‘பரம்பொருள்’ விமர்சனம்

‘போர் தொழில்’ படத்திற்குப் பிறகு சரத்குமார் நடிக்கும் பாத்திரங்களின் மீது ரசிகர்களின் கவனம் பெருமளவில் குவிந்து வருகிறது. அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் ‘பரம்பொருள்’.

அமிதாஷின் தங்கையின் மருத்துவ செலவிற்குப் பல லட்சம் தேவைப்படுகிறது. பணத்திற்காகச் சிலை கடத்தல் ஈடுபடுகிறார் . முதலில் ஒரு சிலை திருட்டில் ஈடுபடுகிறார் .போலீஸ் அதிகாரி சரத்குமார் வீட்டிலும் அவர் திருட முயற்சித்து அவரிடம் பிடிபடுகிறார்.

பண நெருக்கடிக்காகச் சிலை திருடும் நாயகன் அமிதாஷும் அதிகாரத்தை வைத்து பணம் சம்பாதிக்க ஆசைப்படும் சரத்குமாரும் ஒரு கட்டத்தில் கூட்டணி சேருகிறார்கள். திருடப்படும் சிலைகளைக் கைப்பற்றி அதை விற்பனை செய்து சம்பாதிக்க எண்ணுகிறார் சரத்.

ஒரு நிலையில் பணப்பலனைத் தனக்கும் பழியை எதிரி மீதும் போட நினைக்கிறார். அவரது எண்ணம் நிறைவேறியதா இல்லையா என்பதை விறுவிறுப்பாகச் சொல்வது தான் பரம்பொருள்.

போர்தொழில் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்த சரத் இதில் எதிர்மறை நிழல் விழும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அது ஒரு பெரிய வித்தியாசமாக உணர முடிகிறது. இப்படத்தில் சரத் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு அஞ்சாமல் இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் தனது ஒவ்வொரு சொல் செயல் அசைவின் மூலமாக அவர் எதிர்மறைக் குணம் கொண்டவர் என்பதை நிரூபிக்கிறார். போலீஸ் மீது சட்டம் பேசிக் கேள்வி கேட்பவரை அவர் எளிதில் வழக்குகளில் சிக்க வைத்துப் பழிவாங்குகிறார்.

நாயகனாக நடித்திருக்கும் அமிதாஷ் இந்தப் பிள்ளையும் பால் குடிக்குமா என்கிற முகத்தை வைத்துக்கொண்டு ஆபத்தான அக்கினி பரீட்சைகளில் இறங்குகிறார். எந்த நெருக்கடியையும் சமாளிப்பது அவரது குணமாக இருக்கிறது .அவரது இயல்பான நடிப்பு அதற்குத் துணை போகிறது. 

காஷ்மீரா பர்தேசி நாயகியாக நடித்துள்ளார். சிலை வடிக்கும் கலைஞராக வருகிறார். தோற்றம், நடிப்பில் குறை சொல்ல ஏதுமில்லை.

வின்சென்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் சிலை கடத்தல்காரர்களாக வருகிறார்கள். அமிதாஷின் தங்கையாக நடித்திருக்கும் சுவாதிகா, சார்லஸ் வினோத், கஜராஜ், செந்தில்குமரன் என மற்ற பாத்திரங்களில் வருபவர்களும் மனதில் பதிகிறார்கள்.

எஸ் பாண்டி குமாரின் ஒளிப்பதிவு பகல் இரவு காட்சிகளை அழகாகப் பதிவு செய்துள்ளது. குறை ஒளியில் கூட காட்சிகளைப் பார்க்கும்படி படமாக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளன. நாகூரான் ராமச்சந்திரன் காட்சிகளை அழகாகத் தொகுத்துள்ளார்.

செய்திகளில் மட்டும் சிலை கடத்தல் பற்றிப் படித்துப் பார்த்துவிட்டு கடந்து போகும் நமக்கு அதன் பின் உள்ள நிழல் உலகத்தை விரிவாக காட்டியுள்ளார்கள். கதை சொல்லும் விதத்தாலும் தெளிவான திரைக்கதையாலும் இயக்குநர் சி.அரவிந்த்ராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

சிலைக் கடத்தலை மட்டும் வைத்துக் கொண்டு முழு நீளப் படமாக அதையும் விறுவிறுப்பாகக் கொடுத்த வகையில் இயக்குநர் சி அரவிந்த்ராஜ் கவனிக்கத் தக்கக இயக்குநராகிவிட்டார். மொத்தத்தில் ‘பரம்பொருள்’ பரபரப்பான விறுவிறுப்பான படம்.