யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி நிறுத்தி விட முடியாது: ‘கஸ்தூரி வீடு’ பட விழாவில் சமுத்திரக்கனி பேச்சு!

ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’.இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

படத்தில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருந்ததாக விழாவில் கலந்து கொண்டவர்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் லயன் டாக்டர் வகேஷ் வரவேற்புரையாற்றிப் பேசும் போது,

“இந்த படம் ஆரம்பித்தது ஒரு பிசினஸ் மீட்டிங்கில் தான் அப்பொழுதுதான் இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது.
அரை மணி நேரத்தில் கதையை விளக்கினார். எவ்வளவோ படங்கள் பார்த்து இருக்கிறோம். எவ்வளவோ கதைகள் பார்த்திருக்கிறோம். ஆனால் இது புதிதாக இருந்தது. ஏதோ ஒன்று புதிதாக சுவாரஸ்யமாக இருப்பது தெரிந்தது.அரை மணி நேரத்தில் சொன்ன கதையில் எனக்கு நம்பிக்கை வந்து படத்தைத் தொடங்கலாம் என்று கூறிவிட்டேன்.அப்படித்தான் இந்தப் படம் தொடங்கப்பட்டது.

நான் எனது பிசினஸில் பிசியாக இருக்கிறேன் நான் வரும்போதெல்லாம் படத்தைப் பற்றி சொல்லும் போது கேட்டுக்கொள்கிறேன். இப்போது பார்க்கும்போது சொன்னதை விடப் பல மடங்கு சிறப்பாக வந்திருக்கிறது.

இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்பு உள்ள மனிதர்.படப்பிடிப்பில் அவரது கடின உழைப்பைப் பார்த்திருக்கிறேன் படப்பிடிப்புக்கு எப்போதாவது நான் சொல்லும் போது எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். அந்தந்த வேலை அப்படியே நடக்கட்டும் என்று நான் விட்டு விடுவேன்.இயக்குநர் மிகவும் அர்ப்பணிப்புள்ள மனிதர்,கடின உழைப்பாளி. அவரது உழைப்புக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.
நான் பல தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். இதிலும் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன் .அந்த அளவிற்கு படம் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இங்கே வாழ்த்துவதற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி”
என்றார்.    ரென்டெக் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ராணி ஸ்ரீ ரெட்டி பேசும் போது,

“நான் வெவ்வேறு பிசினஸில் நான் இருந்தேன். இப்போதுதான் திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறேன்.
சகோதரர் இயக்குநர் விஜய் ஆனந்த் என்னிடம் அரை மணி நேரத்தில் ஒரு கதை சொன்னார்.நானும் எனது கணவரும் கேட்டுக் கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் விரிவாகக் கதை சொன்னார். எந்தெந்த பாத்திரத்தில் யார் நடிப்பது என்பது வரை தெளிவாகக் கூறினார்.இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என்றார்.பார்க்கலாம் என்று சொன்னேன் .அடுத்த பத்து நிமிடங்களில் வந்து அழைத்தார். பூஜை என்றார்கள்,வந்துவிட்டேன். அப்படி அன்று ஆரம்பித்தது தான் இன்று வரை வெற்றிகரமாகத் தொடர்கிறது. எனது பிசினஸ் எல்லாம் வெற்றி பெறுவதற்கு எனது தாய் தந்தையின் ஆசீர்வாதம் பலமாக இருந்தது. அதேபோல எனது கணவரின் ஆதரவும் பக்கபலமாக இருந்தது. இன்று வரை அதுதான் தொடர்கிறது.இந்தப் படத்தின் வெற்றி ஊடகங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இந்தப் படக்குழுவினரை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஜி. கே. எம். தமிழ்க்குமரன் பேசும்போது,

” சினிமா என்பது ஒரு கனவு உலகம். முதலில் படம் எடுக்கும் போது ஒரு கனவோடு வருவார்கள். இந்தத் தயாரிப்பாளர்கள் முதல் முறையாக இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படம் எடுக்கும் தயாரிப்பாளர், இயக்குநர் நடிப்பவர்கள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாம் பெரிய கனவோடு வருவார்கள்.
நானும் அப்படித்தான் ஒரு கனவோடு வந்தேன்.படம் தயாரிப்பது மிகவும் கடினமான காரியம். சில தயாரிப்பாளர்களைப் பார்க்கும்போது அவர்கள் படும் சிரமங்களைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும்.சினிமா நல்ல தொழில் .ஆனால் அதைச்சரியாகச் செய்ய வேண்டும்.இன்று ‘மண்டாடி’ படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தயாரிப்பாளருக்குப் பெரிய லாபம் வந்துள்ளது.இந்த ‘கஸ்தூரி வீடு’ ட்ரெய்லர் பார்த்தேன். நன்றாக உள்ளது. திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி” என்றார்

