பாரி இளவழகன்,ரம்யா ரங்கநாதன்,சேத்தன் ,ரோஜா செல்வமணி,பரிதாபங்கள் கோபி,செல் முருகன்,நிகிலா சங்கர்,இஸ்மத் பானு,
சுதர்சன் காந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி, இயக்கி இருக்கிறார், பாரி இளவழகன்.இசை: பரத் சங்கர்,ஒளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட் , படத்தொகுப்பு : பார்த்தா,கலை இயக்குநர்: மகேந்திரன்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & ஈரா என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளனர்.
சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட குடும்பமாக சேத்தன்- ரோஜா தம்பதிகள் வசிக்கிறார்கள்.குடும்பத்தின் அதிகாரத்தை ரோஜா வைத்திருக்கிறார் .அவர் ஈரமாவு வியாபாரம் செய்து வருகிறார் .அவரது உழைப்பாலும் கண்டிப்பாலும் குடும்பத்தில் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிச் சொந்த வீடு வரை சென்று நிமிர்ந்து நிற்கிறது குடும்பம் . சேத்தன் மனைவிக்குப் பயந்த குடிப்பழக்கம் உள்ள கணவர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். இளைய மகன் தான் பாரி இளவழகன்.
சேர்த்தனுக்குத் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் ஆழ் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கிறது.அவர் ரோஜாவை வேண்டா வெறுப்பாகத்தான் கல்யாணம் செய்து இருந்தார்.அப்படியே வாழ்க்கையை ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அவரது மகன் பாரி இளவழகன் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை விரும்புகிறார்.மகனின் காதலுக்கு சேத்தன் பச்சைக் கொடி காட்டுகிறார்.ஆனால் ரோஜாவோ தனது ஜாதிக்கார பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். ஒரு பக்கம் ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலித்து அவர்கள் வீட்டில் சம்மதம் பெற்று இதை வீட்டில் அம்மாவுக்குப் பயந்து சொல்லாமல் இருக்கிறார் பாரி. இருவருக்கும் கலாச்சாரம் ஒத்துப் போகுமா என்று நாயகன் குழப்பத்தில் இருக்கிறார் . மறுபக்கம் சூழலில் ரோஜா தனது மகன் பாரிக்குத் தனது தம்பி செல்முருகன் மகளை நிச்சயம் செய்து திருமண ஏற்பாடும் நடக்கிறது. .மணமேடையிலும் பாரி அமர்ந்து விட்டார்.அந்தத் திருமணம் நடந்ததா? காதல் என்ன ஆயிற்று? என்பதே ’அன்பே டயானா ’படத்தின் மீதிக் கதை.
சென்னையில் வசிக்கும் தெலுங்குக் குடும்பம் என்கிற பின்னணியே நகைச்சுவைக்கும் கலகலப்புக்கும் இடம் கொடுக்கும் ஒரு தளமாக அமைந்து கதையை கலகலப்பாக நகர்த்துகிறது. அவர்கள் தெலுங்கு ,தமிழ் கலந்து பேசுவது அதை வேறு மாதிரி மற்றவர்கள் புரிந்து கொள்வது என்று சிரிப்புக்கு இடம் உள்ள காட்சிகள் என்று படம் முழுக்க நகைச்சுவைத் தோரணம் கட்டி இருக்கிறார் இயக்குநர்.
படத்தில் பாரி ,சிருமாமில்ல சீதா கிருஷ்ணா என்ற பாத்திரத்தில் வருகிறார். காதலிக்கவும் ஆசை அம்மாவிடம் சொல்லவும் பயம் என்ற குழப்பத்தில் தவிக்கும் அந்தப் பாத்திரத்தில் அவர் இயல்பாக நடித்திருக்கிறார். அதேபோல் நாயகியாக நடித்திருக்கும் ரம்யா ரங்கநாதன் தனது தோற்றப் பொலிவால் அந்த மேஜிக் கோன்சால்வ்ஸ் பாத்திரத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார்.எதையும் நேருக்கு நேர் முகத்துக்கு முகம் கேட்டு விடும் அந்தப் பாத்திரம் தற்காலப் பெண்களின் குணத்தை வெளிப்படுத்துகிறது.அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக
அவர் நம்ப வைக்கிறார். குடித்துவிட்டு மனைவியுடன் வீரம் பேசும் சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் பாத்திரத்தில் சேத்தன் கலகலப்பூட்டி உள்ளார். குடித்துவிட்டுச் சலம்புவதும் பிறகு பெட்டிப்பாம்பாய் ஒடுங்குவதும் என்று அவர் வரும் காட்சிகளில் கலகலப்பு களை கட்டுகிறது.
கண்டிப்பும் ஜாதிப்பற்றும் கொண்ட குடும்பத் தலைவியாகவும் குடும்பத்தைத் தூக்கி சுமக்கும் பெண்ணாகவும் வரும் சரளா பாத்திரத்தில் ரோஜா வெளுத்து வாங்கி இருக்கிறார். தெலுங்கும் தமிழும் கலந்து பேசுவது சரியான நகைச்சுவையாக ஆங்காங்கே பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கும். அதே நேரத்தில் கடைசியில் அந்த பாத்திரத்தின் விஸ்வரூபம் ரோஜாவின் இடம் என்ன என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. நாயகனின் நண்பன் பெங்களூர் பாபாவாக வரும் ,பரிதாபங்கள் கோபி தன் அசட்டுத்தனங்களால் சிரிப்பு மூட்டுகிறார். மேலும் படத்தில் செல்முருகன், நிகிலா ஷங்கர், கிருஷ்ணர் பானு சுதர்சன் பாண்டி ஆகியோர் தத்தமது பாத்திரங்களால் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.
இந்துக் குடும்பமும் கிறிஸ்தவ குடும்பமும் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இருவரும் மாறி மாறி எதிர் தரப்பு கலாச்சாரங்களையும் நடை உடை பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொள்ளும் காட்சிகள் நல்லதொரு கற்பனை மட்டுமல்ல ரசிக்கவைக்கும் காட்சிகளாகவும் உள்ளன.
ஷெல்லி கேலிஸ்டின் கேமரா இயக்குநர் நினைத்த பாதையில் பயணித்துள்ளது.பரத் சங்கரின் இசையில் சில பாடல்கள் கேளிக்கை ரகமாக ஒலிக்கிறது.மொத்தத்தில் இந்தப் படம் வணிக நோக்கில் ஒரு கலகலப்பான படமாக உருவாக்க முயன்று இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட படத்தில் பெண் கல்வி பெண் உரிமை பற்றியும் ஆங்காங்கே கருத்து முத்துகள் உதிர்கின்றன. ஒரு பெண் நினைத்தால் ஒரு குடும்பத்தை எப்படியும் கொண்டு செல்லலாம் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் ரோஜா பாத்திரத்தின் மூலம் காட்டியுள்ளார் இயக்குநர்.
திரையரங்கு சென்று பார்ப்பவர்களுக்கு கலகலப்புக்கு உத்திரவாதமாக இந்தப் படம் இருக்கும்.


