‘இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், ஸ்வாசிகா, சாய்குமார் ,அஜய் கோஷ்,ரமேஷ் இந்திரா, ராஜ்குமார் காசிரெட்டி, பேபி நட்சத்திரா நடித்துள்ளனர்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஷிவா நிர்வாணா.

ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார் .பிரவீன் புடி படத்தொகுப்பு செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை அனல் அரசு, ரியல் சதீஷ் அமைத்துள்ளனர்.ஒய். ரவிசங்கர் மற்றும் நவீன் எர்னேனி தயாரித்துள்ளனர்.

நாயகன் ரவி தேஜா அதாவது திரிநாத் ஆத்தூர் என்கிற கிராமத்தில் மனைவி பிரியா பவானி சங்கர் அதாவது காவேரி , மகள் நட்சத்திரா அதாவது மணிகண்டா உடன் வசிக்கிறார். சில ஏக்கர் சொற்ப நிலத்தில் வாழை சாகுபடி செய்து வாழைத்தார் வியாபாரம் செய்துவருகிறார்.ரவி தேஜா குடிப்பழக்கத்துக்கு ஆளானவர். அவரால் குடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலையை அடைந்தவர். அப்படிப்பட்டவர் ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு இருக்கிறார். அப்போது மது அருந்துவதை நிறுத்தி இருக்கிறார். அவரது ஒரே செல்ல மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். தன் மகளுக்குத் துணிச்சலாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார் .பெண்கள் வெளியே பகிர்ந்து கொள்ளத் தயங்கும் அஞ்சும் விஷயங்களை தைரியமாகப் பெற்றவரிடம் சொல்ல வேண்டுமென்று வளர்த்து வருகிறார்.அவரது மனைவியோ உள்ளொடுங்கிய பயந்த சுபாவம் உள்ளவர் .சச்சரவுகளை கணவனிடம் சொல்லி அதைப் பெரிதாக வளர்ப்பதில்லை.இப்படிப்பட்ட நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சில பள்ளிக்குழந்தைகள் அதை வெளியே சொல்லத் தயங்கிய போது மணம்மா தனது தந்தையிடம் அதைத் தைரியமாகக் கூறுகிறார். அப்படிப்பட்ட பாலியல் குற்றவாளிகளை வெகுண்டெழுந்து எப்படி ரவி தேஜா வேட்டையாடுகிறார் என்பதுதான் இந்த 145.20 நிமிடங்கள் கொண்ட ’இருமுடி கட்டு’ படத்தின் மீதிக்கதை.

இந்தப் படம் ஒரு பிளாஷ்பேக் உத்தியில் தொடங்குகிறது. தன் மகள் தூங்குகிறாள் யாரும் சத்தம் செய்யக்கூடாது என்று சாலையில் செல்லும் வாகனங்களைக்கூட ஹாரன் அடிக்க விடாமல் ஆள் வைத்து ரவி தேஜா அமைதியாகப் பார்த்துக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட நிலையில் ஹாரன் ஒலிக்க விட்டு வரும் ஒரு லாரி டிரைவரை அடித்து துவம்சம் செய்கிறார். அந்த மகளின் தூக்கம் எப்படிப்பட்டது என்பதைக் கூறுவதற்கு முன் கதைக் காட்சிகள் விரிகின்றன.அதன் உணர்ச்சி மிகுந்த பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் ரவி தேஜா, திரிநாத் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளார். 24 மணி நேரமும் இடுப்பில் செருகிய பாட்டிலும் இழுத்துக் கட்டிய லுங்கியுமமாக இருக்கிறார். எப்போதும் போதையில் இருக்கும் அந்தப் பாத்திரத்தில் அவர் கச்சிதமாகப் பொருந்தி கலைந்த தலை, குலைந்த உடை, கிறங்கிய விழிகள், மிரட்டும் கோபம் என்று அச்சு அசலாக அந்தக்குடிகாரன் பாத்திரத்தில் பொருந்துகிறார். குடிகாரனாக இருந்தாலும் பஞ்சமில்லாமல் தனது மகள் மீது பாசத்தையும் மனைவி மீது காதலையும் நண்பர்கள் மீது அன்பையும் செலுத்துபவராகவும் எதிரிகளை துவம்சம் செய்பவராகவும் என்று அவர் தன் தோற்றம்,உடல்மொழி,நடிப்பு ,பல்வேறு பாவனைகள் என மிரட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