இயக்குநர் பவித்ரன் பேசும்போது,

“சரித்திரப் புகழ்பெற்ற இந்தக் கமலா திரையரங்கில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதன் உரிமையாளர் சினிமாவை நேசித்தவர். அந்த அரங்கிலே நடைபெறும் இந்த விழாவில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் இயக்குநர் விஜய் ஆனந்த் எனக்கு பல காலமாகத் தெரிந்தவர். அவர் கடினமான உழைப்பாளி. அவரது ட்ரெய்லரைப் பார்த்த போது நன்றாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களைக் கவரும்படியும் குழந்தைகளைக் கவரும்படியும் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் என்பது வரும் காட்சிகளில் இருந்து தெரிகிறது.வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார்.வித்தியாசமான கலைஞர்கள் வரும்போது நீங்கள் ஆதரிக்க வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கமும் தேனீபோல் உழைத்துக் கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர் சங்கம் இப்போது மேல்ஜாதி, கீழ் ஜாதி போன்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.தயாரிப்பாளர் களிடம் ஒற்றுமை கிடையாது. தயாரிப்பாளர்களுக்காக கொடுக்கப்பட்ட பத்து ஏக்கர் நிலம் அப்படியே சும்மா கிடக்கிறது.இந்த அரசு சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் மானியம் வழங்குவதற்கு சம்மதித்துள்ளது. இது சினிமா அரசு நிறைய செய்யும் என்று நம்புகிறோம்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் பேசும் போது,

“தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழ்க் குமரன் அவர்கள் வந்த பிறகு 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு லைக்காவில் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார் .அந்த 10 ஏக்கர் நிலம் சும்மா கிடக்கவில்லை 5000 பேருக்கு வீடு கட்டுவதற்கு வேலை தொடங்கப்பட்டு விட்டது. ஜனவரி மாதம் பூஜை போடப் போகிறோம்.தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்சூரன்ஸ் கிடையாது. பல தயாரிப்பாளர்கள் சிரமப்பட்ட போது அவரது சொந்தக் காசில் தமிழ்க்குமரன் அவர்கள் 50 லட்சம் போட்டிருக்கிறார். இது யாருக்காவது தெரியுமா?இந்த உதவி யாருக்கும் தெரியக்கூடாது என்று கூறியிருக்கிறார்.தமிழ்க்குமரன் அவர்களின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் 150 ஏக்கரில் பிலிம் சிட்டி தொடங்கப்பட இருக்கிறது.விரைவில் சிறுபடங்களுக்கும் மானியத் தொகை வர இருக்கிறது.

பல தயாரிப்பாளர்கள் ஒன்றுமே தெரியாமல் படம் எடுத்து வருகிறார்கள். நல்ல இயக்குநர் ,நல்ல கதை என்று தேர்ந்தெடுத்து எடுங்கள். சில படங்களைப் பார்க்கச் சென்றால்,அதையெல்லாம் பார்க்கவே முடியவில்லை , அவ்வளவு மோசமாக இருக்கிறது. எனவே பெயருக்குப் படம் எடுக்காதீர்கள்.சகோதரர் சமுத்திரகனி நல்ல கதை இருந்தால்தான் நடிப்பார். அவர் நடித்திருப்பதாலேயே இந்தப் படம் மீது நம்பிக்கை வருகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,

