பிரபுதேவா ,மடோனா செபாஸ்டியன், அபிராமி,ஒய். ஜி .மகேந்திரன்,எம் .எஸ் . பாஸ்கர், யோகிபாபு,மதுசூதன் ராவ் , யாஷிகா ஆனந்த்,ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர்,சுரேஷ் சக்கரவர்த்தி,
சாய் தீனா, சாம்ஸ், அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,(முல்லை) கோதண்டம், ஷக்தி சிதம்பரம் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.இசை -அஸ்வின் விநாயகமூர்த்தி. ஒளிப்பதிவு கணேஷ் சந்திரா, எடிட்டிங் ராமர்.டிரான்ஸ் இந்தியா மீடியா அண்ட் என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது.
மார்ட்டின் லூதர் கிங் எனப்படும் பாதிரியாரான யோகி பாபுவுடன் கதாநாயகியான பவானி பாத்திரத்தில் வரும் மடோனா செபஸ்டியன் தனது முன் கதையைச் சொல்வதாகப் படம் தொடங்குகிறது.
தென்காசி மாவட்டத்தில் மெய்ஞானபுரம் என்ற ஊரில் வெள்ளைக்காரன் கேட்டரிங் என்ற பெயரில் கேட்டரிங் வைத்து நடத்துகிறார் ஒய். ஜி. மகேந்திரன்.
அவருக்கு நான்கு பேத்திகள் அவர்களில் ஒருவர் தான் பவானி.மகேந்திரன் தனது கேட்டரிங் மூலம்அரசியல் கட்சிக் கூட்டத்திற்குப் பிரியாணி சப்ளை செய்ததில் பல லட்ச ரூபாய் ஏமாற்றப்படுகிறார். அதனால் வந்த மோதலில் அவர் அரசியல்வாதி மதுசூதனால் தாக்கப்படுகிறார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.
பேத்திகள் இது சம்பந்தமாக முறையிட்டு நீதி கேட்கலாம் என்று வழக்கறிஞர் பூங்குன்றனை அதாவது பிரபுதேவாவைச் சந்திக்க செல்கிறார்கள் .ஆனால் அங்கே அவர் இறந்த நிலையில் இருக்கிறார். அவர் பெயரில் 10 கோடி ரூபாய் இருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பணத்தைக் கைப்பற்ற திட்டம் போடுகிறார்கள். அதனால் பிரபுதேவாவின் பிணத்தைக் கைப்பற்றி இடம் மாறி எடுத்துச் செல்கிறார்கள்.
கந்து வட்டிக்காரர்கள், கொலைகார அடியாட்கள், ஜாதி வெறி போலீசார், கண்டிப்பான வங்கி அதிகாரி ஆகியோரிடம் இருந்து தப்பித்து அந்தப் பிணத்தை வைத்து 10 கோடி ரூபாய் பணத்தை எடுத்து கடன்களை அடைத்து அபாய கட்டத்தில் இருக்கும் தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளித்து சமாளிக்க வேண்டும் என்று அந்த நான்கு பெண்கள் போராடும் போராட்டம் தான் படம்.
படத்தில் வழக்கறிஞர் பூங்குன்றனாக பிரபுதேவா வருகிறார்.நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் ஏழைகளுக்காகவும் வாதாடும் ஒருவராக அவர் இருக்கிறார். ஆனால் அவர் வந்து சில காட்சிகளிலேயே அவரைக் கொன்று விடுகிறார்கள். அதற்குப் பிறகு அந்தப் பிணத்தைத் தூக்கிக் கொண்டு இந்த நான்கு பெண்களும் இடம் மாறி வாகனங்கள் மாறி ஊர் மாறிச்செல்லும் பயணத்தில் அவர் முக்கால்வாசிப் படத்தில் பிணமாகவே நடித்துள்ளார்.
இது சீரியசான கதை என்றால் பிரபுதேவா நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார் என்று சொல்லலாம் .ஆனால் அவர் பிணமாக நடித்திருப்பது ஒரு முழு நீள நகைச்சுவைப் படமாக இருப்பதால் அவரது நடிப்பு நாடகம் போல் கடந்து போக வைக்கிறது.ஆனாலும் அசைவுகள் இல்லாத உடல் மொழியில் மனிதர் நடிப்பில் பட்டையைக் கிளப்பி உள்ளார்.
ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்தைச் சேர்ந்த அபிராமி, மடோனா சபாஸ்டின் மற்றும் இரண்டு பெண்களும் படம் முழுக்கப் பயணம் செய்வதால் படத்தில் தங்கள் திரைத் தோற்றத்தால் திருப்தி தருகிறார்கள். எனவே, குளுகுளுப்புக்குப் பஞ்சமில்லை.
அரசியல்வாதி அடைக்கல ராஜீவாக வரும் மதுசூதன் ராவ் அடித்து விளையாடியுள்ளார்.அரசியல் கட்சி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முதல்வராக வருகிறார்.
படத்தில் வங்கி மேனேஜராக இயக்குநர் ஷக்தி சிதம்பரமே வருகிறார். தன்னால் முடிந்த அளவிற்கு அவரும் சிரிக்க வைத்துள்ளார்.
கதை கேட்கும் மார்ட்டின் பாதிரியாராக வரும் யோகி பாபு வழக்கம் போல தனது வாய்ச்சவடால் நையாண்டிகளால் கிச்சு கிச்சுமூட்டுகிறார்.
இடையில் குத்துப் பாட்டு சோகப்பாட்டு எல்லாமே உள்ளன .எல்லாமே முழுக்க முழுக்க மசாலாத்தனத்துடன் உள்ளன.சில இருபொருள் வசனங்கள் எல்லை மீறியும் உள்ளன.இருபொருள் தன்மையுடன் ‘போலீஸ்காரனை கட்டிக்கிட்டா’ என ஒரு பாடலே உள்ளது.
இது முழுக்க முழுக்க சிரிக்க வைப்பதற்காகத்தான் என்பதை முழுமூச்சாகக் கொண்டு இயக்குநர் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். எனவே கேள்விகள் கேட்க வேண்டாம் லாஜிக் வேண்டாம் என்று படம் பார்க்கும்போதே நம் மனம் தயாராகி விடுகிறது. ஆனாலும் கலகலப்பான காட்சிகள் என்கிற பெயரில் சில நாடகத்தனங்களைத் தவிர்த்து இருக்கலாம்.
திரையரங்கில் சென்று பார்க்கப் பொழுதுபோக்கு நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வணிகப்பட ரசிகர்களுக்குப் பிடிக்கும்.