விஜய் சேதுபதியை சென்னை மண்ணிலிருந்து மதுரை மண்ணுக்கு நகர்த்தியுள்ள படம் கருப்பன். ரேணிகுண்டாவுக்குப் பிறகு மீண்டு வந்து இயக்கியுள்ளார் இயக்குநர் பன்னீர்செல்வம்.
கிராம மணம் வீசும் கதைக்களம். வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து அந்த காளையை விஜய் சேதுபதி அடக்கி சில பிரச்னைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார். பசுபதிக்கும் ஒரு வீரனுக்கு தான் தன் தங்கையை கொடுக்கின்றோம் என மன நிம்மதியுடன் இருக்கின்றார்.
ஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை.
விஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டார மொழியில் நடித்தவர் மதுரை தமிழிலும் மிரட்டுகி்றார். உருவம் பெரிதாக இருந்தாலும் கிராமத்தில் இருப்பவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகி்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி பளிச்.
கணவராக இருந்தாலும் தவறு என்ற இடத்தில் விஜய் சேதுபதியை செல்லமாக அதட்டும் இடத்தில் எல்லோரையும் கவர்கிறார் நாயகி தான்யா.
இறைவி படத்தில் போலவே இதிலும் செய்துள்ளார் பாபிசிம்ஹா. ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ரோல், திருமணமாகி சென்றாலும் அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது நச் .
பாபி சிம்ஹா கடைசி வரை விஜய் சேதுபதியிடம் நட்பாகவே தான் இருக்கின்றார். இருவருக்குமிடையே இன்னும் கொஞ்சம் மோதல் கூட்டியிருந்தால் படம் மேலும் பரபரப்பாகியிருக்கும்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு காட்சிகளை காட்டுகின்றனர். அதை எடுத்த விதம், தொழில்நுட்ப உழைப்புக்குச் சாட்சி. ரேணிகுண்டா படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் கருப்பனாக மீண்டு வந்துள்ளார்.
சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரை பகுதிகளின் சுற்று வட்டாரத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். அதிலும் ஜல்லிக்கட்டு காட்சி, உச்சக்கட்ட சண்டைக்காட்சி மிரட்டல், மிகவும் ஏமாற்றியது டி.இமான் தான்.
விஜய் சேதுபதி- தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.
இத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் தரை வரை இறங்கி அடித்துள்ளார்.
எப்போதும் கேட்டவுடன் பிடிக்கும் இமான் பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.
மொத்தத்தில் சென்னை விஜய் சேதுபதியாக மட்டுமில்லை, மதுரையிலும் மீசையை முறுக்கியுள்ளார்.