மக்களின் துன்பங்களுக்குக்காரணம் புத்தர் சொன்னது போல ஆசை மட்டுமா?. அன்பும் இருக்கக்கூடும் என்று செல்கிற கதை.அளவு கடந்த அன்பும் பாசமும் கூட துன்பத்தை விளைவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு செல்லும் ,அந்த சுகமான வலியைப் பற்றிப் பேசுகிறது ‘கரு மேகங்கள் கலைகின்றன’படம்.
இப்படத்தில் பாரதிராஜா யோகி பாபு, இயக்குநர் கௌதம் மேனன், அதிதி பாலன், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார், எஸ்.ஏ சந்திரசேகர் , டெல்லி கணேஷ், நிஜந்தன், மீனாள் உள்ளிட்ட ஏராளமான தெரிந்த முகங்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள்.
தங்கர் பச்சான் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார்.என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் ரியோட்டா மீடியா.
நீதிபதி ராமநாதன் வெளிநாட்டில் மகன், மகள், உள்நாட்டில் புகழ்பெற்ற வக்கீல் மகன் என்று உலகியல் ரீதியாக பெரிய வெற்றி பெற்ற மனிதர்.
பண நிம்மதி அளவிற்குப் பெற்ற பிள்ளைகளால் அவருக்கு மன நிம்மதி இல்லை. அது மட்டுமல்ல, ஓய்வு பெற்ற பிறகும் அவருக்குள் ஓர் உறுத்தல் நெஞ்சில் ஒரு முள்ளாக உறுத்திக் கொண்டுள்ளது. பலருக்கும் நீதி சொன்ன அவருக்குள் தீர்ப்பு எழுதப்படாத ஒரு வழக்கு நீண்டகாலம் முடிக்கப்படாமல் வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறது .அதை முடித்து வைக்கப் புறப்படுகிறார்.இப்படி ஒரு மனிதர்.
ஒரு குழந்தையைத் தன் குழந்தையாக வளர்த்த பாசத்தில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிற மனதுடைய இன்னொரு எளிய மனிதர்.இப்படி இரு வேறு தட்டுகளில் வாழும் மனிதர்கள் தங்கள் அன்பைத் தேடி புறப்படுகிற பயணத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத ஒருவரும், எதுவும் இல்லாத போதும் எல்லாம் உள்ளதாக மகிழும் அன்பைப் பெற்ற இன்னொருவரும் என அந்த இரு துருவ சந்திப்பில் பரஸ்பரம் உரையாடுகிறார்கள்.தங்கள் முன் கதைக்குள் மூழ்குகிறார்கள்.
அந்த இரு பாத்திரங்களின் தேடல் பயணத்தின் வழியே எதிர்ப்படும் மனிதர்களின் ஊடாடல்கள், வாழ்க்கைச் சம்பவங்கள், தமிழ்ச் சமூகத்தின் அறம், கலாச்சாரம் எல்லாமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இப்படிப்பட்ட அந்தக் கதை செல்லும் பாதையையும் பயணத்தையும் காட்சிகளாக்கி ஒரு பயண அனுபவமாக உணர வைக்கும் படம் தான் ‘கருமேகங்கள் கலைகின்றன’ .
படத்தில் வரும் பாத்திரங்களுக்குள்தான் எத்தனை வகையான உணர்ச்சிகள்.அன்பு ,ஆசை ,பாசம், ஆணவம்,கோபம், குரோதம் என்று பாத்திரம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சியைக் காட்டி தரிசனம் தருகின்றது.
நேர்மை வழி நிற்கும் நீதிபதி ராமநாதன்,உலகியல் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் அவரது மகன் வழக்கறிஞர் கோமகன்,பணத் தேவைக்காக வெளிநாடுகளில் வசிக்கும் நீதிபதியின் பிள்ளைகள், பெறாத பிள்ளையின் பாசத்தில் பைத்தியமாக இருக்கும் வீரமணி, பெரிய மனிதராக இருந்தாலும் அவர் கோரும் மன்னிப்புக்கு மனம் நெகிழாத இறுகிய பெண் கண்மணி,வளர்த்தவரையே தந்தையாக நினைக்கும் சிறுமி சாரல், அவளது அம்மா மீனா குமாரி, அத்தை, ராமநாதனின் மருமகள் என எத்தனை பாத்திரங்கள்.ஒவ்வொன்றும் சமகால சமுதாயத்தின் பிரதிபலிப்பாக உள்ளதை உணர முடிகிறது.