“இந்த கமலா திரையரங்கில் அடித்துப் பிடித்துக் கொண்டு படம் பார்த்தது முதல் பல்வேறு நினைவுகள் வருகின்றன .எங்கள் இயக்குநரின் பூவே உனக்காக படத்துக்காக 225 ஆவது நாள் கேடயம் வாங்கியது, சூரியவம்சம் படத்திற்காக 125 ஆவது நாள் கேடயம் வாங்கியது, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்திற்காக 250 ஆவது நாள் கேடயம் வாங்கியது போன்ற நினைவுகள் எனக்கு வருகின்றன.இந்த ‘கஸ்தூரி வீடு’ படத்தை இயக்கியிருக்கும் விஜய் ஆனந்த் கடினமான உழைப்பாளி .விழாவுக்கு அழைப்புகளை ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து அழைத்தார். இந்த கஸ்தூரி வீடு படம் ஒரு கவனிக்கத்தக்க ஒரு படமாக இருக்கும் .அதில் எந்த சந்தேகமும் இல்லை.இன்று திரையுலகில் அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. அவர் உள்ளங்கை நெல்லிக்கனி, திசையெங்கும் பறந்து வெற்றிக் கனி பறிக்கும் தங்கக் கனி .எளிய மனிதர், கடின உழைப்பு கொண்டவர். நண்பர்களுக்காக உதவியாக இருப்பவர். அவரும் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்இங்கு வரவில்லை என்றாலும் யோகி பாபுவை நான் பாராட்டுகிறேன்.குறுகிய காலத்தில் 300 படங்களை முடித்திருப்பதற்காகப் பாராட்டுகிறேன்.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் கிளைமாக்ஸ் பாடல் பிரமாதமாக மிரட்டலாக இருக்கிறது
தந்தை சொல் தான் மந்திரமாக கொண்டு தந்தைக்கு நிழலாக இருந்து இசைஞானிக்கு உதவியாக இருக்கும் கார்த்திக் ராஜா அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும் போது,

“இந்த படத்தில் சமுத்திரக்கனி சார் நடித்திருக்கிறார் அவர் இன்று ஒரு பான் இந்தியா நடிகர்.ஆந்திரா சென்றாலும் கேரளா சென்றாலும் அவர் பேனர் போஸ்டரில் அவர் படம் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் பல மொழிகளில் நடித்து வருகிறார் .அப்படிப்பட்டவர் இது மாதிரி சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுத்து நடித்திருப்பது பாராட்டத்தக்கது.இப்படிப்பட்ட சிறிய படங்களுக்கு அவர் கால்ஷீட் செய்து கொடுப்பது சம்பாதிப்பதற்கு அல்ல, சிறு படங்களுக்கு உதவி செய்வதற்காக, சிரமப்படுபவர்களுக்கு ஆதரவு தருவதற்காக.

வீடு என்றாலே பெண்கள் பெயர் தான் விளங்கும். இது ‘கஸ்தூரி வீடு’ .ஆண்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்கள் பெயரை வீட்டுக்குச் சொல்ல மாட்டார்கள். பெண்கள் பெயரில் தான் இன்னார் வீடு என்று அழைப்பார்கள்.இப்போது ஆக்சன் படங்களுக்கும் பேய்ப்படங்களுக்கும் வித்தியாசமில்லை.பேய்ப் படங்களில் வருகிற அறுக்கிறது, உடைப்பது, தலையை முறுக்குவது போன்ற காட்சிகள் எல்லாம் ஹீரோக்கள் நடிக்கும் ஆக்சன் படங்களில் வருகின்றன.
பேய்ப் படத்திற்கும் ஆக்சன் படத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.விஜய் ஆனந்தும் அப்படி ஒரு பேய்ப் படத்தை எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆன்மீகம்இருக்கிறது, பேய் இருக்கிறது, சென்டிமென்ட், அறிவியல் எல்லாமும் கலந்து இருக்கிறது.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் பேசும்போது,

” நான் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒரிசாவுக்கு ஒரு முறை படப்பிடிப்புக்குச் சென்றபோது
அந்த ஓட்டலில் தமிழ் சேனலே வரவில்லை. ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும் வந்தது .அதை ஆன் செய்த போது சூப்பர் ஸ்டார் நடித்த ‘வெற்றி நிச்சயம் ,இதுவேத சத்தியம் ‘என்ற பாடல் ஒலித்தது .இடையில் ஒரு விளம்பரம் வந்தது. அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம் .அதில் நன்றாக உடையணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர் -இயக்குநர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி அவர்கள்.நான் யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒரு கதை செய்து விடுவேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் முதல் லேட்டஸ்ட்டாக வந்துள்ள நடிகர்கள் வரை அதை எளிதாகச் செய்து விடுவேன்.

அன்று ஒரிசாவில் உள்ள மகாநதியில் படப்பிடிப்பு நடந்தது.நான் நிறைய கதைகள் செய்வேன். ஆக்சன் ப்ளாக் செய்வேன், இண்டர்வெல் பிளாக் கொடுப்பேன்; கிளைமாக்ஸ் அமைப்பேன்.நிறைய படங்கள் பார்த்துப் பார்த்து இந்தப் பயிற்சி எனக்கு வந்திருந்தது.
ஒரிசாவில் படப்பிடிப்பில் இருந்த போதுஅப்படி ஒரு நாள் யோசித்தபோது சமுத்திரக்கனி சாரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன்.இந்தக்கதை தோன்றியது.முதலில் ஒரு ஆக்சன் படம் கதை என்றுதான் நான் திட்டமிட்டேன். அடுத்த நாள் பூரி ஜெகநாதர் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது.அங்கே ஒரு விழா நடக்கிறது. அது பிரமாண்டமாக இருந்தது. அங்கே இருபது லட்சம் பேர் மக்கள் கூடியிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
அவ்வளவு பெரிய கூட்டம் வந்திருந்தது .”ஜெய் ஜெகநாதா !ஜெய் ஜெகநாதா!” என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள்.
மக்கள் முண்டியடித்துக் கொண்டு இடித்துக் கொண்டு சென்றார்கள். கொரோனாவுக்குப் பிறகு அவ்வளவு பெரிய கூட்டம் வந்திருந்தது.

