ஜெயராம் ,ஊர்வசி, யோகிபாபு ,
சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில் குமார்,ஜி கே எம் தமிழ் குமரன், மிஷ்கின் ,சிங்கம் புலி, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாண்டிராஜ் எழுதி இயக்கியிருக்கிறார் . ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபாக்ஸன்
இசை அமைத்துள்ளார்.பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ், தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ், பசங்க புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
ஜெயராம் ஊர்வசி தம்பதிகள் நடுத்தர வர்க்கத்தினர். அவர்களுக்கு இரண்டு பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். மூத்த மகள் சஞ்சனா நவ யுக நாயகியாக யாருக்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவராக இருக்கிறார்.
இளைய மகள் அனந்திகாவை சாண்டி காதலிப்பதாக கூறி முரட்டுத்தனம் காட்டுகிறார்.அவர் ஒரு போதை மருந்து விற்பனை செய்பவர்.
உங்கள் பெண்ணைத்தான் காதலிக்கிறேன் என்று தந்தை ஜெயராமிடமே கூறுகிறார்.இதை எண்ணி குடும்பம் பயந்து கொண்டிருக்கிறது.
திடீரென்று ஒரு நாள் சாண்டி கொலை செய்யப்படுகிறார்.
சந்தர்ப்ப சாட்சியங்கள் ஜெயராம் குடும்பத்தினர் மீது சந்தேகப்படுவதால் பயந்து போயிருக்கிறார்கள்.
நான்கு பேருமே சாண்டியை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று நினைத்தது நிஜம் . ஆனால் கொலை செய்யும் அளவிற்கு யாரும் துணிவுடன் இல்லை. ஜெயராம் குடும்பத்து உறவுகளான சிங்கம் புலியும் பகவதி பெருமாளும் ஒரு பக்கம் சாண்டிக்கு எதிராக இறங்குகிறார்கள். ஜெயராம் குடும்பத்துக்குள் அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் சாண்டியின் அம்மாவும் கொலை செய்யப் படுகிறார். இதற்குப் பிறகு எப்படிப் பார்த்தாலும் கொலைக்குத் தொடர்பான சம்பந்தம் உள்ளது போல் ஆதாரம் உள்ளது போல் சந்தர்ப்பங்கள் அமைகின்றன .இதனால் அந்தக் குடும்பம் அச்சத்தில் தவிக்கிறது. போலீஸ் வருகிறது விசாரணை நடக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?
யார் கொலை செய்தார்கள்? அந்தக் குடும்பம் அந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்கிறது போராடுகிறது என்பதுதான் 138.18 நிமிடங்கள் கொண்ட’ பரிமளா & கோ’ படத்தின் மீதிக் கதை.
படத்தில் பரிமளா என்பது ஜெயராம் நடித்த பாத்திரத்தின் பெயர் தான். மிகவும் சிக்கன வாதியாகவும் எதற்கெடுத்தாலும் கணக்கு பார்ப்பவராகவும் அந்த நடுத்தர வர்க்கத்தின் மனநிலையில் இருக்கிற அவரது பாத்திரம் ரசிக்க வைக்கிறது .தேர்ந்த நடிப்பை ஒவ்வொரு அசைவிலும் காட்டி இருக்கிறார் ஜெயராம்.
சுதந்திரம் என்கிற பெயரில் சுதந்திரமே இல்லாமல் வீடு, கிச்சன் என்று காலத்தை ஓட்டும் பாத்திரம் அப்பாவித்தனமாகத் தோன்றினாலும் அவ்வப்பபோது பேசும்போதும் போலீஸ் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் ஊர்வசி தனது அப்பாவித்தனத்துடன் வெளிப்படுத்தும் வசனங்களும் உணர்ச்சிகளும் திரையரங்கில் சிரிப்பலைகள் வர வைப்பவை. அவர் தனது அனுபவ மிக்க நடிப்பை அலட்டல் இல்லாமல் நடித்து வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு மகள்களாக நடித்திருக்கும் சஞ்சனா, அனந்திகா இருவருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்திருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்பெருமான் பாத்திரத்தில் வரும் மிஸ்கின் வழக்கமான சினிமா போலீஸ் மாதிரி இல்லாமல் எப்படி இவர் என்று கணிக்க முடியாத குணச்சித்திரம் கொண்ட அந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஜெயராம் வீட்டு முதலாளியாக யோகி பாபு நடித்திருக்கிறார். அனைத்து பாத்திரங்களுமே சிரிக்க வைப்பதால் யோகி பாபு நடித்திருக்கும் பாத்திரம் ஒரு பாத்திரமாகவே வந்து போகிறது.
வாழ்க்கையில் மகிழ்ச்சி நகைச்சுவை என்பது வலிந்து செய்யக்கூடியது அல்ல அவரவர் வெளிப்படுத்தும் உணர்வுகளே அடுத்தவரைச் சிரிக்க வைக்கும் .அப்படி சிரமமான நேரத்தில் கூட பாத்திரங்களின் அசைவுகளும் நகர்வுகளும் பார்வையாளர்களைச் சிரிக்க வைக்கின்றன.
ஒரு குடும்பக் கதை அதில் ஒரு திரில்லர் சம்பவங்கள் நுழையும்போது ஏற்படும் மாற்றங்களை அழகாக படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ்.ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே கதை சுழல்வதால் பெரிதாகப் பின்புல பிரம்மாண்டங்கள் தேவைப்படவில்லை.
பின்னணியிசையில் தான் இடம் பிடிக்கிறார் இசையமைப்பாளர் ஃபாக்ஸன்.
மொத்தத்தில் இந்தப் படம் கலகலப்பான குடும்பத்துடன் பார்க்கும் படியான பொழுதுபோக்குப் படமாக இருக்கிறது. இந்த பொழுது போக்குக்குள் போதை மருந்து இளைஞர்கள் திசை மாறுவது பெற்றோர் பிள்ளைகளின் மீது கவனப்படுத்துவது போன்றவற்றை ஆங்கங்கே தூவிச் செல்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
அலங்காரங்கள் பின்புலங்கள் ஜோடனைகள் எதுவும் இல்லாமல் பாத்திரங்களை ரசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிற அவரது சாமர்த்தியம் பாராட்டக்கூடியது.
போதை மருந்துக்கு எதிராக பேச நினைக்கும் அவர் வீட்டுக்குள்ளேயே அனந்திகா மது அருந்துவது போன்ற காட்சிகளை வைத்து அதை சகஜப்படுத்த நினைப்பது சரியல்ல.
வணிகரீதியான படங்களை இயக்குவதில்
தான் ஒரு
கெட்டிக்காரர் என்பதை பாண்டிராஜ் இப்படத்திலும் நிரூபித்துள்ளார்.




