சினிமாவில் இயக்குநர் ஆகவேண்டும் என்று ஒருவரும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று இன்னொருவரும் சென்னையில் போராடுகிறார்கள் .பலரிடமும் கதை சொல்லி. மெட்டுப் போட்டு அலுத்து விடுகிறார்கள். நல்ல தயாரிப்பாளருக்காக இருவருமே தவமாகத் தேடலைத் தொடர்கிறார்கள்.
ஒரு நிலையில் இருவரும் காதலிலும் விழுகிறார்கள். ஒருவரின் காதலி சினிமாவை வெறுக்க , இன்னொருவர் காதலியோ சினிமாவை ஆதரிக்கிறார்.
இந்நிலையில் ஒரு படமும் ஒப்பந்தமாகி விரைவில் இசை என்று போஸ்டரும் ஒட்டப் பட்டு படப்பிடிப்புக்கும் தயாராகிறார்கள்.படப்பிடிப்புக்கு முதல் நாள் ஒரு கொலைப் பழியில் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து மீண்டார்களா அவர்களது கனவு என்ன ஆனதே என்பதே ‘விரைவில் இசை’ படம்.
படத்தில் மகேந்திரன்தான் இயக்குநர் ,திலிப் ரோஜர்தான் இசையமைப்பாளர் என நடித்துள்ளனர். படத்தின் முதல்பாதியில் சினிமாவில் இலட்சிய இளைஞர்கள் படும் சிரமங்களை காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர் வி.எஸ்.பிரபா..
மறுபாதியில் அவர்கள் ஒரு பிரச்சினையில் சிக்குவதும் குழந்தைகள் பாலியல் கொடுமைபற்றி காட்சிகள் வருவதும் திசைதிருப்பலாக மட்டுல்ல திணிப்பாகவும் தோன்றுகிறது.அதுவே கதையைத்தடம் புரளவும் வைக்கிறது. திரைக்கதையில் வேகத்தைக் கூட்டியிருக்கலாம்
படத்தில் வரும் உதவி இயக்குநர் பற்றிய இயக்குநர் பிரபாவின் கவிதை வரிகள் அர்த்தம் உள்ளவை. ஒருவரிடம் படத்தயாரிப்பாளர் என்று கனவுடன் கதை சொல்ல மகேந்திரன் செல்ல, அவரைத் தூங்கவைக்கத்தான் தினம் ஒரு கதை சொல்ல அழைக்கப்பட்டதையும் அப்படிச் சென்றதையும் அறியும் காட்சி சரியான கலகலப்பு . சஞ்ஜெய் சங்கர் புதியவரவு அவரை இன்னமும் பயன்படுத்தி இருக்கலாம்.
எம்.எஸ்.ராமின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. குறிப்பாக குழந்தைகள் பாடும் அந்தப்பாடல் பாசிடிவ் எனர்ஜி தரும். நடித்தவர்கள் யாருக்குமே பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லாமல் காட்சிகளில் வருகிறார்கள். இது படத்தின் பலவீனம். டீக்கடைக்காரராக வருகிற டெல்லி கணேஷ் மட்டும் நினைவில் பதிகிறார்.சினிமாவுக்குள் சினிமா கதையான இப்படத்தில் இன்னமும் எதிர்பார்த்தோம் .