கண்களுக்கு ஒவ்வாமை தராத என் .கே. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு இதம். தன் காட்சிகளால் நம்மை சென்னை, கும்பகோணம், ராமேஸ்வரம், புதுக்கோட்டை,மானா மதுரை என்று பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் செல்கிறார் .வேகமான துண்டிப்புகள் மூலம் படத்தொகுப்பில் எரிச்சலூட்டும் அனுபவம் இல்லை .காரணம் எடிட்டர் லெனினின் ஆற்றொழுக்கான படத்தொகுப்பு. இரைச்சல்களும் ஓசைகளும் ஒலித்துணுக்குகளும்தான் பாடல்கள் என்று நிலவும் சமகாலத்து திரை அவலத்திலிருந்து நம்மை மீட்டு வருடுகின்றன ஜீ.வி .பிரகாஷின் இசையிலான பாடல்கள்.கவிப்பேரரசு வைரமுத்து வரிகளால் பாடல்களும் அதற்கான காட்சிகளும் படத்தைச் செழுமை செய்கின்றன.
‘செவ்வந்தி பூவே..’ பாடல் யோகி பாபு அந்த குழந்தைக்குமான அன்பை விரித்துரைக்கிறது. ‘மன்னிக்கச் சொன்னேன்’ பாடலோ விமோசனம் தேடும் ஒரு குற்றவாளி மனத்தின் குரலாக உள்ளது.பாடல்களில் கதைத்துவமும் கவித்துவமும் கலந்து எழுதியுள்ளார் வைரமுத்து.இப்படிப் பாடல்கள் வந்து எத்தனை நாள் ஆயிற்று!கதையின் தேவையை ஒட்டிய ஜீ.வி .பிரகாஷின் பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
இந்தப்படத்தின் வியப்பூட்டும் நடிகர் பாரதிராஜா தான்.அவரது தோற்றமும் உடல் மொழியும், தளர்ந்த பேச்சு மொழியும் அந்தக் கதாபாத்திரத்திற்கு உயரம் கூட்டி உள்ளன.
தன்னால் கைவிடப்பட்ட தனது மகளிடம் மன்னிப்பு கோரும் அந்தக் காட்சி அவரது நடிப்புக்கும் பாத்திரத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்ட மாண்புக்கும் சாட்சி.
படத்தில் வரும் அதிதி பாலன், யோகி பாபு, கவுதம் மேனன்,டெல்லி கணேஷ், எஸ் ஏ சந்திரசேகர், மோகனா சஞ்சீவி, சிறுமி சாரல் தொடங்கி படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனைக் நடிப்புக் கலைஞர்களும் பாத்திரங்களுக்குள் தங்களை கரைத்து ஊற்றியுள்ளனர்.
உலகமயமாக்கல் என்ற கொடிய பூதம் மனிதர்களிடம் இந்நாள் வரை ஈரமாக இருந்த அன்பையும் பாசத்தையும் உலரச் செய்துவிட்ட கொடுமையைக் கூறுகிறது இப்படம்.
இயல்புகெடாமல் கதை சொல்லிக் காட்சிகள் அமைப்பதில் சமரசம் செய்யாதவர் தங்கர் பச்சான்.அதை இப்படத்திலும் மெய்ப்பித்துக் காட்டி
வணிகப் பிடிவாதங்களுக்குள் அடங்க மறுக்கும் இயக்குநராக நிமிர்ந்து நிற்கிறார் தங்கர்பச்சான். வணிக சினிமாக்களுக்குப் பழகியவர்களுக்கு இப்படம் சற்று விலகல் தரலாம். ஏனென்றால் மதுபானம் குடித்துப் பழகியவர்களுக்கு இளநீர் குடிப்பது பிடிப்பதில்லை.
மொத்தத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் நம் மனதில் கலையாமல் அழியாச் சித்திரமாகப் பதிவாகிறது. உலக வணிக மயமாக்கல் மூலம் அச்சுறுத்தப்படும் எந்நாட்டவர்க்கும் பொருந்தும் ஒரு பொதுமைத் தன்மையோடு அமைந்திருப்பது இதன் சிறப்பு.இதனால் உள்ளூர் தன்மையில் உருவாகி உலகத் தன்மையோடு கலந்து உயர்ந்து நிற்கிறது இப்படம்.