‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம்

omsanthiom2sஒரு பஸ் விபத்தில் சிக்கிப் பிழைத்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். உடன் வந்த ஐந்து பேர் இறந்து விடுகிறார்கள். அவர்களின் ஆத்மாக்கள்  ஸ்ரீகாந்தைத் தொடர்கின்றன. அவர்களை ஸ்ரீகாந்தால் மட்டுமே காணமுடிகிறது; பேச முடிகிறது.

அந்த ஐந்து பேருமே ஆளுக்கொரு பிரச்சினையுடன் நிறைவேறாத ஆசையுடன் இறந்து விடுகிறார்கள் தங்கள் ஆசையை, கனவை  ஆத்மாவாக வந்து ஸ்ரீகாந்தை வைத்து நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் நீலத்தை காதலிக்கிறார். ஆனால் தன்னந்தனியே ஆத்மாக்களுடன் ஸ்ரீகாந்த் பேசிக் கொண்டிருப்பது காதலி நீலத்துக்குப் பிடிக்கவில்லை. அவர் ஒரு மனநோயாளியோ என சந்தேகப் படுகிறார். அதனால் அவர்களுக்குள் பிரிவு வருகிறது. இதை அறிந்த அந்த 5 ஆத்மாக்களும் காதலர்களைச்  சேர்த்து வைக்க முயல்கின்றன.  முடிவு என்ன என்பதே ‘ஓம் சாந்தி ஓம்’  படத்தின் கதை.

ஆவி, பேய், பிசாசு, பூதம், தீயசக்தி என்று பயமுறுத்தும் கதைகளிலிருந்து இறந்தவர்களின் ஆத்மா என்கிற கற்பனை பயமுறுத்தாத இனிய கற்பனையாக இருக்கிறது.

அந்த ஐந்து பேருடைய முன் கதை பரிதாபப் பட வைக்கிறது.படத்தின் முதல் பாதி சற்று மித வேகத்தில் நகர்ந்தாலும் மறுபாதியில் சுவாரஸ்யம் காட்ட முயன்றிருக்கிறார்  இயக்குநர் சூர்ய பிரபாகர்.

ஸ்ரீகாந்த் பாத்திரமறிந்து அளவாக நடித்து இருக்கிறார். அவருக்குள் குழந்தை ஆத்மா புகுந்து குழந்தையாக மாறி ஐஸ் க்ரீம் சாப்பிடும் இடம் கலகலப்பு. நீலம்  தோற்றத்தில் ,நடிப்பில் சுமார் ரகம்.

நான் கடவுள் ராஜேந்திரன் வவ்வால் பாண்டியாக வந்து கலகலப்பூட்டுகிறார். நரேன் வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

மிதமாக நகரும் காட்சிகளில் பரபரப்பு ,வேகம் கூட்டியிருந்தால் மனம் சாந்தி அடையும்படி  படம் அமைந்திருக்கும். ஆவி, ஆத்மா நல்ல சக்தியே  அஞ்ச வேண்டாம் எனக் கூறியுள்ள படம்.