இயக்குநர் வெற்றிமாறன் ” நாம்” அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாட்டு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர் .
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்கு
நுழைவுத் தேர்வு வைத்து அவர்களின்
வீடுகளுக்கு நேரடியாகச் சென்று , உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டு , பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ , மாணவிகளுக்கு கல்வி , உணவு , தங்குமிடம் போன்ற வசதிகளைக் கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து ஊடகத்துறையில் மிகச் சிறந்த ஆளுமைகளாக உருவாக்க இந்நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார் .
இந்நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியின் போது கலைப்புலி S தாணு அவர்கள் முதல் நபராக ஒரு கோடி ரூபாய் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களிடம் கொடுத்து , இந்நிறுவனத்தில் படிக்கும் மாணவர் மாணவிகளுக்கு வெற்றிமாறன் யாரைக் கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது V Creations நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் என்று அறிவித்தார் .
” நாம் அறக்கட்டளையைச் சார்ந்த பொறுப்பாளர்கள் ஆர்த்தி வெற்றிமாறன் , வெற்றி துரைசாமி மற்றும் பாட திட்டத்தை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் ஃபாதர் ராஜா நாயகம் ( லயோலா கல்லூரி ) அவர்களும் உடன் இருந்தார்கள் .