தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஓணம் திருவிழாவான ‘ஆவணிப் பூவரங்கு’, கடந்த அக்டோபர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில், சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. ‘தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ (CTMA) சார்பில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில், தமிழ்நாட்டில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மலையாள மக்களும், அவர்களோடு ‘தமிழக வாழ் மலையாள மக்களின் கூட்டமைப்பின்’ கௌரவ உறுப்பினர்களான ஸ்ரீ எம் பி புருஷோத்தமன் (கௌரவ தலைவர் – CTMA ), ஸ்ரீ கோகுலம் கோபாலன் (நிறுவனர் – CTMA), ஸ்ரீ எம் எ சலீம் (தலைவர் – CTMA), ஸ்ரீ வி சி பிரவீன் (நிறுவனர் – ஆவணிப் பூவரங்கு) மற்றும் டாக்டர் எ வி அனூப் (நிறுவனர் – JAC) ஆகியோரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தலைசிறந்த பாடகர் கே ஜே யேசுதாஸ், பழம்பெரும் இயக்குநர் ஹரிஹரன், கே எஸ் சேதுராமன், இயக்குநர் ஐ வி சசி (அலாவுதீனும் அற்புத விளக்கும்), நடிகை சீமா, கலை இயக்குநர் சாபு சிரில், நடிகர் ஸ்ரீனிவாசன் என திரையுலகைச் சார்ந்த பல முன்னணிக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் இறுதி நாளில் பாபி சிம்ஹா மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
“பொதுவாகவே நல்ல கருத்துள்ள திரைப்படங்களுக்கு மலையாள மொழி பேசும் மக்களிடையே அதிக ஆதரவு இருக்கும். அந்த வகையில் எங்களின் ‘அம்மணி’ திரைப்படம் ஒரு நல்ல கருத்தோடு அமைந்திருப்பது மட்டுமில்லாமல், மொழிகளை தாண்டி எல்லாத் தரப்பு ரசிகர்களாலும் விரும்பக்கூடிய படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது….கேரளாவை சார்ந்த ‘வைக்கம்’ விஜயலக்ஷ்மி ‘அம்மணி’ படத்தில் ஒரு அற்புதமான பாடலை பாடியுள்ளார்…” என்று கூறினார் ர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
“இதுவரை நான் தமிழ் படங்களில் அதிகமாக நடித்திருந்தாலும், இன்று மலையாள மொழி பேசும் மக்கள் இந்த ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் எனக்கு அளித்த உற்சாக வரவேற்பை பார்க்கும் பொழுது, கலைஞர்களுக்கு மொழி அவசியமில்லை என்பதை ஆழமாக நான் உணர்கிறேன்….தமிழக – கேரள மக்களின் இடையே நிலவி வரும் சகோதர உறவைக் கொண்டாடும் ‘ஆவணிப் பூவரங்கு’ திருவிழாவில் கலந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது…. தற்போது நான் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறேன்….எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் சரி, வலுவான கதாபாத்திரமாக இருந்தால் அதில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்….’ என்று உற்சாகத்துடன் கூறினார் பாபி சிம்ஹா.