விக்ரம் ஒரு டாக்சி டிரைவர்,அது மட்டுமல்ல டிரைவிங் ஸ்கூலில் கற்றுக் கொடுப்பவர்.அவருக்கு கார் வேகமாக ஓட்டத் தெரியும் கலை தெரிவதால் கடத்தல் தொழிலில் ஆர்வம் வருகிறது. கடத்தல் ஏஜெண்ட் பசுபதிக்காகச் சில வேலைகள் செய்து கொடுக்கிறார்.
விக்ரமிடம் கார் கற்க வருகிறார் சமந்தா .அவர் வழக்கம் போல டிரைவருடன் ஒட்டிக் கொண்டு காதல் கனவு காண்கிறார்.ஒரு கடத்தலில் சமந்தாவையே கடத்திட ஒரு வேலை வருகிறது. அப்படி வட இந்தியா உத்திரகாண்ட் செல்கிறார்கள்.
தன்னை விக்ரம் காதலிக்கிறாரா கடத்தினரா என்பது சமந்தாவுக்கு குழப்பம். சமந்தாவை கடத்தினால் 15 லட்சம் கூலி என்றால் அதன் பின்னணி என்ன என அறிய விக்ரமுக்கும் ஆர்வம். முடிவில் தெரிகிறது விடை!
வட இந்திய ஜாதிக்கலவரம். அதி வேக கார் சேசிங் ,சாதாரண டிரைவரை வலிய காதலிக்கும் நாயகி, அம்மா அப்பா யாருமில்ல என்கிற அனாதை செண்டி மெண்ட் என்று படம் ஆரம்பித்து பத்து எண்றதுக்குள்ள நம் காதில் பூசுற்ற ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்தப் படத்தில் ரசிக்க வைப்வை கார் சேசிங் காட்சிகள்தான். அதற்கு ஸ்டண்ட் மாஸ்டரே போதுமே இயக்குநர் எதற்கு?வழக்கமாக பாடல்களில் இனிமை தரும் இமானை இதில் காணவில்லை.
வட இந்தியா உத்திரக்காண்ட் லொக்கேஷன்கள் புதிதாக தோன்றினாலும் அவை சார்ந்த காட்சிகளில் பிரமாண்டம் தோன்றினாலும் செயற்கையாக உள்ளன. மனதில் ஒட்டவில்லை .விக்ரம் சமந்தா காட்சிகளில் ரொமான்ஸ் என நினைத்து உடான்ஸ் ஆகி ஜவ்வடிக்கிறார்கள்.
அம்மி கொத்த சிற்பி எதற்கு இந்தச் சாதாரண கதையில் நடிக்க சூப்பர் நடிகர் விக்ரம் எதற்கு?
இந்த சொத்தைக் கதையை வைத்துக்கொண்டு தேசியவிருது நடிகர் விக்ரமையும் தயாரிப்பாளரான இயக்குநர் முருகதாஸையும் ஏமாற்ற முடிந்திருக்கிறது என்றால் விஜய் மில்டன் திறமைசாலிதான்