டி அந்தோணி ,மதுமிதா தாஸ் ,ஜீவா ரவி , ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி நடித்துள்ளனர். எழுதி இயக்கித் தயாரித்துப் படத்தொகுப்பும் செய்துள்ளார் டி.அந்தோணி.
அந்தோனி அதாவது கார்த்திக் தாயை இழந்து தந்தையைப் பிரிந்து தனிமையில் வாழ்கிறார். குடி புகை என்ற பழக்கங்களின் அடிமையாக இருக்கிறார். அவ்வப்போது பெண்கள் தொடர்பு வேறு.அவ்வப்போது விலை மாதர்களை அழைத்துப் பயன்படுத்திக் கொள்வார். வழக்கமானவர்கள் வராமல் போகவே ஒரு நாள் புதிதாக ஒருவரை அனுப்பி வைக்கிறார் தரகர். அவர்பெங்காலிப் பெண். அவர்தான் மதுமிதா தாஸ்.பாலியல் கடந்து அவர்களுக்குள் ஒரு நட்பு வளர்கிறது.கார்த்திக் ஒரு மது அடிமையாக இருந்தாலும் அவர் மீது மதுவிற்கு ஒரு பரிவுணர்ச்சி வருகிறது மதுவைத் திருமணம் செய்து கொள்ள கார்த்திக் நெருங்கும்போது மதிவிற்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை இருப்பது அது பள்ளியில் ஊட்டியில் படிப்பது தெரிய வருகிறது. அதை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். .ஆனாலும் அவர் நிறுத்த முடியாமல் தவிக்கிறார். புகைப்பழக்கத்தையும் குடிப்பழக்கத்தையும் விடச் சொல்கிறார். மன்றாடுகிறார். ஒரு கட்டத்தில் மறுவாழ்வு மையம் சென்று குடியைக் கைவிட முடிவெடுக்கிறார்.மதுவும் கார்த்திக்கின் பலவீனங்களை அப்படியே ஏற்றுக் கொண்டு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். இருந்தாலும் அவரது மதுப்பழக்கம் குறுக்கே நிற்கிறது மதுவுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. பிரிகிறார். மதுவைப் பிரிந்து கார்த்திக் தவிக்கிறார்.அப்போது எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கின்றன.மதுவை மீண்டும் சந்தித்து திருமணம் செய்து கொண்டாரா இல்லையா அதன் முடிவு என்ன என்பதுதான் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் டி.ஆண்டனி எப்போதும் புகையும் குடியுமாக இருக்கும் அந்த பலவீனப்பட்ட வாலிபனாகக் கண் முன் தெரிகிறார். அதற்காக படம் முழுக்க அதே காட்சிகளை வைத்திருப்பது உறுத்துகிறது.
நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ் முதல் படம் போன்றே தெரியவில்லை அத்தனை நுட்பமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.இருவரும் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொள்கிறார்கள் பெரும்பாலும் .இருந்தாலும் அது அவசியம் இல்லாமல் அவர் கண்களாலேயே பேசுகிறார்.
படத்தின் கதை என்பது மதுமிதா ,கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளை அனுபவங்களை தனது இரண்டு நண்பர்களிடம் கார்த்திக் கூறுவது போலவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே இரு வேறு இடங்களில் மட்டும் தான் கதை சம்பவங்கள் நடப்பதாக இருக்கிறது.
நேரடி ஒலிப்பதிவு முறையில் காட்சிகள்படமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு அவசியம் இல்லை .அதனால் படம் பார்ப்பவர்கள் தான் சரியான ஒலிமைப்பு தெளிவில்லாமல் குழம்ப நேரிடுகிறது.படம் முழுக்க ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்வது பார்வையாளர்கள்-படத்துக்கான தொடர்பைத் துண்டித்து விடுகிறது.
ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி ஆகியோர் தத்தமது பாத்திரங்களின் மூலம் திரைக்கதையின் பயணத்திற்குத் துணை நின்று இருக்கிறார்கள்.
குறைந்த நிகழ்விடங்களில் கதை நகர்ந்தாலும் ஒளிப்பதிவாளர் பியேட்ரோ வில்லானி காட்சிகளை குழப்பம் இல்லாமல் எளிமையாகப் படமாக்கியிருக்கிறார்.பெரும்பாலும் கிடைக்கிற ஒளியிலேயே படமாக்கி இருக்கிறார்.
ஜெய்கர் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரது இசையில் பாடல்கள் அனைத்தும் பின்னணியிலேயே ஒலிக்கின்றன.
ஜோயி ரெடாவின் பின்னணி இசை வசனங்கள் இல்லாத இடத்தை நிரப்புகின்றன.
படத்தொகுப்பு செய்து நாயகனாகவும் நடித்திருக்கும் டி.ஆண்டனி, எளிமையான காதல் கதையை, எளிமையான முறையில் கூற முயன்று இருக்கிறார் .எனவே படமும் பெரிய தாக்கம் ஏற்படுத்தாமல் எளிமையான ஒரு படைப்பாக முடிந்து போய்விடுகிறது.
ஒரு தமிழ்ப் படம் என்று எடுத்துக்கொண்டு இருக்கிற பாத்திரங்களில் முதன்மையான பாத்திரங்கள் ஆங்கிலத்திலே பேசிக் கொண்டிருந்தால் பார்வையாளர்கள் எப்படி அதில் மனம் ஒன்றி நிற்பார்கள்?.அது ஒரு நெருடலாக இருக்கிறது.
இயல்பாக இருக்க வேண்டும் என்று படத்தின் காட்சிகள் நீளமாக உள்ளது பெரும் பின்னடைவாக இருக்கிறது.அது பார்வையாளர்களுக்கு சோர்வூட்டும் என்பதை இயக்குநர் நினைக்கவில்லை. திரும்பத் திரும்ப வரும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
படத்தில் போதை அடிமை திருந்துவது என்கிற பிரதான கருத்தை எடுத்துக் கொண்டு இருக்கலாம் அல்லது பாலியல் தொழிலாளிக்கு வாழ்வுகொடுக்கும் சிந்தனையை எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தெளிவில்லாமல் குழப்பம் நிலவுகிறது.
மொத்தத்தில், ’ஏன் என்னை ஏதோ செய்தாய்’ நினைத்தது வேறு நடந்தது வேறு.