அவருடன் ஐயப்பன் கோவில் செல்லும் குருசாமியாக சாய்குமார் நடித்திருக்கிறார். அவர் தனது பாந்தமான தோற்றத்தின் மூலம் அன்பான நடவடிக்கைகள் மூலமும் பார்ப்போர் மனதில் பவ்யமாக அமர்ந்து கொள்கிறார்.ரவி தேஜாவின் மனைவி காவேரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் .ஓர் அன்பான அடக்கமான குடும்பத் தலைவியாகவும் சச்சரவுகளை, கோபக்கார கணவரிடம் கொண்டு செல்லாத ஒரு சாது மனைவியாகவும் பிரச்சினைகளை தனக்குள் ஒளித்து வைத்துக் கொள்பவராகவும் அந்தப் பாத்திரத்தில் இயல்பாகத்தோன்றி நடித்துள்ளார்.
படத்தில் மணம்மா என்கிற மணிகண்டா பாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுமி நட்சத்திரா துறுதுறுப்பான பேசும் விழிகள் துடிதுடிப்பான குணச்சித்திரம் என்று
அந்தப் பாத்திரத்தை நம் பக்கத்து வீட்டுக் குழந்தை போல உணர வைக்கிறார். அவ்வகையில் பார்ப்பவர்கள் மனதில் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.
தந்தை குடிப்பதை அவர் விருப்பம் என்று அனுமதிக்கும் அந்தக் குழந்தை ,பிறகு குடிக்க வேண்டாம் என்று சொல்கிற போது தந்தையும் குடியை விடும்போது அது மேலும் அழுத்தம் பெறுகிறது. இந்தப் படத்தில் அஜய் கோஷ் பிரதான வில்லனாக இருக்கிறார். அவரைச் சார்ந்து பல்வேறு வில்லன் முகங்கள் தென்படுகின்றன. அவை அனைத்தும் கதாநாயகனிடம் எதிர்நிலை நின்று மோதலைச் சந்திக்கின்றன.

’நூறு சாமி’ படத்தில் பாந்தமாக வந்த ஸ்வாசிகா, இதில் எதிர் நிலைப் பாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களின் எரிச்சல்களை ஏகோபித்த முறையில் அள்ளிக் கொள்கிறார்.வித்தியாச பாத்திரம் ஏற்ற வகையில் அந்த எதிர்நிலை பாத்திரத்திலும் அவர் நிற்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

படத்தின் பெரும்பகுதி  ஐயப்ப சாமி பூஜைகள், வழிபாடு,விழாக்கோலம், மலைப்பயணம் என்று திரையில் கூட்டம் நிறைக்கிறது. ஆட்டம் பாட்டங்களும் படத்திற்கு வேறு நிறம் காட்டி ப் பக்தியை ஒரு கொண்டாட்ட மன நிலையாக மாற்றுகிறது.அதேவேளையில் வீரியத்துடன் வீரம் காட்டும் சண்டைக் காட்சிகளில் ஆக்சன் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை.

பகைவர்களையும்பாலியல் கொடுமை செய்யும் முகமூடி மனிதர்களையும் ஒவ்வொருவராகக் காட்டுவது அதிர்ச்சி தரும் திருப்பங்கள்.

முதல் பாதியில் இயல்பாக செல்லும் கதை பின் பாதியில் மிகையான செண்டிமெண்ட் காட்சிகளுக்குள் சென்று விடுகிறது .

அதிர்ச்சி தர வேண்டும் என்று நல்ல பாத்திரங்களை எதிர்நிலையாக மாற்றி இருப்பது உறுத்துகிறது. குறிப்பாக சாய்குமார் பக்தி வசப்பட்டு குருசாமியாக இருப்பவர், கொலை செய்பவராக மாறுவதாக காட்டுவது அந்தப் பாத்திரத்தை கொலை செய்வதற்கு சமமாக உணர வைக்கிறது.பக்தியில் உள்ளவரே நம்ப முடியாதவராக மாறுவது அறமல்ல என்று தோன்றுகிறது.

யூகிக்கவைக்கும்படி சில  காட்சிகள்  இருந்தாலும் நம்மை யோசிக்க விடாமல் தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் பிரவீன் புடி.

படம் முழுக்க கூட்டங்கள் நிறைக்க வண்ணமயமான காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா.சண்டைக் காட்சிகளிலும் அவரது கேமரா சுழன்று சுழன்று படப்பதிவு செய்துள்ளது.

ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ஒரு வணிக ரீதியிலான படத்தை உயர்த்தும் வகையில் உள்ளன.ஐயப்பன் பாடல்களையும் பக்திரசம் வழிய துள்ளலோடும் எழுச்சியோடும் உருவாக்கி இருக்கிறார் .கட்டு கட்டு இருமுடி கட்டு, மல்லிப்பூ பல்லக்கில் ,தேவதையே தேவதையே போன்ற பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிப்பவை.

மொத்தத்தில் இப்படம் சென்டிமெண்ட் பேக்கேஜ் என்றே சொல்ல வேண்டும்.இப்படிப்பட்ட கலவை ஆந்திராவில் வசூலை அள்ளும் .தமிழ்நாட்டில் அந்தக்கலவை காரம் அதிகமாக உணரப்படலாம்.

மொத்தத்தில் பக்தியும் பாசமும் கலந்து நிறைந்த இந்த  ’இருமுடி கட்டு’ படம் பெண்களைக் கவரும் வகையில் உருவாகி உள்ளது.