் அப்பாவி மக்கள் மீது தேடுதல் என்கிற பெயரில் காவல்துறையினர் நடத்தும் இரக்கமற்ற அத்து மீறல்கள் பற்றிப் பேசி இருக்கும்.இரண்டாம் பாகம் பெருநாள் வாத்தியாரைக் கைது செய்த காவலர் எனது அம்மாவுக்கு எழுதிய கடிதத்தைப் படிப்பது போல் அவரது கோணத்தில் கதைக் காட்சிகள் விரிகின்றன.
முதல் பாகத்தில் மலைக் கிராமம், மண் சார்ந்த மக்கள், காவல்துறையினர் நுழைவு, அராஜகங்கள் பற்றிக் கூறிய இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் மக்களுக்காகப் போராடும் களப்போராளிகளின் அகம் புறம் பற்றிப் பேசியுள்ளார்..மக்களுக்காக போராடுபவர்கள் சந்திக்கும் வலிகளை, மரணங்களை இதில் காட்டியுள்ளார்.அந்தப் போராளிகளின் குடும்பங்களின் வலிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவை இந்த இயந்திர மயமாகிப் போன உலக மயமாக்கல் பொருளாதாரத்தில் திளைக்கும் தலைமுறைக்கு பாடம் போல் உள்ளன.

அதிகாரவர்க்கம் வசதியாக அமைத்து வைத்துள்ள பண்ணை அடிமை முறை, உழைக்கும் வர்க்கப் பெண்களை நுகர் பொருளாகக் கருதும் பண்ணைகளின் அராஜகம்,உழைப்புக்கு நியாயமான கூலி கேட்டால் செய்யப்படும் மிருகத்தனமான தாக்குதல்கள்,மரணங்கள் போன்றவற்றைக் காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.பெருமாள் வாத்தியார் எப்படி ஒரு போராளியாக படை திரட்டி பேருரு கொண்டு மக்களுக்காக போராடினார் என்பதை, அவருக்குள் சித்தாந்தம் நிறைந்து அவரை எப்படி மாற்றியது என்பதையும் கூறுகிறது படம்.

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையின், உட்கருவை வைத்துக்கொண்டு திரை மொழிக்கான புனைவு கலந்து விரிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

இந்தப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன் எனப் படத்தில் வரும் நடிப்புக் கலைஞர்கள் தங்கள் பங்களிப்பின் மூலம் இந்தப் படைப்பிற்கு நியாயம் சேர்த்துள்ளார்கள்.
தோழர் கே.கே.கதாப்பாத்திரத்தில் வரும் கிஷோரின் இயல்பான நடிப்பு படத்துக்குப் பெரும்பலம்.

இப்படத்தில் வரும் காதல் காட்சிகளிலும் கூட வெற்றிமாறன் தன்முத்திரையைப் பதித்திருக்கிறார்.

மக்களுக்காக உழைக்கும் பாதையில் ஒப்பனையற்று மாசு ,தூசு, ரத்தம் என்று இருக்கும் இயக்கவாதிகளின் இயல்பான காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் இதம்.மஞ்சு வாரியாரின் தலைமுடி நறுக்கப்பட்ட காட்சிகளுக்கு தரப்பட்டுள்ள அழுத்தம் சமூகத்தில் இனி மஞ்சு வாரியர் ஸ்டைல் என்று பரவக்கூடும்.

நேற்றைய சமுதாய போராட்டக்காரர்களின் கண்ணீரின் விளைவாகத்தான் நாம் இன்று சிரித்துக் கொண்டிருக்கிறோம் .நாம் இன்று வாழும் வாழ்க்கையும் நமக்குள்ள உரிமைகளும் உடைமைகளும் பல களப்போராளிகளின் ரத்தமும் சதையும் ஊனும் உயிரும் போராட்டப் பலிக்குப் படையல் செய்ததன் விளைவாக வந்தவை என்பதை உரக்கப் பேசி உள்ளது இந்தத் திரைப்படம்.

விஜய் சேதுபதி, ஓர் ஆசிரியர், சட்டத்தை மதிக்கும் பொதுவுடைமைக்காரர், இயக்கவாதி, ஆயுதப் போராட்டக்குழுத் தலைவர், காதலர், கணவர் எனப் பல்வேறு முகங்களில் வெளிப்பட்டுள்ளார் அவற்றுக்கான நடிப்புக் தருணங்களை அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.அவரது மனைவியாக, அல்ல இணையராக வரும் மஞ்சு வாரியர் தன் பாத்திரத்தால் ஈர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கடினமான உழைப்பு காட்சிகளில் தெரிகிறது.பல்வேறு இடங்களில் தனது கேமராவின் அசைவுகளால் காட்சிகளை அர்த்தப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக கென் வரும் சண்டைக் காட்சியை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை பிரமாதம் காட்டியுள்ளது.மென்மை, வன்மைக் காட்சிகளில் பின்னணி இசை வேறுபாட்டை உணர முடிகிறது.

ஏராளமான சமூக அநீதி,அக்கிரம,அதர்ம காட்சிகளை வைத்து ஒரே படத்திற்குள் இன்னொரு படம் என்கிற அளற்கு ஏராளமானவை நிறைந்துள்ளன.
ஆங்காங்கே கூர்மையான வசனங்கள் குறை இல்லாமல் நிறைந்துள்ளன.“வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது”போன்றவை சிறு உதாரணங்கள்.
இப்படத்தின் மூலம் இயக்குநர் வன்முறைப் பாதையை ஆதரிக்கிறாரா என்ற கேள்வி எழலாம்.ஆனால் படத்தின் சாராம்சம் ஆயுதப் போராட்டமும், வன்முறையும் விடுதலைக்கு வழிவகுக்காது என்பதுதான்.ஜனநாயகமே மகத்தான ஆயுதம் என்று உணர்த்துகிறது.பல்லாண்டுகளாக பொதுவுடமை சித்தாந்த வாதிகள் கூறும் வார்த்தைகளுக்கெல்லாம் பொருள் கூறியுள்ள இந்த ‘விடுதலை பாகம்-2’.பொழுதுபோக்கும் திரைப்படங்கள் மத்தியில் பழுது நீக்கும் பாதையில் உருவாகி உள்ளது என்று கூறலாம்.