‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ விமர்சனம்

புலம்பெயர் அகதிகளின் வாழ்வில் அவர்கள் சந்திக்கும் இடர்களையும் வலிகளையும் சொல்லும் முயற்சியில் உருவாகியிருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படம் தன்னிடம் புதைந்துள்ள இசைத் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சியில் ஒருவன் சந்திக்கும் தடைக் கற்களையும், ஓர் அகதி தன்னை அடையாளப்படுத்தப் போராடும் இன்னல்களையும்,எடுத்துக் கூறி அடையாளம் தேடும் ஒரு மனிதனின் கதையாகவும் உருவாகி இருக்கிறது.

இப்படத்தை எஸ். பி. ஜனநாதனிடம் சினிமா கற்ற அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் எஸ்.இசக்கிதுரை தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, மதுரா, கனிகா, ஸ்ரீ ரஞ்சனி, ரகு ஆதித்யா, இமான் அண்ணாச்சி, பவா செல்லதுரை, ராஜேஷ், சின்னி ஜெயந்த் ,வித்யா பிரதீப், அஜய் ரத்னம் ,சம்பத் ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படம் மே 19 ஆம் தேதி வெளியீடு,

கொரோனா காலத்தில் இந்தியாவிலேயே புலம் பெயர்வுகளை நாம் கண்டோம். பற்பல மாநிலங்களுக்கும் சென்று திரும்பி அவர்கள் பட்ட துயர்களை நாம் கண் முன்னே கண்டோம்.நாடு விட்டு நாடு சென்று, அதுவும் போர்ச்சூழலில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தப்பித்துப் புலம்பெயரும் மக்கள் வாழ்க்கையின் வலிகள் சொல்லிட முடியாதவை.அவர்களின் உணர்வுகளைச் சற்றே திரையில் காட்டும் முயற்சியாக உருவாகியுள்ள படம் தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’

புனிதன் என்ற பெயரில் இந்தியாவில் வலம் வருகிறார் இலங்கைத் தமிழ் அகதி விஜய் சேதுபதி.அவர் பெரிய இசை ரசிகன், கலைஞன். இந்தியாவில் இருக்கும் அவர்,சிறு வயதில் சிறை சென்றவர். லண்டனில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். ஆனால் அது பொய் என்று தெரிகிறது.தன்னுடைய இசைத் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்த விரும்புகிறார். அகதி நிலை அவரது திறமையைக் காட்டப் பெருந்தடையாக இருக்கிறது.

தன்னுடைய லட்சியக்கனவை அடைய தனக்கென ஒரு குடிமகன் அடையாளம் தேவை என நினைக்கிறார். ஆவணங்கள் படி அவர் கிருபாநதியாக உருவெடுக்கிறார். அதேசமயம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ்திருமேனி, கிருபாநதியைத் தேடிக் கொல்ல நினைக்கிறார். இதற்குக் காரணம் என்ன? தான் நினைத்த இடத்தை அடையவும் லட்சியத்தை எட்டவும் ஏதிலியாக, அகதியாக விஜய் சேதுபதி என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்?அவர் சென்றடைய வேண்டிய இடம் தான் எது? என்பதே இப்படத்தின் கதைசெல்லும் பாதையாகும்.

விஜய் சேதுபதி தன்னிடம் கொடுக்கப்பட்ட வேலையை சரியாகச் செய்துள்ளார். புனிதன் என்றும் கிருபாநதி என்றும் அவர் குழப்புவது கதை மாந்தர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் தான். இறுதியில் தான் அதற்கு விடை கிடைக்கிறது. ஆர்ப்பாட்டமில்லா நடிப்பால் அவர் கவனம் பெறுகிறார்.இயக்குநர் மோகன்ராஜா செம்மறிக்குட்டி என்று தன் செல்ல மகளைக் கொஞ்சும் காட்சியில் வந்து கண்களை ஈரமாக்குகிறார்.ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பு எவ்வளவு என்பதற்கு அப்பா மகள் எனப் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் சொல்லும் உதாரணங்கள் மயிலிறகு காட்சிகள். படத்தில் மாட்டில்டா பாத்திரத்தில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ் புத்தம் புது மலரைப் போல் வந்து அனைவரையும் கொள்ளை கொள்கிறார்.

மகிழ்திருமேனி போலீஸ் அதிகாரியாக வருகிறார் அவர் அலட்டலின்றி, கண்களாலேயே நடிக்கிறார். க்யூ பிராஞ்ச் பொறுப்பு அதிகாரியாக வரும் நடிகர் ரகு ஆதித்யா இளைஞராக இருப்பதால் அந்தப் பாத்திரத்தோடு சற்றே ஒட்டவில்லை. காலத்தின் சாட்சிகளாகப் பாதிரியார்கள் பாத்திரத்தில் ராஜேஷும் விவேக்கும் வருகிறார்கள்..நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் விவேக்கைப் பார்ப்பது ஆறுதலாக உள்ளது.ரித்விகா, கனிகா, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்

படத்தின் முதல் பாதி விஜய் சேதுபதியிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறது. நீ கிருபாநதியா ?புனிதனா? அகதியா? தீவிரவாதியா ?என்று. அதற்கு விடை இரண்டாம் பாதியில் கிடைக்கிறது.

