‘அடியே ‘ விமர்சனம்

சில கருத்தாக்கங்கள் எழுத்தில் படிப்பதற்குப் புரியும். திரையில் சொல்வது கடினம் .அப்படிப்பட்டது தான் டைம் ட்ராவல், டைம் லூப் போன்றவை.

இவற்றை ஹாலிவுட் படங்களில் தைரியமாகக் கையாண்டு வெற்றி பெறுவது உண்டு. ஒரு பிராந்தியமொழியான தமிழில் இத்தகைய முயற்சிகள் செய்வது அரிதான சவாலான ஒன்றுதான். இப்படிப்பட்ட முயற்சியில் வந்துள்ள படம் தான் ‘அடியே’.

இவ்வகைப் படங்களை முழுவீச்சோடு செய்வதற்கு பண தைரியமும் மன தைரியமும் வேண்டும். அப்படிப்பட்ட முயற்சியில் இறங்கி இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் ‘அடியே’ படத்தைக் கொடுத்துள்ளார்.இப்படத்தில் நாயகனாக இசை அமைப்பாளர் நடிகர் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ளார்.நாயகியாக கௌரி ஜி கிஷன் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய், கோபால் போன்றவர்களும் நடித்துள்ளனர்.

இந்த உலகில் காணப்படுவது வேறு அறியப்படுவது வேறு என்பார்கள்.இந்தப் படத்தில் நிஜஉலகம், காண விரும்பும் உலகம் என்று இப்படத்தில் ஜீ இருவேறு உலகங்களைக் காட்டி நம்மைப் புதிய அனுபவத்திற்கு இட்டுச் செல்கின்றனர்.

வாழ்வில் ஏற்பட்ட தோல்விகள் ஏமாற்றங்கள் என்று விரக்தியின் உச்சிக்குச் செல்கிற ஜீவி பிரகாஷ் குமார் ஒரு கட்டத்தில் தன்னையே மாய்த்துக் கொள்ளும் நோக்கில் தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.அப்போது பாலைவனச் சோலை போல் ஒரு குரல் கேட்கிறது.அது ஒரு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி, அவரது வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் மூலம் தனது பழைய காதலியைச் சந்திக்க நேர்கிறது.காதலியிடம் தன் காதலைச் சொல்லத் தவிக்கிறார்; துடிக்கிறார். இடையில் காலத்தின் விளையாட்டு கண்ணாமூச்சி ஆடுகிறது.நேரம் கூடி வந்த வேளை நெஞ்சைத் திறந்து காட்டும் தருணம் வரும் போது,எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்குகிறார். எல்லாமே தலைகீழாகிறது. மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்க்கும் போது வேறொரு உலகத்தில் அவர் பிரவேசித்திருப்பது தெரிகிறது.அங்கே சந்திக்கும் நபர்கள் நிகழும் காட்சிகள் எல்லாமே புதிதாகவும் புதிராகவும் உள்ளன.
அவரது காதலியே அவருக்கு மனைவியாக வருகிறார் .இது நிஜமா கனவா என்று அவர் குழம்புகிறார்.மீண்டும் நிஜ உலகத்தில் பிரவேசிக்கிறார்.தன் காதலி தனது நண்பனுக்கு மனைவியான காட்சி வருகிறது .ஒன்றும் புரியாமல் மிகவும் மனக் கொந்தளிப்பில் இருக்கிறார்.இப்படி இருவேறு உலகத்தில் ஜீவி பிரகாஷ் சந்திக்கும் அனுபவங்களும அதற்கான காட்சிகளும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளன.எது நிஜம் எது மாற்று உலகம் என்பதை அவரைப் போல் ரசிகர்களையும் குழம்ப வைத்து,புதிர்கள் போட்டு முடிச்சுகளை மெல்ல மெல்ல அவிழ்க்கிறார்கள். அந்த ஆல்டர்நேட் ரியாலிட்டி உலகத்தில் படம் பார்ப்பவர்களையும் உலவ வைக்கிறார்கள்.முடிவு என்ன என்பதுதான் ‘அடியே’ படத்தின் கதை.

