கே.ஜெ.ஆர் ,விஜி வெங்கடேஷ் ,இசபெல்லா, வசுந்தரா,சிந்தூரி ,அஜித் கோஷி,ரமா,ரங்கராஜ் பாண்டே ,மோகன்ராம், மன்சூர் அலிகான் ,செல்வி,ஜானகி,ராம்ஜி,அருள் டி. சங்கர்,விமல்குமார் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் தென்பாதியான்.
ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.எடிட்டிங் தினேஷ்குமார். கலை : ராமு தங்கராஜ். ஸ்வஸ்திக் விஷன் வழங்கும் இப்படத்தை எஸ்.கே.பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன் தயாரித்துள்ளனர்.
தடகளப் போட்டியினை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது இந்த ‘அங்கீகாரம்’ திரைப்படம்.
விளையாட்டில் திவுமைசாலிகளை மேலே வரவிடாமல் தடுக்கும் அரசியலையும் அதில் உள்ள மேட்டிமை ஜாதி உணர்வையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கதையை எடுத்துக்கொண்டு ஓர் அடித்தட்டு வர்க்கத்து விளையாட்டு வீரரின் போராட்டமாக இந்தப் படம் உருவாகி உள்ளது.அறிமுகம் கிடைப்பதும் அடையாளம் கிடைப்பதும் என்று பல்வேறு தடைகளைக் கடந்து அங்கீகாரத்திற்குப் போராடும் ஒரு விளையாட்டு வீரனின் கதை இது என்றும் கூறலாம்.
ஆதிரன் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வமுள்ள தடகள வீரனாக இருக்கிறான் .தேசியப்போட்டியில் பங்கேற்று வென்று காமன்வெல்த் போட்டியில் பங்கெடுப்பது அவன் கனவு. அவனது தாய் தூய்மைப் பணியாளராக வேலை பார்க்கிறாள். ஒரு தங்கையுடன் இருக்கும் குடும்பத்தில் வறுமையுடன் வாழும் இளைஞனாக அவன் இருக்கிறான். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தான் வென்று விட்டால் தனது கனவுகள் நிறைவேறி குடும்பத்தில் மறுமலர்ச்சி நிலவும் என்று நம்புகிறான். ஆனால் அவன் மேலே வரக்கூடாது என்று பல வகையிலும் விளையாட்டுக்கான தேர்வுப் பிரிவு அமைப்பின் பொறுப்பாளர்கள் முதல் பலரும் தடையாக இருக்கிறார்கள்.ராஜஸ்தான் ஜோத்பூரில் நடைபெற்ற 67 வது தேசியப் போட்டியில் அவன் வெல்கிறான். ஆனால் தொடர்ந்து போட்டியிட முடியாமல் அவனுக்குக் காலில் காயம் ஏற்படுகிறது ..இந்த நிலையில் தடைகளை வென்று எப்படி முத்திரை பதிக்கிறான் என்பதைக் கலகலப்பும் சுவாரசியமும் கொண்ட உணர்ச்சிகரமான படமாகச் சொல்வதுதான் ‘அங்கீகாரம்’ படத்தின் கதையின் பயணம்.
படத்தில் ஆதிரன் பானுமதியாக கே ஜே ஆர் நடித்துள்ளார்.ஒரு தடகள விளையாட்டு வீரருக்கு உரிய உடல் கட்டோடும் மிடுக்கான தோற்றத்தோடும் அதே நேரம் நெருக்கடிகளைச் சந்திக்கும் மனதோடும் அவர் தனது தோற்றத்திலும் உடல் மொழி வெளிப்பாட்டிலும் நடிப்பிலும் சிறப்பாக வெளிபட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தனது உரிமைக்காகவும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் நீதிமன்றத்தில் குரல் கொடுக்கும் போது அவர் மேலும் வலுவுள்ள பாத்திரமாக மாறித் தெரிகிறார்.
. நாயகனின் தாயாக துப்புரவுத் தொழிலாளி பானுமதியாக ரமா நடித்துள்ளார்.ஒரு பாசமுள்ள தாயாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நாயகனின் சகோதரி செல்வியாக இஸபெல்லா வருகிறார்.நம்பிக்கை தரும் பயிற்சியாளர் ருத்ராவாக வசுந்தரா கம்பீரத் தோற்றத்தில் வருகிறார்.இன்னொரு தடகள வீராங்கனையாக சத்யா பாத்திரத்தில் சிந்தூரி நடித்துள்ளார்.
படத்தில் நீதிமன்றத்தில் சுமார் பத்து ஹியரிங் காட்சிகள் வருகின்றன. நீதிபதியாக ரங்கராஜ் பாண்டேயும் மோகன்ராமும் நடித்துள்ளனர் .விளையாட்டுத்துறை அமைச்சராக மன்சூர் அலிகான் வருகிறார்.
.ஆதிரனுக்கு எதிரான மனநிலை கொண்டு வாதாடும் அட்வகேட் ஜெனரலாக பார்வையிலே ஒவ்வாமையை உமிழும் ஆண்டாள் பாத்திரத்தில் விஜி வெங்கடேஷ் சிறப்பாக நடித்துள்ளார்.
விளையாட்டு தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பவரும் தனது அலட்சியத்தை வெளிப்படுத்திக் கவனம் பெறுகிறார்.
வறுமையை வீழ்த்தி திறமை யைக் காட்ட ஒரு அடித்தட்டு வீரனின் கதையை மனதில் உறைக்கும் விதமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர் தென்பாதியான்.தனது லட்சியத்தில் உறுதியாக நின்று தடையாக இருக்கும் அரசியலையும் அதிகார வர்க்கத்துக் கயவர்களையும் தோலுரிக்கும் வண்ணம் தனது அநீதிக்காக ஆதிரன் நீதிமன்றத்தில் குரல் கொடுக்கும் காட்சிகள் சுவாரஸ்யம் மட்டுமல்ல அனைவரது மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளன.நீதிமன்ற விவாதத்தில் ஒரு தேர்ந்த வசனகர்த்தாவாக இயக்குநர் வெளிப்படுகிறார்.
பொதுவாக இது மாதிரி ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்களில் ஒரு வீரன் சந்திக்கும் இடர்ப்பாடு போராட்டங்களை மீறி வெல்வதே கதையாக இருக்கும். ஆனால் இதில் தனக்கான அநீதிக்காக நீதிமன்றத்தின் மூலம் குரல் கொடுத்து தனக்கான நீதியைப் பெறும் வகையில் ஒரு சட்டப் போராட்டத்தை காட்சிகள் ஆக்கியுள்ளார் இயக்குநர்.
திறமையையும் ஆர்வத்தையும் வைத்துக்கொண்டு ஒருவன் அங்கீகாரத்தைப் பெற எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது என்பதை சொல்லுகின்ற படத்தின் கதை படம் பார்ப்பவர்களைச் சிந்திக்க வைக்கும் .
இயக்குநரின் பாதையில் கைகோர்த்து இசையமைப்பாளர் ஜிப்ரான்,ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத் இருவரும் பயணம் செய்துள்ளனர்.
தொழில்நுட்ப அசத்தல்களுக்கு இடம் தராத வகையில் மிதமான திரையாக்கமாக இருந்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுத்துக் கொண்ட முயற்சிக்காகவும் அதற்கான நோக்கத்திற்காகவும் இந்தப் படத்தைப் பாராட்டலாம்.


