‘அயலி’ இணையத் தொடர் விமர்சனம்

முத்துக்குமார் இயக்கியுள்ள இந்த ‘அயலி’ இணையத்தொடரில் அபிநயா ஸ்ரீ ,அனுமோல் அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி ,டி எஸ் ஆர் ஸ்ரீனிவாச மூர்த்தி, லவ்லின், காயத்ரி, தாரா, பிரகதீஸ்வரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு ராம்ஜி, இசை ரேவா,தயாரிப்பு குஷ்மாவதி.

ZEE5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான விலங்கு, ஃபிங்கர்டிப், பேப்பர் ராக்கெட் ஆகிய தொடர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடராக ’அயலி’ யை ZEE5 வெளியிடுகிறது.

சாதி, சமயம், தெய்வம் ,நம்பிக்கைகள் ,பழக்க வழக்கங்கள், சம்பிரதாயம் என்கிற பெயரால் பெண்களுக்கு எவ்வாறு கல்வி மறுக்கப்படுகிறது என்பதைச் சொல்கிற கதை இது.இன்று குறிப்பாகப் பெண்கள் கல்வியில் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் அவர்கள் கடந்து வந்த வரலாற்று பாதையை இந்தத் தொடரில் வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

அந்த வரலாறு தெரிந்தால் தான் இந்த முன்னேற்றத்தின் அருமை புரியும் என்பதால் இந்த இணையத் தொடர் பொழுதுபோக்கு என்கிற வகைமையில் இருந்து மாறி ஆவணம் விழிப்புணர்வு என்று பயனுள்ள தொடராக மிளிர்கிறது. இத்தொடர் எட்டு எபிசோடுகள் கொண்டது.

சரி இத்தொடரின் கதை என்ன?

90 களை காலப் பின்னணியாகக் கொண்ட கதை. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அயலி என்ற தெய்வம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் நம்பிக்கைகளும் வழிபாடுகளும் உள்ளன.பெண்கள் பருவம் எய்தியவுடன் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பது அங்குள்ள வழக்கம்.அதை மீறினால் அது தெய்வ குற்றமாகக் கருதப்படும்.இதனால் அங்கு படிக்கும் பெண்கள் ஒன்பதாம் வகுப்பு தாண்டுவதில்லை.பள்ளிப்படிப்பையே தாண்டாத நிலையில் எப்படிக் கல்லூரிக்குச் செல்வார்கள்? இப்படிப் பெண் கல்வி கேள்விக்குறியாக இருக்கிறது.

அந்தக் கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுக்கு படித்து டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருக்கிறது, ஆனால் ஊரில் இப்படி ஒரு கட்டுப்பாடு உள்ளது.அதை மீறவும் முடியாது. அதனால் தமிழ்ச் செல்வி தான் வயதுக்கு வந்த விஷயத்தை மறைக்கிறாள் தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கிறாள்.
இவளுக்கு பல பிரச்சினைகள் வருகின்றன.கல்விக் கனவுடன் இருக்கும் அவள்,அதனை தனது அம்மாவின் உதவியுடன் எப்படி எதிர்கொண்டு சமாளித்து மேல் எழுகிறாள்? என்பதும், இவை அனைத்தையும் தாண்டி டாக்டர் ஆனாளா ? இல்லையா ? என்பதும்தான் படத்தின் கதை செல்லும் பாதை.

இணையத் தொடர் என்றாலே அதில் உள்ள சுதந்திரத்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு படைப்பு சுதந்திரம் என்கிற பெயரில் பயங்கரமான வன்முறைகள், அருவருக்கும் காட்சிகள், ஆபாச வசனங்கள் என்று குப்பைகள் போல் பல தொடர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு நல்ல சமூகக் கருத்தை எடுத்துக்கொண்டு உருவாக்கிய இயக்குநர் முத்துக்குமாரை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

கதை பெண் கல்விக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள், இக்கால நடப்பு சமூகத்தின் மீதும் கேள்வி கேட்டு விமர்சனம் வைக்கிற அளவிற்கு காட்சிகள் பொருந்துகின்றன.

நம்பிக்கைகள் என்கிற பெயரில் மூடநம்பிக்கையை விதைப்பது எப்படி? அதைக் கொண்டு ஆணாதிக்க சிந்தனையை வளர்ப்பது எப்படி ? பெண்சமுதாயத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இவற்றையெல்லாம் பயன்படுத்துவது எப்படி?என்கிற திட்டமிட்ட போக்கைக் காட்சிகள் மூலமும் வசனங்கள் மூலமும் படம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநயஸ்ரீ நடிப்பில் முதலிடம் பெறுகிறார். அவரது அம்மாவாக , கட்டுப்பெட்டித் தனத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அம்மாவாக வரும் அனுமோல் தன் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார்.தமிழ்செல்வியின் அப்பாவாக நடித்திருக்கும் அருவி மதன், பாசக்காரத் தந்தை. ஆனாலும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவராக வருகிறார்.அவரது நடிப்பு நேர்த்தி.

வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் லிங்கா, குறை இல்லாத நடிப்பு.சிங்கம்புலி, ஆசிரியராக வரும் டி.எஸ்.ஆர்.சீனிவாசமூர்த்தி ஆகியோர் வரும் காட்சிகள் சிரிப்பு ரகங்கள்.

காயத்ரி, லவ்லின், தாரா, பிரகதீஷ்வரன் என தொடரில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் கிராமத்து மாந்தர்களாகவே வாழ்ந்துள்ளனர்.
ஒரு பெண்ணின் பார்வையில் அவளது இதயத்தில் புகுந்து சிந்தனை செய்து இயக்கியது போல் இருக்கிறது இத்தொடர்.

ஆங்காங்கே தெறிக்கும் வசனங்கள் உண்மையை அறைகின்றன.
ராம்ஜியின் ஒளிப்பதிவு கிராமத்தின் இயல்பை கண் முன் நிறுத்துகிறது.ரேவாவின் பின்னணி இசையில் தரம் .

ஒரு நல்ல சமூகக் கருத்தை இணைய தொடர் என்கிற சுதந்திர ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ள இயக்குநர் முத்துக்குமாரைப் பாராட்டலாம் .அனைவரும் பார்க்கும் படியான ஓர் இணைய தொடர் இது.