‘கிங் ஆ ஃப் கொத்தா ‘ விமர்சனம்

மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்‘கிங் ஆஃப் கொத்தா’  தமிழிலும் வந்துள்ளது. பெயர் பற்றிச் சரியாக தெளிவு படுத்தப்படாததால் இந்தப் படத்தின் பெயரை ஆளாளுக்கு ஒரு மாதிரி எழுதுகிறார்கள். என்னே பெயருக்கு வந்த சோதனை!

இப்படத்தில் நிறைய வாரிசுகள் பங்கு பெற்றுள்ளார்கள். ,நடிக மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான்,நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், நடிகர் திலகனின் மகன் ஷம்மி திலகன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மலையாள வாரிசு நடிகர்களுடன் ஐஸ்வர்யா லட்சுமி, பிரசன்னா, கோகுல் சுரேஷ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி தான் இயக்குநர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

இரண்டு தாதாக்களுக்குள் தங்கள் மாமூல் ஏரியாவின் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதில் நடக்கும் போட்டி தான் இந்தப் படம். இரண்டு தாதாக்களின் பகமையைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைகிற போலீஸ் அவர்களுக்குள் புகுந்து கொண்டு கொம்பு சீவி விட, முடிவு என்ன என்று விடை தேடிச் செல்கிறது கதை.அதற்கிடையே நிலவும்  நட்பு ,காதல், மோதல், துரோகம் ,பழிவாங்கல் என்று விரிகின்றன காட்சிகள்.

கேரளாவில் கொத்தா பகுதியில் கதை நிகழ்கிறது. மோதலுக்குப்பின் கொத்தா யாருக்கு சொந்தமானது என்பதே மையக்கரு. ரவுடிகள் அராஜகம் தலைவிரித்தாடும் கொத்தா என்ற ஊருக்கு மாற்றலாகி வருகிறார் காவல்துறை அதிகாரி ஷாகுலான பிரசன்னா. அப்பகுதியை சர்வ அதிகாரங்களுடன் ஆட்டிப் படைக்கும் கண்ணன் பாயான ஷபீரை ஒழித்துக்கட்ட முயலும் பிரசன்னாவை ஷபீர் அவமானப்படுத்தவே கண்ணன் பாயைப் பழிவாங்கத் துடிக்கிறார் பிரசன்னா.அப்பகுதி மக்களின் ஆதரவு பெற்ற முன்னாள் டானும், கண்ணன் பாயின் முன்னாள் நெருங்கிய நண்பனுமான ராஜுவான துல்கர் சல்மான் பற்றித் தெரிய வருகிறது. அந்த ஊரை விட்டு வெளியேறிய துல்கர் சல்மானை மீண்டும் அழைத்து அவர்களுக்குள் பகையை மூட்டி பழிவாங்க நினைக்கிறார் பிரசன்னா. அவர் தனது காரியத்தில் வெற்றி பெற்றாரா? அவர்களுக்குள்ளான பகை எப்படி முடிக்கப்பட்டது என்பதுதான் மீதிக்கதை.

துல்கர் சல்மான் முதன் முதலாக முழு நீள கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
துடிப்பான டானாக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வ காட்சிகளிலும் நன்கு பொருந்துகிறார் . பிளாஷ்பேக் காட்சிகளில் அவரின் இயல்பான உடல்மொழி நேர்த்தி. இரண்டாம் பாதியில் சற்றே முதிர்ச்சியும் நடிப்பில் காட்டியிருக்கிறார்.

கதாநாயகனுடன் சரிசமமாகப் பயணிக்கும் கண்ணன் பாயாக வரும் ஷபீர் தன் அழுத்தமான நடிப்பால் கவர்கிறார். துல்கரின் நண்பராகவும் காவல்துறை அதிகாரியாகவும் வரும் கோகுல் சுரேஷ் பாத்திரம்,அழுத்தம் பெறவில்லை.ஐஸ்வரியா லட்சுமி, செம்பன் விநோத், நைலா உஷா, ஷம்மி திலகன் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்டவேலையை சரியாக செய்துள்ளனர். சிறிது நேரம் வந்தாலும் ரஞ்சித் பாய் ஆக வரும் ஷம்மி திலகன் கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது.

துல்கர் சல்மான்,சபீர் இருவருக்கும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தும் படியான காட்சிகள் பலவீனமாக உள்ளன.போலீஸ் அதிகாரியாக வரும் பிரசன்னா எதையோ செய்யப் போகிறார் என்றால் அவரது பாத்திரச் சித்தரிப்பும் காட்சிகளும் அழுத்தமாக இல்லை. எப்படியும் நாயகன் தான் ஜெயிக்கப் போகிறார் என்று ஒரு குழந்தை கூட யூகிக்கக் கூடிய காட்சிகளாக உள்ளது பெரிய பலவீனம்.ஏற்கெனவே பல தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களில் வந்து தேய்ந்து போன காட்சிகள் இதில் வருகின்றன .எனவே எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளதுதான்.

பழகிப் போன காட்சிகளாக இருந்தாலும் அதைக் காட்டிய விதத்திலும் கேமரா கோணங்களிலும் அசத்தி நம்மைப் பார்க்க வைப்பது நிமிஸ் ரவியின் ஒளிப்பதிவு தான். ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. .

தன் பின்னணியிசையால் மொத்த படத்திற்கும் உயிரூட்டியிருக்கிறார் ஜாக்ஸ் பிஜாய். எனவே படத்தின் பின்னணி இசையும் ராட்சச பலத்தோடு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.சண்டைக் காட்சிகளின் எதார்த்தமும் படத்திற்கு ஒரு புதிய நிறத்தைத் தருகிறது. மொத்தத்தில் ‘கிங் ஆஃப் கொத்தா’ பட உருவாக்கத்தால் பார்க்க வைக்கிறது.

தொழில்நுட்ப நேர்த்தி அளவிற்கு கதை நேர்த்தி காட்டி இருந்தால் படம் மேலும் அழுத்தம் பெற்றிருக்கும்.

தாதாக்களின் மோதல்கள் பகையுணர்ச்சி அல்லாமல் அவர்களது தனிப்பட்ட அந்தரங்க உணர்வுகளைப் பதிவு செய்ய முயன்றுள்ளது படம் .