அங்கே எனக்கு இரண்டு விஷயங்கள் கிடைத்தன. ஒன்று : படத்தின் தலைப்பு கஸ்தூரி என்பது, அந்தப் பெயரில் திரைப்படமாக எடுப்பது, இன்னொன்று: ஹாரர் பேய்ப் படமாக எடுப்பது என்று, இப்படி இரண்டு விஷயங்கள் முடிவாகக் கிடைத்தன.நான் ஆக்சன் படம் எடுக்கவே நினைத்தேன். பேய்ப் படம் செய்யக்கூடாது என்றுதான் நினைத்தேன். பிறகு ஏன் இப்படி யோசித்தேன் என்றே தெரியவில்லை.

‘கலிங்கத்துப் பரணி’யில் கூட பேய் பற்றிச் செய்திகள் வரும். ஒரு நாள் பேய்ப் படம் செய்வது என்று முடிவெடுத்து விட்டேன். ஒரிசாவிலிருந்து சென்னைக்கு வருவதற்குள் ரயில் பயணத்திலேயே கதை எழுதி அத்தனைக் காட்சிகளையும் எழுதி முடித்துவிட்டேன்.
பப்லு ஒரு தொழிலதிபர், அவர் எனது நண்பர். அவரிடம் இந்தக் கதையைக் கூறினேன். அவருக்குப் பிடித்திருந்தது.அவரிடம் படம் செய்யும் அளவிற்கு பணம் இல்லை. ஆனால் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு பலம்.அவர் மூலம் பலரும் உதவி செய்ய வந்தார்கள்.அந்த நேரத்தில் பெரிய உதவியாக இருந்தவர், தெய்வம் போல வந்தவர் தான் ராணி அம்மா அவர்கள். அவர் கிருஷ்ணதேவராயர் வம்சாவளியில் வந்தவர்.அப்படி வந்த இன்னொருவர் தான் டாக்டர் வகேஷ்.

முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த ‘கஸ்தூரி வீடு’.

படத்தின் கதாநாயகன் பற்றி சொல்ல வேண்டும். அவர் ஐயப்பன் என்கிற பைனான்சியர் மூலம் எனக்கு அறிமுகமானார். அவரைப் பார்த்தபோது ‘வருஷம் 16’கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்தார்.அவர் அற்புதமான திறமைசாலி. சொல்வதை எளிதாகப் புரிந்து கொண்டு சரியாக நடித்துக் கொடுப்பார்.
சண்டைக் காட்சிகளில் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டையில் அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. அப்போது நாங்கள் பயந்து போய் படப்பிடிப்பை நிறுத்தி விட்டோம் ,ஒரு மணி நேரம் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் அவர் பரவாயில்லை என்று நடிக்க வந்து விட்டார்.அவ்வளவு அற்புதமான சக்திவாய்ந்த நடிகர். அவர் திறமைக்கு பெரிய நடிகராக வருவார்.

கதாநாயகி தனுஜா எனது நண்பரின் மகள். அவர் எனது குழந்தை போன்றவர் .காலம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற குழந்தை. நடிக்கும் போது அவருக்கு எனக்கும் நல்லிணக்கம் வந்து அற்புதமாக நடித்துக் கொடுத்தார். நிறைய சிரமமான காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.பயந்து அழும் காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே நடித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தக் காலத்தில் பெரிய கதாநாயகிகள் அப்படிச் செய்வார்கள் என்பார்கள். இவர் செய்தார் .இந்த படத்திற்கு சமுத்திரகனி சார் வந்த பிறகு , பெரியபடமாக மாறிவிட்டது.ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்குப் பயமாக இருந்தது.தயக்கமாக இருந்ததது.ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார் .நான் எழுதிய ப 45 பக்கங்கள் வசனங்களை அவரிடம் கொடுத்த போது இப்படி எல்லாம் இருந்தால் பார்க்க மாட்டார்கள் என்று அதைச் சுருக்கி,இது தேவை இது தேவையில்லை என்று கூறி அற்புதமாகப் பேசி நடித்தார்.அவரது நடிப்பைப் பார்த்து பிரமிப்பேன். அது மட்டுமல்ல டப்பிங்கில் கூட அவ்வளவு சுலபமாக விரைவில் முடித்து கொடுத்தார். அவசரமாகப் பேசினாரோ என்று பார்த்தால் பக்காவாக இருந்தது .அந்த அளவுக்கு பயிற்சி எடுத்துக் கொண்டு பக்காவாக இருக்கிறார்.