கதையாகச் சொல்வதற்கு மிகவும் சிக்கலான ஒன்றை அழகாகக் காட்சிப்படுத்தி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான படமாக வழங்கி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஜீவி பிரகாஷ் ஜீவா மற்றும் அர்ஜுன் பாத்திரங்களின் மூலம் ஏற்ற தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். இதுவரை விளையாட்டுப் பையனாகச் பாத்திரங்களில் சுற்றித் திரிந்தவர் இப்படத்தில்  நடிப்பில் பல படிகள் ஏறியுள்ளார். அதே போல இந்தக் குழப்பத்தில் சிக்கி தவிக்கும் காதலியாக வரும் நாயகி கெளரி கிஷனும் தோற்றத்திலும் நடிப்பிலும் மனதில் பதிகிறார்.நல்ல ஒரு போட்டோ ஜெனிக் தோற்றம் அவருக்கு.நடிப்பிலும் சோடை போகவில்லை.
ஜீவியின் நண்பனாக வரும் ஆர் ஜே விஜய் எவ்வளவு அசௌகர்யமான சூழலிலும் கேலி கிண்டல் என்று பேசி கலகலப்பூட்டுகிறார்.

படத்தில் குழப்பங்களும் புரியாத தருணங்களும் வரும்போது இயக்குநர் வெங்கட் பிரபு பாத்திரம் பேசுவது ஒரு தெளிவை உண்டாக்கும்.

ஒவ்வொரு துறையில் பிரபலமானவர்களை மாற்றி வெவ்வேறு துறை சார்ந்து சாதனை படைத்தவர்களாகக் காட்டுவது செம ஜாலி ரகளை.அதன்படி கேப்டன் விஜயகாந்த் பிரதமராகவும் மணிரத்னம் பெளலராகவும் , பயில்வான் ரங்கநாதன் ஆஸ்கார் விருது வென்றஇசையமைப்பாளராகவும் பேசப்படுவது கலகலப்பு.ஏன் கிரிக்கெட் வீரர் சச்சின்,நடிகர் விஜய் , பிரபுதேவா,வெற்றிமாறன், பிரேம்ஜி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் வரை விடவில்லை.படத்தில் திருக்குறள் படிக்கும் ஐசக் நியூட்டன் முதல் வாய் பேசாத கூல் சுரேஷ் வரை எதிர்ப்பாராத ஜாலி கற்பனைகள் நிறைய உண்டு.

படத்தில் வரும் காதல் உணர்வு பற்றிய விளக்கங்கள் வயதானவர்களுக்கும் அந்த உணர்வு மீது மதிப்பு வரச் செய்யும்.படத்தில் நிலவும் காதல், சென்டிமெண்ட் ,நகைச்சுவை, திருப்பங்கள் என அனைத்துமே ரசிக்க வைப்பவை.

கோகுல் பினோய் செய்துள்ள ஒளிப்பதிவு படத்தை ஒரு விஷூவல் ட்ரீட்டாக மாற்றி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் சபாஷ் போட வைத்தால் பின்னணி இசையோ பிரமாதப்படுத்துகிறது.

படத்தில் தோன்றும் சிறுகுறை இதுதான்.இரண்டாவது பாதியில் மீண்டும் மீண்டும் வரும் காட்சிகளைத் தவிர்த்து இருந்தால் படத்திற்கு மேலும் பலம் கூடி இருக்கும்.இருந்தாலும் தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்திக் கொண்டு சென்ற விதம் பாராட்டுக்குரியது.
மொத்தத்தில் அடியே படம் ரசிகர்களுக்குப் புதுவிதமான காட்சி விருந்து என்றே கூற வேண்டும்.