எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது திரைப்படங்களில் தீவிரமாக எழுதுகிறார். பொன்னின் செல்வனில் பணியாற்றினார்.அவர் எழுதிய கதைகள் வெந்து தணிந்தது காடு ,விடுதலை படங்களாகின்றன.
விடுதலை கதை பற்றி அவர் கீழ்க்காணுமாறு ஜெயமோகன் எழுதியுள்ளார்.
‘விடுதலை என் சிறுகதை ஒன்றிலிருந்து விரித்தெடுக்கப்பட்ட கதை. பொதுவாகச் சிறுகதைகளே சினிமாவுக்கு உகந்தவை. எம்.டி.வாசுதேவன் நாயரின் புகழ்பெற்ற திரைக்கதைகளெல்லாம் சிறுகதைகளை அடியொற்றியவையே. நாவலை சினிமாவாக ஆக்குவது கடினம். அதை பல மடங்கு சுருக்கவேண்டும். அதன் உச்சங்களை, முக்கியமான கதைமாந்தரை, கதைக்களத்தின் ஒரு பதியை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். சிறுகதையில் ஒரே உச்சம்தான் இருக்கும். களமும் கதைமாந்தரும் எல்லாம் குறைவானவை. உண்மையில் சினிமா என்பது ஒரு சிறுகதை, அல்லது குறுநாவல். ஆனால் வெந்து தணிந்தது காடு ஒரு நாவலின் கட்டமைப்பு கொண்டது.
விடுதலை நம் சூழலில் கண்ணெதிரே நிகழ்ந்த ஒரு கதை. மிக எளிமையான ஒரு வினாதான் அதிலுள்ளது. இங்கே மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் காவலர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களும் அந்த மக்களிடமிருந்தே எழுபவர்கள். அவர்களும் வறுமையை, ஒடுக்குமுறையை, சுரண்டலை அறிந்தவர்கள். அவர்களுக்கு என்ன ஆகிறது?
நான் திருப்பத்தூரில் இருக்கையில் அறிந்த இடதுசாரிக்குழுத் தலைவர் ஒருவரின் நையாண்டியும் , அப்பாவித்தனமும் கலந்த பேச்சு என் நினைவில் இன்றுமுள்ளது. மிக அடிப்படைக்களத்தில் இருந்து வந்தவர். கற்றவரல்ல, ஆகவே கற்றவரிடம் இல்லாத நம்பிக்கையும் தீவிரமும் அவரிடமிருந்தது. அவரையும் நான் தர்மபுரியில் பணியாற்றியபோது நேரில் சென்று அறிந்த வாச்சாத்தி தாக்குதலின் சித்திரங்களும் கலந்து உருவானது விடுதலை கதை’ இவ்வாறு ஜெயமோகன் எழுதியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இருவரும் நாயகர்களாக நடித்துள்ள ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்த ‘விடுதலை’ படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, மேஸ்ட்ரோ இசைஞானி இசையமைக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டைப் பயிற்சி இயக்கத்தை மேற்கொள்கிறார். எழுதி, இயக்குகிறார் தேசிய விருது பெற்ற இயக்குநரான வெற்றி மாறன்.
இந்த விடுதலை படத்தின் 2 பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.
‘விடுதலை-1’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சிறுமலை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்று வரும் ‘விடுதலை-2’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க சில பகுதிகள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது.
‘விடுதலை’ படம் தமிழ் சினிமாவில் தற்போது தயாரிக்கப்படும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாகவுள்ளது.
படத்தின் பிரம்மாண்டம் திரையுலகத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது, குறிப்பாக 10-கோடி மதிப்பில் ரயில் மற்றும் ரயில்வே பாலத்தை தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள்.
ரயில் பெட்டிகள் மற்றும் பாலம் ஆகியவை அசலான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. முன்னதாக, சிறுமலையில் கலை இயக்குநரான ஜாக்கி தலைமையிலான கலைத்துறை பிரம்மாண்டமான கிராமத்து செட் அமைத்துக் கொடுத்திருந்தது.
இந்த விடுதலை படத்தின் தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இது ஒரு தீவிரமான கதையைக் கொண்டுள்ளது, இது பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என்பதை உறுதிப்படுத்த சரியான கதை சொல்லல் தேவை.
எனவே, இதை இரண்டு பகுதிகளாக உருவாக்கும் யோசனை நடைமுறைக்கு வந்தது. மேலும் படக் குழு திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக உருவாகிறது.
தற்போது, கொடைக்கானலில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பீட்டர் ஹெய்ன் இந்த ஆக்ஷன் காட்சியை இயக்குவதால், பல்கேரியாவில் இருந்து ஏற்கனவே தமிழகம் வந்திருக்கும் திறமையான ஸ்டண்ட் டீம் இந்த ஆக்ஷன் பிளாக்கில் ஒரு பகுதியாக இடம் பிடித்துள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் ‘விடுதலை-1’ & ‘விடுதலை-2’ ஆகிய படங்களை வெளியிடும் நிலையில், முதல் பாகத்தின் வெளியீட்டு நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.