படத்திற்கு இரண்டாவது பாதி தான் செறிவான காட்சிகளுடன் அமைந்துள்ளது .இருந்தாலும் மேலும் காட்சிகளில் அழுத்தம் காட்டி இருக்கலாம்.பேசித்தீர வேண்டிய பிரச்சினை பற்றிப் படம் சொல்வதால் அதற்கு வசனங்கள் மிகவும் கைக்கொடுத்து உள்ளன.குறிப்பாக யாதும் ஊரே யாவரும் கேளிர் கருத்தை நியாயப்படுத்தும் வகையில் விஜய் சேதுபதி கடைசியில் அந்த இசைக் கச்சேரியில் கொடுக்கும் விளக்கவுரை கல்வெட்டுகளில் பதியும் அளவிற்கு கனம் நிறைந்தவை.புனிதன் கிருபாநதியாக மாறும் சந்தர்ப்பங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் சந்தர்ப்ப சூழ்நிலையின் நெருக்கடியைச் சொல்கிறது.எல்லா உயிரும் வாழும் தந்திரம் கற்றவை என்று உணர வைக்கிறது

கொடைக்கானல், திண்டுக்கல், பழனி, கிளிநொச்சி , கேரளா என்று விரியும் காட்சிகளின் வழியே பல்வேறு புதையுண்ட நினைவுகளைக் கிளறிக்கொண்டு வருகிறது படம்.

கிளி நொச்சி, கண்டி புறவழிச்சாலை உடைந்த புத்தர் சிலை என்று இலங்கையை ஞாபகப்படுத்தும் காட்சிகள் வருகின்றன.

உலகின் துயரங்களையும் துக்கங்களையும் வேதனைகளையும் மறக்க இசை ஒரு மாமருந்தாக இருக்கிறது என்ற கருத்தையும் சொல்லாமல் சொல்லி உள்ளார்கள்.

விஜய் சேதுபதியும் மேகா ஆகாஷும் யார் ? இவர்கள் இடையில் உள்ளது என்ன? அன்பா? நட்பா? காதலா?சகோதரத்துவமா? ஒன்றும் புரியவில்லை என்கிற நிலையில்
அவர்களிடையே ஆணவச் சிக்கலும் சுயமரியாதை குறுக்கீடும் புகுந்த நிலையில் சட்டென நிலை மாறி பியானோ மூலம் ஒரு புரிதல் மலர்ந்து அன்பு பொங்கி வழியும் காட்சிகள் கவிதைகள்.

சிறைக் கம்பிகளின் நிழலுருக்களை பியானோ கட்டைகளாகப் பாவித்து புனிதன் கம்பிகள் வெளியே கை நீட்டி விரல்களால் வாசிப்பது துயரோவியம்.அதே நேரம் அவன் இசையின் மேல் மயக்கம் கொள்வது எதற்கு என்று அறிகிறபோது புறவுலகத்து யுத்த ஓசை கேட்காமல் இருப்பதற்காக என்று சொல்கிற போது அந்தக் காட்சி மனதை உலுக்கும்.

நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக இருக்கும் மக்களின் வலிகளைப்பற்றிப் பேசியுள்ள இப்படம் பார்ப்பவர்களின் கண்களைக் கலங்க வைக்கும்.

வெற்றிவேல் மகேந்திரனின் கேமரா ,காட்சிகள் வழியை பாத்திரங்களின் கனத்தையும் பதிவு செய்துள்ளது. படத்திற்கு பாடல்களை விட நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை சிறப்பு.

எந்தப் பக்கமும் சொந்தமில்லாமல் எந்த நாடும் சொந்தம் இல்லாமல் நிற்கும் ஓர் அகதியின் நிலையை ,அடையாளமின்மை தரும் மனத்தவிப்பை விஜய் சேதுபதியின் பாத்திரத்தின் மூலம் அழகாக உணர்த்தி உள்ளார் இயக்குநர்.யாதும் ஊரே என்று இருந்தால் யாரும் அகதி இல்லை என்று ஒரு பிரபஞ்ச கருத்தை வலியுறுத்தி முடிகிறது படம்.

மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் ஆத்மாவின் தவிப்பை,வாழ்க்கையின் வலிகளைச் சொன்ன விதத்தில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’பார்க்கவும் ரசிக்கவும் சிந்திக்கவும் உணரவும் வைக்கும் படைப்பு எனலாம்.