திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது .
இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி துவங்கிவைத்தார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அவரது மனைவி கார்த்திகா ஜனனி மற்றும்
டாக்டர் கிரிஜா ஜோதிஸ்வரன், சொருபராணி கலந்துகொண்டார்கள்.
ஒருவருட கோர்ஸ் ஆக துவங்கப்பட்டிருக்கும் இந்த கல்லூரி முழுக்க சினிமா ஒளிப்பதிவுக்கான பிரத்யேகமான வகுப்புகள் மட்டும் நடைபெறவிருக்கின்றன.
ஒளிப்பதிவு குறித்த வகுப்புகளை நடத்தும் ஸ்ரீதர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலமானவர். தற்பொழுது கண்ணை நம்பாதே , கழுவேத்தி மூர்க்கன், பாயும் ஒளி நீ எனக்கு, இயல்வது கரவேல் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்.
திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிக்கொண்டே இளைய தலைமுறை மாணவர்களுக்கு ஒளிப்பதிவு குறித்த வகுப்பு எடுக்கவேண்டுமென்பது இவரது நோக்கம்.
இந்தக் கல்லூரி பற்றிக் கூறும்பொழுது.
”இது எனது பதிமூன்று வருட கனவு. முழுக்க முழுக்க சினிமா ஒளிப்பதிவிற்கென்று ஒரு கோர்ஸ் துவங்கவேண்டுமென்பது.
சினிமாவில் பல்வேறு துறைகளுக்கும் படிப்பு இருக்கிறது. தனியாக சினிமா ஒளிப்பதிவுக்கென்று ஒரு வகுப்பு ஆரம்பித்து அதை இளைய தலைமுறைகளுக்கு எளிமையாக்கவேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது.
சினிமா ஒளிப்பதிவு இன்றைக்கு இருக்கும் தொழில் நுட்பத்தால் அடைந்திருக்கும் மாற்றங்கள், சினிமா ஒளிப்பதிவின் அடிப்படைகள், அதன் நுணுக்கங்கள் மட்டுமல்லாது ஒளிப்பதிவாளர்களுக்கு தயாரிப்பு மற்றும், கதையின் தன்மையோடு பணியாற்றும் லாவகமும் , படப்பிடிப்பை எளிதாக கையாளும் முறைகளும் பயிற்றுவிக்கப்படும்.
டெக்னிக்கல் மட்டுமல்ல மனித உழைப்பு மற்றும் ஒருங்கிணைத்தல் , பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படும் சினிமாக்களில் ஒளிப்பதிவாளரின் அறம் குறித்தும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும்.
ஒரு வருட கோர்ஸ் வகுப்பு ஜூன் மாதத்திலிருந்து அட்மிசன் துவங்குகிறது”.
என்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.