அதே போல் இந்தப் படத்தில் கார்த்திக் ராஜா அவர்களின் இசை பெரிய பலமாக இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் பெரிய பக்கபலமாக இருந்தார்கள்.திருப்பதியில் உள்ள  பீமா ஹோட்டல் அதிபர் அசோக் நடிப்பார்வத்தில் எங்களுடன் இணைந்து கொண்டார். அவரது நடிப்பு அர்ப்பணிப்பைப் பார்த்து பிரமித்து விட்டேன்.மேக்கப் சரிவர அமையாத போது அவர் தரையில் புரண்டெல்லாம் அழுக்கு செய்து கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி, குடந்தை சரவணன் ஆகிய இருவர் பாடல் எழுதி இருக்கிறார்கள்.

படம் ஆரம்பித்ததை விட முடித்தபோது பெரிதாகி செலவு நான்கு மடங்கு ஆகிவிட்டது . பலரும் இவ்வளவு செலவு தேவையா என்றார்கள்.ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும் என்று நான் கூறுவேன்.இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்.இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

படத்தில் நடித்த நடிகர் டேவிட் டிட்டோ பேசும்போது,

” நான் இங்கே வந்திருப்பதற்கும் படத்தில் நடித்திருப்பதற்கும் ஒரே காரணம் இயக்குநர் தான். அவர் இல்லாமல் நான் இல்லை.அவருக்கு முதலில் என் நன்றி.இந்தப் படத்தில் நான் சிரமப்பட்டு நடித்ததாகக் கூறினார். ஆனால் இந்தப் படத்திற்காக இயக்குநர் பட்ட சிரமங்கள் ஏராளம். அதற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம்.

இந்தப் படத்திற்காக பேய் போல மேக்கப் போட்டு இருந்த பெண்ணைப் பார்த்து நான் பயந்து விட்டேன்.
அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. ஒரு வீட்டில் படப்பிடிப்பிற்காகச் சென்றோம். அது நிஜமான பேய் வீடு என்று அவர் கூறிய போது எனக்கு இன்னும் பயமாக இருந்தது.படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.

படத்தின் நாயகியாக நடித்திருக்கும் தனுஜா பேசும்போது,

“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இதே கமலா தியேட்டரில் என்னுடைய இன்னொரு படத்திற்காக வந்திருந்தேன்.அப்போது ஒரு பகுதியாக இருந்த எனது பாத்திரம் இப்போது முழுப் படத்திலும் வருவது போல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இன்று மீண்டும் வந்திருக்கிறேன் காரணம் எனது அப்பா. நான் நல்ல வேடங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இதில் படம் முழுக்க நான் வருவது போல் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு நன்றி.
எனக்கான கதாபாத்திரம் அமைந்திருப்பது மகிழ்ச்சி. சமுத்திரகனி சார் மரியாதைக்குரிய நபர்.அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்

இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும் போது,

“இயக்குநர் நன்றி கூறிய அத்தனை பேருக்கும் நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு நல்ல பயணம் இது.விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்று நினைக்கிறவன் நான்.
புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும்.அப்படி ஒரு ஆசை இருக்கும்.

நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்
எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார். இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன்.அதுதான் நிஜம் .நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும்.அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும்
நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம் செய்வோம்; 100 சதவீதம் செய்வோம் .உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக்  கொண்டு போய் சேர்க்க வேண்டும்.ஏன் எனில் என் குருநாதர் சொல்வார் “நீ
உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம். அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும் அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும் , அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.அவர்கள் வந்து நின்றால் வெளியே தெரியும் ,இவர்கள் வந்து நின்றால் வெளியே தெரியும் என்றெல்லாம் இல்லை.உழைப்பு திரையில் தெரிந்தால் மக்களுக்கும் தெரியும்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !இதில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர்  அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ,வெல்வோம்!என்றார்